மேலும்

விவசாயப் பண்ணைக் காணிகளை விடுவிக்க சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நிபந்தனை

defence meeting (4)கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள விவசாயப் பண்ணைக் காணிகளை சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து, வடக்கு மாகாணசபையிடம் கையளிப்பதற்கு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடத்தப்பட்ட கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி ஆகியோரின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், முப்படைகளின் தளபதிகள், காவல்துறை அதிகாரிகள், சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி, வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 11 ஆயிரம் ஏக்கர் விவசாயப் பண்ணைக் காணிகளை விடுவித்து, வடக்கு மாகாணசபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது.

defence meeting (4)

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 11 ஆயிரம் ஏக்கர் விவசாயப் பண்ணைக் காணிகளையும் விடுவிப்பதற்குத் தயார் என்று தெரிவித்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, அதற்கு வடக்கு மாகாணசபையிடம் நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார்.

விவசாயப் பண்ணைக் காணிகளில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த 11 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு மாதாந்த ஊதியத்தை வழங்கி வருகிறது. இந்தப் பணியாளர்களுக்கான ஊதியத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமானால், பண்ணைக் காணிகளை வடக்கு மாகாண சபையிடம் ஒப்படைக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார்.

பண்ணைகளில் பணியாற்றுவோருக்கு மாதம் தோறும், 35 ஆயிரம் ரூபா கொடுப்பனவை சிவில் பாதுகாப்பு திணைக்களம் வழங்கி வருகிறது. 11 ஆயிரம் பேருக்கு வடக்கு மாகாணசபை 35 ஆயிரம் ரூபா ஊதியத்தை வழங்க முடியாது என்பதைக் கருத்தில் கொண்டே சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இந்த நிபந்தனையை விதித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *