மேலும்

போரின் இறுதியில் கைப்பற்றப்பட்ட 37.7 கிலோ தங்கத்தை உரிமையாளர்களிடம் மீளளிக்க நடவடிக்கை

goldபோரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்தும், கைவிடப்பட்ட வீடுகளில் இருந்தும் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்ட 1 பில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் ஏ னைய பெறுமதிமிக்க ஆபரணங்களை, அவற்றின் உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்த சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர் சரத்குமார, “இதுதொடர்பாக நியமிக்கப்பட்ட குழு தமது பரிந்துரைகளை சிறிலங்கா அதிபரிடம் அண்மையில் சமர்ப்பித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிப்பதற்காக, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய உயர்மட்டக் கூட்டம் ஒன்று அடுத்தவாரம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், சிறிலங்கா மத்திய வங்கியிடம் கொழும்பு ஆங்கில நாளிதழ் எழுப்பிய கேள்விக்கு வழங்கப்பட்டுள்ள பதிலில், போரின் முடிவில் கைப்பற்றப்பட்டதாக ஒப்படைக்கப்பட்ட 37.7 கிலோ (37,708.472 கிராம்) தங்கம் தமது பாதுகாப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்தினரிடம் இருந்து இந்த தங்கம் பெற்றுக் கொள்ளப்பட்டது. 2010 செப்ரெம்பர் 7ஆம் நாளுக்கும், 2012 ஜனவரி 26ஆம் நாளுக்கும் இடையில், 28 சந்தர்ப்பங்களில், தங்க நகைகளைக் கொண்ட பொதிகளை சிறிலங்கா இராணுவம் ஒப்படைத்தது. இவற்றின் பெறுமதி 1 பில்லியன் ரூபாவாகும்.

சிறிலங்கா மத்திய வங்கியிடம் கையளிக்கப்படுவதற்கு முன்னர் இந்த தங்க நகைகள் அனைத்தும், தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையினால் எடை போடப்பட்டு விலைமதிப்பீடு செய்யப்பட்டது.

இவற்றைப் பொறுப்பேற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும், இராணுவத்தினர் மற்றும் உள்ளக கணக்காய்வாளர்களின் முன்பாக, ஒவ்வொரு நகைப் பொதியாக எடைபோடப்பட்டு, அந்தப் பொதியில் நகைகள் உள்ளதை உறுதிப்படுத்திப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டும் இராணுவத்திடம் வழங்கப்பட்டது.” என்றும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதேவேளை, கடந்த ஆண்டு சிறிலங்கா இராணுவம் தங்கப் பொருட்களைக் கொண்ட 6003.132  கிராம் எடையுள்ள இன்னொரு பொதியை சிறிலங்கா இராணுவம் கையளித்தது என்பதையும் சிறிலங்கா மத்திய வங்கி ஒப்புக் கொண்டுள்ளது.

இவை, மத்திய வங்கியிடம் கையளிக்கப்படுவதற்கு முன்னர் , தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையினால் எடை போடப்படவோ, மதிப்பீடு செய்யப்படவோ இல்லை.

இந்தப் பொதிகளை ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் சிறிலங்கா மத்திய வங்கியினால் பரிசோதிக்கப்படவில்லை. தங்கம் உள்ள இந்தப் பொதிகள் இன்னமும் சிறிலங்கா மத்திய வங்கியின் பராமரிப்பில் தான் உள்ளன. என்றும் சிறிலங்கா மத்திய வழங்கி தெரிவித்துள்ளது.

அதேவேளை, சிறிலங்கா இராணுவம் இன்னமும் கணிசமானளவு தங்கம் மற்றும் பெறுமதிமிக்க ஆபரணங்களை தனது பாதுகாப்பில் வைத்துள்ளது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர் சரத் குமார கூறினார்.

அதேவேளை, சில தங்க நகைகள் தமக்குச் சொந்தமானது என்று மக்கள் வங்கி, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கு தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டு முன்னைய அரசாங்கம், போரின் இறுதிக்கட்டத்தில் மீட்கப்பட்ட தங்கம் மற்றும் ஆபரணங்களை அவற்றின் உண்மையான உரிமையாளர்களை அடையாளம் கண்டு மீளக் கையளிக்கப் போவதாக அறிவித்திருந்தது.

விடுதலைப் புலிகளின் வங்கியில் தமது நகைகளை அடகு வைத்த 2377 நகை உரிமையாளர்களையும் சிறிலங்கா அரசாங்கம் அடையாளம் கண்டிருந்தது.

அவர்களில் 25 பேருக்கான நகைகள் அலரி மாளிகையில் வைத்து ஒப்படைக்கப்பட்டன. அதற்குப் பின்னர் நகைகளை மீளளிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *