மேலும்

நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் – 180 ஆவது இடத்தில் சிறிலங்கா

parliamentதெற்காசிய நாடாளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருப்பது சிறிலங்கா நாடாளுமன்றத்திலேயே என்று நாடாளுமன்ற ஒன்றியம் வெளியிட்டுள்ள தரவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

தெற்காசியாவில், நாடாளுமன்றத்தில் அதிகளவு பெண்கள் இடம்பெற்றுள்ளது நேபாளத்தில் ஆகும்.

அதையடுத்து, ஆப்கானிஸ்தான் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும், பங்களாதேஷ் நான்காவது இடத்திலும், இந்தியா ஐந்தாமிடத்திலும், பூட்டான் ஆறாமிடத்திலும், மாலைதீவு ஏழாமிடத்திலும், சிறிலங்கா எட்டாமிடத்திலும் உள்ளன.

அனைத்துலக அளவில், மொத்தம் 190 நாடுகளில் நேபாளம் 48, ஆப்கானிஸ்தான் 54, பாகிஸ்தான் 70, பங்களாதேஷ் 91, இந்தியா 148, பூட்டான் 170, மாலைதீவு 178, சிறிலங்கா 180 ஆவது இடங்களில் உள்ளதாக, நாடாளுமன்ற ஒன்றியம் வெளியிட்டுள்ள “அரசியலில் பெண்கள் – 2017 வரைபடம்” என்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிறிலங்காவின் அரசியல் கட்சிகள் தமது தேர்தல் அறிக்கைகளில் பால்நிலை சமத்துவக் கொள்கையை வெளிப்படுத்தியிருந்தாலும், 2015 நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் நிறுத்திய 6151 வேட்பாளர்களில், 556 பேர் மாத்திரமே பெண்கள் என்று கூறப்பட்டுள்ளது. இது மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கையில் 9 வீதம் மட்டுமேயாகும்.

தற்போது 225 உறுப்பினர்களைக் கொண்ட சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 13 பெண் பிரதிநிதிகள் மாத்திரம் இடம்பெற்றுள்ளனர்.

சிறிலங்காவில் மாகாண சபைகளில், 4.1 வீதம் மாத்திரமே பெண் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.

அதேவேளை பங்களாதேசில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் ஆகியோர் பெண்களாகவே உள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்ட ஆபிரிக்க நாடான ருவான்டா, உயர்பதவிகளைப்  பெண்கள் வகிக்கும் முன்மாதிரி நாடாக மாறியுள்ளது. ருவாண்டா நாடாளுமன்றத்தில் பெண்களே 60 வீதமாக உள்ளனர். அங்கு நடந்த உள்நாட்டுப் போரில் ஆண்கள் கொல்லப்பட்ட பின்னர், பெண்கள் அரசியலில் ஈடுபடுவது அதிகரித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *