மேலும்

22 மேஜர் ஜெனரல்களின் கனவைப் பொசுக்கிய சிறிலங்கா இராணுவத் தளபதி

Chrisanthe de Silvaசிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா மூன்றாவது தடவையும் தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கான கோரிக்கையை, சிறிலங்கா அதிபரிடம் விடுத்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் தற்போதைய பதவிக்காலம் வரும் ஓகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

2015 ஓகஸ்ட் 21 ஆம் நாள், 55 வயதை எட்டிய அவர், ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால், முதலில் அவருக்கு ஆறு மாதங்களும்,  பின்னர், ஒன்றரை ஆண்டுகளும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டது.

இவருக்கு மீண்டும் ஆறு மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டால், மூன்றாவது சேவை நீடிப்பை பெற்ற இராணுவத் தளபதியாக இவர் விளங்குவார்.

அதேவேளை, இராணுவத் தளபதி பதவியை குறிவைத்திருக்கும் பல மூத்த மேஜர் ஜெனரல்களின் கனவு, இதனால் நொருங்கிப் போகும்.

இவர்களில் மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா முக்கியமானவர். இவர் வரும் டிசெம்பர் 03ஆம் நாள் ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்படும். இவரையடுத்து. மேஜர் ஜெனரல்கள் சுதந்த ரணசிங்க, ரேனக உடவத்த, ஆர்.இரத்தினசிங்கம், பி.மிகுந்துகுலசூரிய ஆகியோரும் ஓய்வு பெற வேண்டியிருக்கும்.

karunasena-hettiarachi-army hq (4)

இவர்களைத் தொடர்ந்து, 2018 மார்ச் 13ஆம் நாள் முன்னாள் இராணுவப் புலனாய்வு பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகரவும், ஓய்வு பெற நேரிடும்.

இராணுவத் தளபதியாக நியமிக்கப்படாது போனால், மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவும், வரும் ஓகஸ்ட் 18 ஆம் நாள் ஓய்வுபெற வேண்டியிருக்கும்.

இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் இரண்டாவது பதவி நீடிப்புக் காலத்தில், இராணுவத்தில் இருந்து 22 மேஜர் ஜெனரல்கள் ஓய்வு பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே,  கூட்டுப்படைகளின் தளபதியாக உள்ள உயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலக வரும் ஜூலை 16ஆம் நாள் ஓய்வு பெறவுள்ள நிலையில், முப்படைகளின் தளபதிகளும் அந்தப் பதவியின் மீது குறிவைத்துள்ளனர்.

கூட்டுப்படைகளின் தளபதி பதவி, இராணுவத் தளபதியாக உள்ள லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு வழங்கப்பட்டால், அடுத்த இராணுவத தளபதியாகும் வாய்ப்பு மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்குக் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *