மேலும்

இந்தியாவுடன் பொருளாதார கூட்டு உடன்பாடு – ரணிலின் புதுடெல்லி பயணத்தில் கைச்சாத்து

India-srilanka-Flagசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, பொருளாதார கூட்டு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள்ளார் என்று பிஸ்னஸ் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவுடன் எட்கா எனப்படும் பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டை செய்து கொள்வதற்கு சிறிலங்காவில் உள்ளூர் நிபுணர்கள் மற்றும் வர்த்தக துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே எட்காவுக்கு முன்னதாக, இந்தியாவுடன் பொருளாதார கூட்டு தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றை செய்து கொள்ள சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

சிறிலங்காவின் தெற்கு மற்றும் கிழக்கில் இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்க அடையாளம் காணப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்படவுள்ளதாக,  அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு தொடக்கம் நான்கு ஆண்டுகளில் இந்தியாவிடம் இருந்து 2 பில்லியன் டொலர் முதலீடுகளை சிறிலங்கா எதிர்பார்க்கிறது.

இந்திய முதலீட்டாளர்களுக்காக சிறப்பு கைத்தொழில் வலயங்களை அமைப்பதற்கு திருகோணமலையிலும், வெலிகமவிலும் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த புதிய புரிந்துணர்வு உடன்பாட்டில், இயற்கை எரிவாயு மின் திட்டம், நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுக அபிவிருத்தி, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை என்பனவற்றை அமைப்பது உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுப்பது பற்றிய விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளன.

அதேவேளை, எட்கா உடன்பாடு தொடர்பான நான்காவது கட்டப் பேச்சுக்கள், புதுடெல்லியில் இந்த மாதம் இடம்பெறவுள்ளன.  கடந்த ஜனவரி 4, 5ஆம் நாள்களில் கொழும்பில் நடந்த 3 ஆவது கட்டப் பேச்சுக்கள் முடிவுகளை எட்டாமல் நிறைவடைந்திருந்தன.

கடந்த ஆண்டு இந்த உடன்பாட்டை செய்து கொள்வதற்கு இரண்டு நாடுகளும் ஏற்கனவே இணங்கியிருந்தன. எனினும் உடன்பாட்டை இறுதி செய்வதில் இன்னமும் இணக்கம் ஏற்படாததால், உடன்பாடு கையெழுத்திடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *