மேலும்

கடற்படைத் தலைமையகத்தில் தேடுதல் நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிவான் உத்தரவு

gavelகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான, கடற்படை அதிகாரியைக் கைது செய்வதற்கு சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் தேடுதல் நடத்துமாறு, கோட்டே நீதிவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

11 பேர். கடத்தல் தொடர்பான வழக்கு கோட்டே நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது,  இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கொமாண்டர்  ரணசிங்க, லக்ஸ்மன் உதய குமார ஆகியோரும், பிணையில் விடுவிக்கப்பட்ட முதலாவது சந்தேக நபரான லெப். கொமாண்டர் சம்பத் முனசிங்கவும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட வேண்டிய சந்தேக நபரான லெப். கொமாண்டர் பிரசாத் ஹெற்றியாராச்சியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம்  நீதிவான் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, குற்றப் புலனாய்வுப் பிரிவினர், பதிலளிக்கையில், அவரைக் கைது செய்ய நாம் முயற்சிகளை எடுத்தோம். அவரைத் தேடி வீட்டுக்கு சென்றபோது, அவர் அங்கு இல்லை.

அவரது மனைவியிடம் இது தொடர்பில் விசாரணை செய்தோம்.  அவர் கடற்படை தலைமையகத்தில் இருப்பதாகவும், கடமையில் இருப்பதால் மூன்று முறை தான் கடற்படை தலைமையகம் சென்று அவரை சந்தித்து வந்ததாகவும் மனைவி தெரிவித்தார்.

கடற்படைத் தலைமையகத்திலேயே அவர் இருப்பதாக தகவல் உள்ளது. எனவே அந்த தகவலுக்கு அமைய அவரைக் கைது செய்ய கடற்படைத்  தளபதி, பாதுகாப்புச் செயலர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குற்றப் புலனாய்வுப் பிரிவு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிவான் ஏன் அங்கு சென்று அவரைக் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.

அதற்கு கடற்படை முகாமுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி குறிப்பிட்டார்.

இதனையடுத்து,  லெப். கொமாண்டர் பிரசாத் ஹெற்றியாராச்சியை கண்ட இடத்தில் கைது செய்ய உத்தரவிட்ட நீதிவான், கடற்படை தலைமையகத்தில் அவர் இருப்பதாக தகவல் இருப்பின் உடனடியாக கடற்படை தலைமையகத்தில் தேடுதல் நடத்தி அவரைக் கைது செய்யுமாறும், அங்கு செல்லும் போது அனுமதி தொடர்பில் சிக்கல் ஏற்படின் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ஊடாக அது தொடர்பில் கலந்தாலோசனை செய்யுமாறும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *