மேலும்

இந்திய அமைதிப்படையின் மீறல்களை இந்தியாவிடம் கொண்டு செல்வோம் – அனைத்துலக மன்னிப்புச்சபை

??????????????????சிறிலங்காவில் தங்கியிருந்த போது, ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் இந்திய அமைதிப்படையினர் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டால், அதுகுறித்து இந்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அனைத்துலக மன்னிப்புச்சபையின் பொதுச்செயலர் சலில் ஷெட்டி கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

சிறிலங்காவில் தங்கியிருந்த 1987இற்கும் 1990இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு இந்திய அமைதிப்படையினர் பொறுப்பாக இருந்தால் அதுகுறித்து இந்திய அரசாங்கத்திடம் அனைத்துலக மன்னிப்புச்சபை எடுத்துச் செல்லும்.

முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு, என்ன நடந்தது, யார் பொறுப்பு என்று கண்டறியப்பட வேண்டும். விசாரணையில் இந்திய அமைதிப்படையினர் குற்றம்காணப்பட்டால், நிச்சயமாக அந்த விடயத்தை நாம் இந்திய அரசாங்கத்திடம் கொண்டு செல்வோம்.

அதேவேளை, சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மரணங்கள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக சிறிலங்கா வாக்குறுதி அளித்துள்ளது. அந்த தீர்மானம், வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத்தொடுனர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்கிய நம்பகமான விசாரணையை வலியுறுத்தியிருந்தது.

சிறிலங்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மனித உரிமைகள் நிலையில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும், சிறிலங்கா அரசாங்கம் மனித உரிமைகள் தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், கடந்தகால மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதாக சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதி அளித்திருக்கிறது. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்காவுக்கு நேரம் கடந்து கொண்டிருக்கிறது.

பொறுப்புக்கூறல் செயல்முறைகள் தொடர்பான காலஅட்டவணை ஒன்றை சிறிலங்கா வெளியிட வேண்டும்.

சிறிலங்கா பிரதமரைச் சந்தித்த போது இதனை வலியுறுத்தியிருந்தேன். அதனைச் செய்யலாம் என்று அவர் உறுதியளித்தார்.

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகள் முழுமையாகவும், தெளிவாகவும் உள்ளன. அதனைப் புறக்கணிப்பதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபையின் பொதுச்செயலர் சலில் ஷெட்டி, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்திருந்தார்.

அத்துடன் இந்தப் பயணத்தின் போது அவர் சிறிலங்கா பிரதமர ரணில் விக்கிரமசிங்க, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் மனோ கணேசன் உள்ளிட்டோரையும் அவர் சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *