மேலும்

வட்டி வீதங்களால் முட்டிக் கொள்ளும் சீனாவும் சிறிலங்காவும்

Srilanka-chinaஅனைத்துலக சமூகமானது அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பின் அதிர்ச்சிகரமான வெற்றி தொடர்பாக கவனம் செலுத்திய அதேவேளையில், பிறிதொரு அதிகாரத்துவ நாடான சீனா, சிறிய நாடான சிறிலங்காவுடன் நிதி தொடர்பாக முரண்பட்டுள்ளது.

அதாவது சிறிலங்கா அரசாங்கத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடன் தொகைக்கு அதிகவட்டி அறவிடப்படுவதாகக் குற்றம் சுமத்தியதை அடுத்தே சீனா, சிறிலங்காவுடன் முரண்பட்டுள்ளது.

ரவி கருணாநாயக்க உட்பட சிறிலங்கா அரசாங்கத்தைச் சேர்ந்த பலர் சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடன் அதிக வட்டியைக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக சீனத் தூதுவர் ஜி ஷியான்லியாங் ஊடக மாநாடு ஒன்றில் அறிவித்ததையடுத்தே சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் சீனத் தூதுவர் ஜி ஷியான்லியாங்  ஆகியோருக்கிடையில் சொற்போர் ஆரம்பித்தது.

‘சிறிலங்கா அமைச்சர்கள் சிலர் எமது கடன் அதிக வட்டியைக் கொண்டது எனக் கூறுகின்றனர். இது பொய்யான தகவலாகும்’ என சீனத் தூதுவர் தெரிவித்தார். ஏற்கனவே சீனாவின் வட்டி அதிகமானது எனக் கருதினால் ஏன் சிறிலங்கா மேலும் மேலும் சீனாவிடமிருந்து கடனைப் பெறுகிறது என சீனத் தூதுவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

சிறிலங்காவை சீனா தனது ‘நட்பு நாடாகக்’ கருதுவதாகவும் அதன் காரணமாகவே ஏனைய நாடுகள் சிறிலங்காவிற்கு கடன் வழங்குவதை விட சிறந்த வட்டியில் சீனா, சிறிலங்காவிற்குக் கடன் வழங்குவதாகவும் சீனத் தூதுவர் தெரிவித்தார். ‘சிறிலங்கா போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு இரண்டு சதவீத வட்டியில் நாங்கள் கடனை வழங்குகிறோம். பெரும்பாலான நாடுகள் 5 வீத வட்டியுடன் கடனை வழங்குகின்றன’ எனவும் சீனத் தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.

‘சிறிலங்கா வாழ் மக்களும் அரசாங்கமும் சீனாவிடம் நன்றி பாராட்ட வேண்டும். கடந்த ஆண்டு சிறிலங்காவால் சீனாவால் வழங்கப்பட்ட 2 சதவீத வட்டிக் கடனுக்கு எதிராக ஐரோப்பாவிடமிருந்து 5.8 சதவீத வட்டிக்குக் கடன் பெறப்பட்டது’ எனவும் சீனத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

சிறிலங்காவிற்கு சீனாவால் 5 சதவீத வட்டிக்கே கடன் வழங்கப்பட்டதாக அமைச்சர் கருணாநாயக்க பதிலளித்தார். ‘அபிவிருத்திக் கடன்கள் வழமையாக 2 சதவீத வட்டிக்கே வழங்கப்படுகிறது. இதேபோன்று வர்த்தக சார் கடன்கள் 6-8 சதவீதங்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் சீனாவால் சிறிலங்காவிற்கு வழங்கப்பட்ட அபிவிருத்திக் கடன்கள் ஐந்து சதவீதமாகும்.

ஆனால் அதேவேளையில் அனைத்துலக கடன் வழங்கும் நிறுவனங்களால் சிறிலங்காவிற்கு இரண்டு சதவீதத்திற்கும் குறைவான வட்டிக்கே கடன் வழங்கப்படுகிறது’ என அமைச்சர் கருணாநாயக்க தெரிவித்தார்.

சிறிலங்கா போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு சீனாவால் இரண்டு சதவீத வட்டிக்குக் கடன் வழங்கப்படுவதாக சீனத் தூதுவர் தெரிவித்துள்ளதால், சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடனிற்கு தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் இரண்டு சதவீத வட்டியை வழங்க முடியும் என்பது மகிழ்ச்சியான ஒரு விடயமாகும் எனவும் கருணாநாயக்க தெரிவித்தார்.

‘சீனாவால் எமக்கு இரண்டு சதவீத வட்டிக்கே கடன் வழங்கப்பட்டால், அதே இரண்டு சதவீத வட்டிக்கே நாமும் அதனைத் திருப்பிக் கொடுக்கத் தயாராக உள்ளோம். ஆனால், நான் சீனத் தூதுவரின் கருத்தை நிராகரிக்கிறேன். ஏனெனில் நாங்கள் சீனாவிடமிருந்து கடன் வட்டியைக் குறைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்தோம். அதேவேளையில் எந்தவொரு ஐரோப்பிய நாட்டிலிருந்தும் எமது அரசாங்கம் கடனைப் பெறவில்லை’ என அமைச்சர் கருணாநாயக்க பதிலளித்தார்.

கருணாநாயக்க மற்றும் சீனத் தூதுவர் ஷியான்லியாங்கிற்கு இடையிலான வாக்குவாதம் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், இந்த விடயத்தில் சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சு தலையீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் வெளியுறவு அமைச்சின் செயலர் எசல வீரக்கோன், சீனத் தூதுவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதுடன் அமைச்சர் கருணாநாயக்கவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கவலை கொள்வதாகவும் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக இனிவருங் காலங்களில் ஏற்படும் எந்தவொரு விடயங்களையும் ஊடகங்களுக்குத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் சீனத் தூதுவரிடம் வீரக்கோன் கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலாக சிறிலங்கா அரசாங்கத்துடன் நேரடியாகத் தொடர்பைப் பேணுமாறும் வீரக்கோன் வேண்டுகோள் விடுத்தார்.

தனது தூதுவர் சிறிலங்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான நல்லுறவு தொடர்பில் ஏற்பட்ட தவறான புரிந்துணர்வு மற்றும் தவறான அறிக்கைகளைத் ‘தெளிவுபடுத்துவதற்காகவே’ இவ்வாறானதொரு அறிக்கையை வெளியிட்டதாகவும் சீன அரசாங்கம் அறிவித்தது.

அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்தது தொடக்கம், சீனாவுடனான உறவானது விரிசலடைந்திருந்தது. சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சீனாவால் சிறிலங்காவில் முன்னெடுக்கப்பட்ட 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ‘கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை’ ஊழல் மோசடி குற்றச்சாட்டின் பேரில் இடைநிறுத்தி வைத்தனர்.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டமானது முன்னாள் அதிபர் மகிந்தவின் திட்டமாகும். இவரது காலப்பகுதியில், இவ்விரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவு பேணப்பட்டது. குறிப்பாக இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சிறிலங்காவிற்கு சீனாவால் இராணுவ உதவிகள் வழங்கப்பட்டதன் பின்னர், சீனாவுடனான உறவு மேலும் நெருக்கமடைந்தது.

புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்டு, புலிகள் அமைப்பு போரில் தோற்கடிக்கப்பட்டு இறுதிக்கட்ட யுத்தமானது மகிந்த அரசாங்கத்தால் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் நாட்டில் இடம்பெற்ற பெரும்பாலான கட்டுமாணத் திட்டங்களுக்கு சீனாவே நிதியுதவி வழங்கியது.

எனினும், சீனாவிடமிருந்து வந்த அழுத்தமும், சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க ஆகியோர் ஏனைய நாடுகளிடமிருந்து தடைப்பட்ட சீனத் திட்டத்தைத் தொடர்ந்தும் மேற்கொள்வதற்கான நிதியைப் பெற்றுக் கொள்ள இடர்ப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான அனுமதி இவ்வாண்டின் நடுப்பகுதியில் சீனாவிற்கு வழங்கப்பட்டது. பழைய உடன்படிக்கையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, இத்திட்டமானது ‘கொழும்பு அனைத்துலக நிதி நகர்’ என்கின்ற புதிய பெயரில் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ராஜபக்ச அரசாங்கத்தால் பெறப்பட்ட பெருந்தொகைக் கடனால் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுப்பதாகக் கூறிவருகிறது. ராஜபக்ச அரசாங்கத்தால் பெறப்பட்ட கடனிற்காக 10 ரில்லியன் சிறிலங்கா ருபாவைத் தாம் செலுத்த வேண்டியுள்ளதாக இவ்வாண்டு நாடாளுமன்றில் பிரதமர் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ராஜபக்ச காலத்தில் சீனாவிடமிருந்து பெறப்பட்ட எட்டு பில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பாக சமரசம் செய்வதற்காக இவ்வாண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் விக்கிரமசிங்க சீனாவிற்குப் பயணம் செய்திருந்தார். ‘சீன நிறுவனங்கள் மற்றும் சீன அரசாங்கத்திடம் எமது நாட்டில் அரசாங்கமும் தனியாரும் இணைந்து மேற்கொள்ளக் கூடிய சில கட்டுமானத் திட்டங்களுக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக கதைத்து வருகிறோம். இதன்மூலம் சீனக் கடனின் ஒருபகுதியைச் சமப்படுத்த முடியும்’ என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

2015 முடிவில் சீனாவால் சிறிலங்காவில் 15.5 பில்லியன் டொலர் பெறுமதியில் விமானநிலையங்கள், துறைமுகங்கள், பெருந்தெருக்கள் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை ராஜபக்ச ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஆங்கில மூலம் – MUNZA MUSHTAQ
வழிமூலம்      – ASIA TIMES
மொழியாக்கம்   – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *