மேலும்

மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவுக்கு எதிராக இராணுவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை?

Maj.Gen_.Kamal-Gunaratneசிறிலங்கா இராணுவத்தில் இருந்து கடந்த செப்ரெம்பர் மாதம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவுக்கு எதிராக, இராணுவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமா என்று, சட்டமா அதிபரிடம், சிறிலங்கா அதிபர் செயலகம் அறிக்கை கோரியுள்ளது.

இது தொடர்பாக சிறிலங்கா அதிபருக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா அதிபர் செயலக அதிகாரி ஒருவர், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2007ஆம் ஆண்டின், 56 ஆம் இலக்க அனைத்துலக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் கீழும், மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்தும் ஆராய்ந்து பதிலளிக்குமாறும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரப்பட்டுள்ளது.

சமூகங்கள் மத்தியில், பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சதி நடவடிக்கையில் ஈடுபடுகிறார் என்று மேஜர் ஜெனரல் குணரத்னவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

காலியில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, வடக்கின் பாதுகாப்பு நிலவரங்கள் திருப்திகரமாக இல்லை என்று வெளியிட்ட கருத்து, தோற்கடிக்கப்பட்ட அரசியல்வாதிகளை இனவாதம் மூலம், மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வரும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கும் என்று இராணுவப் புலனாய்வுத்துறை நம்புகிறது.

1949ஆம் ஆண்டின் 17ஆவது இலக்க இராணுவச் சட்டத்தில், இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்று ஆறு மாதங்கள் வரை, இந்தச் சட்டம் இராணுவத்தினருக்குப் பொருத்தமானது என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *