மேலும்

காலத்திற்கு ஏற்ற ஆய்வு – லோகன் பரமசாமி

srilanka-contitutionஇதுவரையில் அரசியல் வரலாறு சார்ந்த தமிழ் மொழி புத்தகங்களை முன்பு ஒரு காலத்திலே மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட ரஷ்ய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டபுத்தகங்களுக்குப் பின்பு, மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்களின் புத்தகங்களை தவிர வேறு எவருடைய புத்தகங்களையும் வாசித்ததாக ஞாபகம் இல்லை.

அவருடைய புத்தகங்கள் பலவற்றை வாசித்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தனித்துவம் வாய்ந்தவை. அவை ஒவ்வொன்றும் குறித்த பொருள் தொடர்பாக தமிழ் மக்கள் எவ்வாறான பார்வையை கொண்டிருக்க வேண்டும் என்ற மனப்படத்தை கொடுக்கவல்லன.

இந்தவகையில். இறுதியாக வெளியிடப்பட்ட புத்தகம் “இலங்கை அரசியல் யாப்பு: டொனமூர் முதல் உத்தேச சிறீசேன யாப்பு வரை. “ இந்தபுத்தகம் அண்மையிலே ஈழதமிழ் மக்கள் அரசியல் சிந்தனையில் திடீர் தாக்கத்ததை உருவாக்கி இருந்தது. அதாவது இலங்கை அரசியலில் யாப்பும் அதன் பிண்ணணிகள் குறித்தும் ஒரு Brainstorm ஐ ஏற்படுத்தி இருந்தது.

இந்தப் புத்தகம் மு.திருநாவுக்கரசு அவர்களால் காலம் தெரிந்து வெளியிடப்பட்டது என்பது அந்த புத்தகத்தை பார்க்கும் பொழுதே வெளிப்படையாக தெரிகிறது. சுமார் ஒன்றரை நாளில் வாசித்து முடிக்கக் கூடிய வகையில் 117 பக்கங்களில் மட்டும் வெளிவந்திருப்பது பல காரணங்களின்  நிமித்தம் என்றுதான் எண்ணத் தோன்றகிறது. எம் போன்ற கல்விசார்பற்ற வாசகர்களுக்கும் இலங்கை அரசியல் யாப்பு குறித்த தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இந்த புத்தகத்தில் இருக்கிறது.

சுமார் பத்து புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டுள்ள ஆசிரியரின் ஆழ்ந்த அரசியல் வரலாற்று அறிவின் செழுமைக்கும் அனுபவத்திற்கும், மிகவிரிவான, குறைந்தது ஐநூறுபக்கங்களில் இலகுவாக எழுதி இருக்கக் கூடிய வளம் உள்ளது. ஆனால் சிறீலங்காவின் அரசியல் தந்திரோபாயங்களை வெளிப்படையாக எல்லாதரப்பினரும் புரிந்து கொள்ளதக்க வகையில் தக்க தருணத்தில் இது எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் ஆகியன, காரணமாக இலகுவான கல்விசார் மொழிநடையில் மிகவிரைவாக அந்த அந்த காலப்பகுதிகளுக்கு நேரடியாக இட்டு சென்று ஆய்கிறது..

இந்தவகையில் தமிழ் மக்களின் கடந்தகால வரலாற்றை அழித்து அடையாளங்களை இல்லாது ஒழிப்பதன் ஊடாக அவர்கள் மத்தியில் இருக்கும் நினைவுகளை கேளிக்கைகள், மது வகைகள்,போதை வஸ்துகள், மூலம் கலாச்சார சீரழிவுக்குள்ளாக்கி கெட்டுகுட்டிச்சுவராக்க எண்ணும் அரச அலகுகளுக்கு இத்தகைய புத்தகங்கள் மூலம் போராட்டத்தின் நியாயத்தை சிந்தனை மீட்சி மூலம் இறந்த காலங்களை பகுதி பகுதியாக காலத்தாலும் அக்காலத்தில் வாழ்ந்த தலைவர்களாலும் பிரித்து கொடுத்துள்ளது

அரசியல் வரலாற்றை ஆழமாக எடுத்தாயும் அதேவேளை ஈழத்தமிழ் மக்களின் மீதான புவிசார் அரசியலின் தாக்கம் குறித்த மிகதெளிவானதொரு குவியப்படுத்தப்பட்ட பார்வையாகவே இந்தப் புத்தகம் உள்ளது. புவிசார் அரசியல் தெளிவு இன்று பாமரர்களுக்கு மட்டுமல்லாது பலஅரசியல் தலைவர்களுக்கும் கூட தேவையானதாக உள்ளது.

இணையத்தளத்தில் காணக்கூடியதாக இருக்கின்ற உள்ளுர் அரசியல்வாதிகளின் பேச்சுகளில் இருந்து இந்த தேவையை அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.thiru-master-book

தன்னலம், தனது கட்சி நலன், என்பவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படக் கூடிய அரசியலாளர்கள்  எதிர்காலம் குறித்த தெளிவான பார்வை இல்லாது, தமது அடையாளத்தை இழந்துவிடக் கூடிய ஒரு melting pot சமுதாயத்தை உருவாக்குவார்கள். இந்தசமுதாயம் தனது மொழி இழந்து பண்பாடு இழந்து, தேசியம் இழந்தநிலையை அடையும் பொழுது பெரும்பான்மை இனத்துடன் இரண்டற கலந்த நிலையை அடையும். அப்பொழுது அந்த இனம்என்ற ஒருபகுதி இருந்த இடம் தெரியாது போகும் என்பது மேலைத்தேய ஆய்வாளர்கள் குறிப்பு.

ஆனால் மு.திருநாவுக்கரசு அவர்கள், தான் சார்ந்த மக்களுடைய வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்து சொல்கிறார். பண்பாட்டுஅழிவையும் அதன் பால் காலாகாலம் சிறிலங்கா அரசாங்கங்கள் அதன் தலைவர்கள் கொண்டிருந்த நாட்டத்தையும் படம் பிடித்து காட்டுகிறார். அதேவேளை புதிய அரசியல் யாப்பு குறித்து திரிபுடன் பேசும் பலருக்கும் அறிவுரை தருகிறார்.

அடிப்படை புவிசார் அரசியல் ஞானமும் நடைமுறை சர்வதேசஅரசியல் அறிவும் இன்றி தீர்வுகள் என்றும் சமஷ்டி என்றும் “மேலெழுந்த வாரியாக எழுந்த வெறும் உளவியற் பிரச்சினை போலபெரும்பான்மை இனத்தவரிடம் சிறுபான்மையினர் என்ற தாழ்வு சிக்கலும் சிறுபான்மையினரிடம் பெரும்பான்மையினரின் என்ற உயர்வு சிக்கலும் இருப்பதாக ஒரு மலினப்பட்ட விளக்கத்தை சில அறிஞர்கள் கூறி பிரச்சினையின் அடிப்படையையே திசை திருப்பி விடுகின்றனர்.”

அதேவேளை பூகோளஅரசியல் ஆய்வில் இந்தியாவின் பாதுகாப்பு தமிழரின் பாதுகாப்பிலேயே தங்கிஉள்ளது என்பதை மிகவும் தத்துருவமான வரலாற்று ஆதாரங்கள் மூலம் காட்டிஇருப்பதுமுரண்பட்டு நிற்கும் அரசியல்வாதிகளையும் கூட தமது பார்வைகள் குறித்து இந்தபுத்தகம் மீள் பரிசீலனை செய்ய வைக்கும் என்பதில் ஐயமில்லை.

நூல்ஆசிரியர் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து அதன் முடிவு வரை அதனோடு பின்னிப் பினைந்து வாழ்ந்தவர். ஆயுதப் போராட்டத்தின் ஒவ்வொரு திருப்பத்திற்கும் தீர்மானத்திற்கும்  தத்துவதெளிவுடனான சரி பிழைகளை எடுத்துக்கூறும் வல்லமை அவரிடம் என்றும் உள்ளது.

நவீன சர்வதேச அரசியல் பண்பாட்டில் தாராளவாதத்திற்கும் யதார்த்தவாதத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் அவற்றின் தன்மைகள் என சர்வதேச அரசியலை ஈழத்தமிழ் மக்களுக்கு கோட்பாட்டு ரீதியாக அறிமுகம் செய்து அழைத்து செல்லும் ஒரு தலைமை உரையாக இந்த புத்தகம் அமைந்துள்ளது.

இந்தவகையில் சர்வதேச உறவு குறித்து புதிய சிந்தனைகள் எழவேண்டிய தேவையையும் அதன் ஒருமித்த கருத்து வெளிப்பாட்டின் தேவைகள் குறித்தும் மிகஆழமான அறைகூவல் விடுத்திருப்பது முக்கியமானது.

அரசியல் ஒப்பந்த வாசகங்களில் இருந்தும் அரிய வரலாற்று புத்தக குறிப்பகளில் இருந்தும் பத்திரிகை கட்டுரைகளில் இருந்தும் பல சுவாரசியமான குறிப்புகள் மேலும் வாசிப்பைத் தூண்டுவதாக உள்ளது.

இந் தபுத்தக வடிவமைப்பும் ஒவ்வொரு தலைவர்களையும் படங்கள் மூலம் காட்டி உள்ள முறையும் தற்காலசந்ததியினருக்கும்தெளிவுற வைப்பதாக இருக்கிறது.  ஆக ஒட்டுமொத்தத்திலே இது ஒவ்வொரு தமிழராலும் வாசிக்கப்பட வேண்டிய காலத்திற்கு ஏற்ற ஆய்வு ஆகும்.

இறுதியாக தமிழ் மக்களை விழிப்படைய செய்யும் வகையிலான மேலும் பல புத்தகங்கள் வரவேண்டும் என்பது மிகமுக்கியமாக கருதப்படுகிறது. ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு அவர்கள் மட்டுமல்ல இன்னும் பல ஆய்வாளர்கள் எம்மத்தியில் முன்வந்து தமது அனுபவத்தை, தமது அரசியல் அறிவை புத்தகமாக வெளியிட வேண்டும்.

அதேபோல முன்னைநாள் போராளிகள் தமதுஅனுபவங்களை வரலாற்று திருப்புமுனைகளில் தாம் செய்த பணிகளை மனஎண்ணங்களை வெளிப்படுத்துவதன் மூலம், தமிழ் இனம் மீது ஆயுதப்போராட்டம் எவ்வாறு திணிக்கப்பட்டது, அவ்வாறு திணிக்கப்பட்ட போராட்டத்தை தமிழர்கள் எப்படி நேர்மையுடனும் வீரத்துடனும் கொண்டு சென்றார்கள், தம்மத்தியிலே எழுந்த தலைமைக்கு ஆட்சிஉரிமை வழங்கி கௌரவித்தார்கள் என்பன போன்ற முக்கியமான விடயங்களை வெளிப்படுத்த முடியும்.

– லோகன் பரமசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *