மேலும்

புலிகள் இயக்க சந்தேகநபரை சுட்டுக்கொன்ற மேஜர் 20 இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்தினார்

major-wimal-wickramageதடுப்புக்காவலில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபரைச் சுட்டுக்கொன்ற சிறிலங்கா இராணுவ அதிகாரி, கொல்லப்பட்டவரின் உறவினர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி, 20 இலட்ச ரூபா இழப்பீடு செலுத்தினார்.

1998ஆம் ஆண்டு பருத்தித்துறை சிறிலங்கா இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரொபேர்ட் வெலிங்டன் என்ற புலிகள் இயக்க சந்தேக நபரை லெப்.விமல் விக்கிரமகே என்ற அதிகாரி சுட்டுக்கொன்றார்.

கைவிலங்குடன் இருந்த சந்தேகநபர் தப்பியோட முனைந்த போதே, தவறுதலாக சுட்டுக் கொன்றதாக லெப்.விமல் விக்கிரமகேவுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்குத் தொடுக்கப்பட்டது.

நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருந்த காலத்தில், குறிப்பிட்ட இராணுவ அதிகாரி மேஜர் வரை பதவி உயர்வு பெற்று ஓய்வுபெற்றார்.

இந்த நிலையில், அண்மையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த கொழும்பு மேல்நீதிமன்றம், மேஜர் விமல் விக்கிரமகேவுக்கு 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தது.

அத்துடன் கொல்லப்பட்ட சந்தேக நபரின் நெருங்கிய உறவினர்களுக்கு 20 இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்த வேண்டும் என்றும் இல்லாவிடின் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்திருந்தது.

இந்த நிலையில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் குறித்த இராணுவ அதிகாரிக்கு 20 இலட்ச ரூபா நிதியைத் திரட்டிக் கொடுத்திருந்தனர்.

இந்த இழப்பீட்டு நிதி, இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசல சரோஜினி வீரவர்த்தன முன்னிலையில் கொல்லப்பட்டவரின் தந்தை மற்றும் மனைவிக்கு தலா 10 இலட்சம் ரூபா வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *