மேலும்

தாயகம் திரும்புவதற்கு இந்திய அரசின் கப்பலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் 2508 தமிழ் அகதிகள்

Sri-Lankan-Tamil-refugeesதமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் வசிக்கும் 2,508 இலங்கைத் தமிழர்கள், நாடு திரும்புவதற்குத் தயாராக இருக்கும் நிலையில், இவர்கள் தாயகம் திரும்புவதற்கு இந்தியா அரசாங்கத்தின் கப்பல் சேவையை எதிர்பார்த்துள்ளனர்.

தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளின் இந்தப்பட்டியல் கடந்த ஓகஸ்ட் 19ஆம் நாள் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம், கையளிக்கப்பட்டுள்ளதாக ஈழ ஏதிலியர் மறுவாழ்வு அமைப்பின் நிறுவுனர் எஸ்.சி.சந்திரகாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பில் சுஸ்மா சுவராஜை சந்தித்த போது, அவர் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக, தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவரிடம் கையளிக்கப்பட்டதாகவும் சந்திரகாசன் குறிப்பிட்டார்.

தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளுக்கு கட்டணமின்றி கப்பல் வசதிகளை செய்து கொடுக்கத் தயார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் உறுதியளித்திருந்தார்.

தாயகம் திரும்ப விரும்பும் அகதிகள் தொடர்பான பட்டியல். சிறிலங்கா அரசாங்கம், தமிழ் நாடு அரசு, வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுனர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலின் படி, தாயகம் திரும்ப விருப்பம் வெளியிட்டுள்ளவர்களில் மன்னாரைச் சேர்ந்த 745 பேரும், திருகோணமலையைச் சேர்ந்த 654 பேரும், வவுனியாவைச் சேர்ந்த 574 பேரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 236 பேரும், கிளிநொச்சியைச் சேர்ந்த 148 பேரும், மட்டக்களப்பைச் சேர்ந்த 117 பேரும், கொழும்பைச் சேர்ந்த 6 பேரும், கண்டியைச் சேர்ந்த ஒருவரும் அடங்கியுள்ளனர்.

இந்தப் பட்டியலில் தாயகம் திரும்ப விரும்புபவரின் அடையாள அட்டை இலக்கம், அவரது பெயர், வயது, தந்தையின் பெயர், தங்கியுள்ள அகதி முகாம், சிறிலங்காவுக்குத் திரும்ப விரும்புகின்ற இடம், விரும்பும் பயண மார்க்கம் என்பன உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாட்டின் கடலூர், இராமேஸ்வரம் துறைமுகங்களில் இருந்து காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் துறைமுகங்களுக்கு, தலா 500 பேர் வீதம் அகதிகளை கப்பல்களில் அனுப்பிவைக்க முடியும் என்றும் சந்திரகாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *