மேலும்

பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்க கூட்டமைப்பு இணங்கவில்லை – சுமந்திரன்

sumanthiranதற்போதைய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையை புதிய அரசியலமைப்பிலும் தொடர்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்தை கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்,

“பல மதங்கள் பின்பற்றப்படும் சிறிலங்காவில் மதச்சார்பற்ற அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.

அரசியலமைப்பில் இன,சாதி, மத, பால் வேறுபாடுகளின்றி, அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்றும், அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் கூறப்படுகின்ற நிலையில், ஒரு மதத்துக்கு கூடுதல் முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுப்பது அடிப்படையில் ஏற்புடையதல்ல.

நாம் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்போம்.

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற வழிநடத்தல் குழு இதுவரையில் மூன்று முக்கிய விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளது.

தேர்தல் மறுசீரமைப்பு, நிறைவேற்று அதிகாரம், அதிகாரப்பகிர்வு ஆகிய மூன்று விடயங்கள் குறித்தே, வழிநடத்தல் குழு கலந்துரையாடியுள்ளது.

மதம் தொடர்பான இன்னமும் எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை.

எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் புதிய அரசியலமைப்பை உருவாக்க இணங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளமை தவறானது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *