மேலும்

நிமால், அற்புதன், மகேஸ்வரி – ஈபிடிபியின் படுகொலைகளை அம்பலப்படுத்திய மூத்த உறுப்பினர்

ponnaiya-EPDPஊடகவியலாளர்கள் நிமலராஜன், நடராஜா அற்புதராஜா, கே,எஸ்.ராஜா மற்றும் சட்டவாளர் மகேஸ்வரி வேலாயுதம் உள்ளிட்டோரை ஈபிடிபியினரே படுகொலை செய்ததாகவும், சிறிலங்கா படையினருடன் இணைந்து இதுபோன்ற கொலைகள், ஆட்கடத்தல்களில் ஈபிடிபி ஈடுபட்டதாகவும் அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஈபிடிபியின் மூத்த உறுப்பினர், சு.பொன்னையா பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார்.

1990ஆம் ஆண்டு தொடக்கம், 2008ஆம் ஆண்டு வரை ஈபிடிபியில் இணைந்து செயற்பட்ட அவர் செய்தியாளர்களிடம் தகவல் வெளியிடுகையில்-

“ஈபிடிபி உறுப்பினரும், தினமுரசு ஆசிரியருமான நடராஜா அற்புதராஜா மற்றும் சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம் ஆகியோர் ஈபிடிபியினராலேயே படுகொலை செய்யப்பட்டனர். இவர்களை விடுதலைப் புலிகள் கொலை செய்யவில்லை.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே இவர்களைக் கொலை செய்து விட்டு அந்தப் பழியை விடுதலைப் புலிகள் மீது போட்டனர்.

ponnaiya-EPDP

அதுபோன்று, யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலையையும் ஈபிடிபியினரே மேற்கொண்டனர். இந்தக் கொலையைச் செய்தவர்கள் இன்னமும் யாழ்ப்பாணத்திலும் உள்ளனர். சிலர் வெளிநாடு சென்று விட்டனர்.

இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்கள் இன்னமும் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற நிலையில், அவர்களைக் கைது செய்தால், உண்மைகள் வெளிவரும்.

உதயன் நாளிதழ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதும், நான் யாழ்ப்பாணத்தில் தான் இருந்தேன். இந்தத் தாக்குதலை ஈபிடிபியினருடன் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.

இந்த தாக்குதலை முடித்து திரும்பும் போது, புலிகள் என்று இராணுவத்தினர் சுட்டதால், காயமடைந்த ராஜன் மற்றும் திவாகரன் ஆகிய ஈபிடிபி உறுப்பினர்களுக்கு பலாலி இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்கள் இன்னமும் உயிருடன் தான் இருக்கின்றனர்.

இந்த தாக்குதலை மேற்கொண்டவர்களும், அதற்குத் தூண்டியவர்களும் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கின்றனர்.

நெல்லியடி, புங்குடுதீவு, காரைநகர், யாழ்ப்பாணம், மற்றும் வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளிலும் இடம்பெற்ற கொலைகள், மற்றும் ஆட்கடத்தல்களை ஈபிடிபியினரே மேற்கொண்டனர்.

சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து, ஈபிடிபியினர் ஆட்கடத்தல்களையும் யாழ். மாவட்டத்தில் மேற்கொண்டிருந்தனர். ஆட்கடத்தல்களுக்கு சார்ள்ஸ் பொறுப்பாக இருந்து செயற்பட்டார்.

நெடுந்தீவில் உதவி அரசஅதிபர் நீக்கலஸ் கொலையையும் ஈபிடிபியினரே மேற்கொண்டனர். அதுபற்றி சிறிலங்கா காவல்துறையினருக்குத் தெரியப்படுத்திய போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஊர்காவற்றுறை சுருவிலில், ஈபிடிபியில் இருந்து தப்பிச் சென்று புலிகளுடன் இணைய முயன்ற 6 உறுப்பினர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அவர்களை வெட்டிக் கொலை செய்தவர் ஈபிடிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமமூர்த்தியே. அவர்களை வெட்டிக் கொன்ற இரத்தம் தோய்ந்த கத்தியுடன் தான் அவர் எமக்கு கூட்டம் நடத்தினார்.

முன்னைய அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொண்டு, இந்தியாவில் தங்கியிருந்த வானொலி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவை கொழும்புக்கு அழைத்து வந்திருந்தார் டக்ளஸ்  தவானந்தா. பின்னர் அவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபத்தில் மீண்டும் இணைந்து கொள்ளத் திட்டமிட்ட தகவல் வெளியானதும், தமது இரகசியங்கள் வெளியே சென்று விடும் என்ற அச்சத்தில் ஈபிடிபியினரால் மதுவில் நஞ்சு கலந்து கொலை செய்யப்பட்டார்.

கொழும்பில் விஜி, யாழ்ப்பாணத்தி்ல் பாண்டியன், ஊர்காவற்றுறையில் கிளி, போன்ற ஈபிடிபி உறுப்பினர்களையும் ஈபிடிபி உறுப்பினர்களே கொலை செய்தனர்.

நாரந்தனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மனோ எனப்படும் மதனராஜன் என்ற ஈபிடிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரே உத்தரவிட்டிருந்தார்.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், ஈபிடிபியினரின் கொலைகள் மற்றும் குற்றச்செயல்கள் குறித்து கொழும்பு, மற்றும் யாழ். காவல்நிலையங்களில் முறைப்பாடு செய்த போதிலும், உரியவகையில் அவை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

ஈபிடிபியில் இருந்த போது, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட சம்பளத்தையும் கூட, ஈபிடிபியினரே பறித்துக் கொண்டு சிறிய தொகையையே வழங்கினர்.” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *