மேலும்

கைகொடுக்கத் தயங்குவது நியாயமா?

chennai-flood (2)சென்னையிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கொட்டித் தீர்த்த பெருமழையும், அதனால் ஏற்பட்ட வரலாறு காணா வெள்ளமும், ஏராளமானோரின் இதயங்களில் புதைந்திருந்த மனிதநேயத்தை வெளிக் கொண்டு வந்திருக்கிறது.

அதேவேளை, இன்னும் சிலரின் மனங்களில் உள்ள வக்கிரங்களையும் இந்தப் பெருந்துயர் வெளிச்சம் போட்டுக் காட்டத் தவறவுமில்லை.

சில மணிநேரத்துக்குள் கொட்டித் தீர்த்த பெருமழையின் பாதிப்பு இலட்சக்கணக்கான மக்களை சூனிய நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது.

இந்த மழைக்கான காரணம் என்ன, இந்தப் பேரழிவுக்கான பொறுப்பு யார், ஏனிந்த அழிவை எதிர்கொள்ள நேரிட்டது என்று எல்லா ஊடகங்களிலும் ஆய்வுகள் நடக்கின்றன, விவாதங்கள் தொடர்கின்றன.

அவரவர் அறிவுக்குத் தக்கவாறும், அவரவர் சார்ந்துள்ள அரசியல் நிலைக்கு ஏற்றவாறும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இத்தகைய விவாதங்களில் நேரத்தை வீணாக்காமல், கைகொடுத்து உதவுபவர்கள் தான் அதிகம் பேர் என்பதில் சந்தேகமில்லை.

இந்த பேரழிவு மனிதனுக்குப் பாடங்களைக் கற்றுக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறது. இது சென்னைக்கு மட்டுமான பாடம் அல்ல. இலங்கைக்கும், உலகுக்கும் கூட கொடுக்கப்பட்டிருக்கின்ற பாடம்.

இந்தப் பேரழிவுக்கான காரணத்தைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டியுள்ளது உலக மக்கள் அனைவரின் முன்னுள்ள மிகப்பெரிய பொறுப்பு தான்.

ஆனால் அதற்கு முன்னர், நிவாரணப் பணிகளையும், மீட்புப் பணிகளையும் முன்னெடுக்க வேண்டிய தேவையே அவசரமானது. இல்லாவிட்டால், மனிதப் பேரவலங்கள் தொடரும் நிலையை ஏற்படுத்தி விடும்.

சென்னைப் பெருவெள்ளத்தின் பாதிப்பு உலகத்தின் முழுக் கவனத்தையும் தமிழ் நாட்டின் மீது திருப்பியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பக்கத்து வீட்டுக்காரரில் இருந்து, உலகின் கடைக்கோடி நாடுகளில் இருந்து வரை, உதவிகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

ஆனாலும் இதற்குள்ளேயும் அரசியல் நலன்களும், குரோத மனப்பாங்கு என்று எல்லாமே இருப்பதை மறுக்க முடியாது.

பக்கத்து நாடு என்ற வகையில், இலங்கையில் இருந்தும் கூட, பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் சென்று கொண்டிருக்கின்றன.

ஆனாலும், இதுவரை இலங்கை அரசாங்கத்தினால் எந்த அதிகாரபூர்வ உதவிகளும் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படவில்லை.

சீனாவில் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட போதும், பாகிஸ்தானில் வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்ட போதும், ஈரானிலும், நேபாளத்திலும் பூகம்பம் தாக்கிய போதும், இலங்கையில் இருந்து விமானங்கள் நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்றன.

தேயிலை, ஜெனரேற்றர், குடிநீர், மருந்துகள், போர்வைகள் என்று தேவைக்கேற்ப நிவாரணப் பொருட்களை இலங்கை அரசாங்கம் அனுப்பியது.

ஆனால், சென்னையில் பெருவெள்ளத்தினால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ருவிட்டரில் வெறும் அனுதாபத்தை தெரிவித்து விட்டு இருந்து விட்டார்.

இதே பாதிப்பு இந்தியாவில் வேறொரு மாநிலத்தில் ஏற்பட்டிருந்தால் அல்லது, பாகிஸ்தானிலோ, சீனாவிலோ இவ்வாறு நடந்திருந்தால், இலங்கை அரசாங்கம் இவ்வாறு தான் மௌனம் காத்திருக்குமா என்ற கேள்வி இந்தத் தருணத்தில் எழுகிறது.

இந்தியா எந்த நாட்டிடமும் உதவியைக் கேட்கவில்லை என்பது உண்மை தான். ஏனென்றால் இந்தியா ஒரு பெரிய நாடு. தன்னை ஒரு வல்லரசாக நிலைபெற வைக்க முயற்சிக்கும் நாடு. இதுபோன்ற பேரழிவுகளை சமாளிக்கின்ற பொருளாதார பலத்தையும் இந்தியா கொண்டுள்ளது.

ஆனாலும், பேரழிவு ஒன்று ஏற்படுகின்ற போது, அதுவும் திடீரென ஏற்படுகின்ற போது அதனைச் சமாளிப்பது எந்த நாட்டினாலும் முடியாத காரியமே. இந்தியாவும் இந்தப் பாதிப்பினால் நிலைகுலைந்து போனது உண்மை.

இப்படியான நிலையில், கைகொடுத்து உதவுவது தான் மரபு. அந்த மரபை இலங்கை அரசாங்கம் ஏன் மறந்து போனது என்று தெரியவில்லை.

இந்த நிவாரண உதவி விவகாரத்தில், வடக்கு மாகாணசபைக்குள் நடக்கின்ற இழுபறி அதைவிட மோசமானது.

தமிழகத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவுகின்ற விடயத்தில், இலங்கையில் உள்ள மற்ற இனத்தவர்களை விடவும் தமிழர்களுக்கே கூடுதல் பொறுப்பும் கடப்பாடும் உள்ளது. தொப்புள் கொடி உறவைத் தமிழகத்துடன் கொண்டுள்ளவர்கள் இங்குள்ள தமிழர்கள்.

தமிழரின் போராட்டங்களுக்குத் துணை நின்றது, அடைக்கலம் கொடுத்தது என்று பல்வேறு வழிகளில் தமிழர்கள் தமிழ்நாட்டுக்குக் கடமைப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் வடக்கு மாகாணசபை நிவாரண நிதி திரட்டிக் கொடுக்க எடுத்த முடிவு அவசியமானதொன்று தான்.

உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து இலங்கைத் தமிழர்கள், தமிழகத்துக்கு உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தநிலையில் நாமும் அவர்களுடன் உணர்வு ரீதியாக ஒன்றித்து இருக்கிறோம் என்ற செய்தியை சொல்வது தான் முக்கியம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது, அவர்களை முழுமையாக மீட்பதற்கு அல்ல. பாதிப்பில் இருந்து மீள்வதற்கு உங்களுடன் இருக்கிறோம் என்ற அதிகபட்ச மனோ தைரியத்தைக் கொடுப்பது தான் இந்த உதவியின் முக்கிய தார்ப்பரியம்.

உடனடி நிவாரணம் என்ற வகையில் இலங்கையில் இருந்தோ, தமிழர்களிடம் இருந்தோ சென்னைக்கு இன்னமும் சென்றடையவில்லை.

ஆனால், தமிழ்நாட்டில் முகாம்களிலும், வெளியிலும் இருக்கின்ற தமிழர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிகளை வழங்கியுள்ளனர்.

இந்தநிலையில் வடக்கு மாகாணசபை இந்த நிவாரண நிதியை திரட்டும் விடயத்தில் இரண்டுபட்டு நிற்பது, விசனத்துக்குரிய விடயமாகவே பார்க்கப்படுகிறது.

நிவாரணம் திரட்டும் நடவடிக்கை தொடர்பாக ஆராய கூட்டப்பட்ட கூட்டத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

அது பாதிக்கப்பட்ட மக்கள் மீதான கோபமா,?  போரில் பாதிக்கப்பட்ட நாம் ஏன் உதவ வேண்டும் என்ற கீழ்த்தரமான சிந்தனையா? அல்லது யார் பெரிது என்ற அரசியல் கருத்து வேறுபாடுகளா? இந்தக் குழப்பம் பலரிடமும் இருக்கிறது.

வடக்கு மாகாணசபை ஒரு நிவாரண நிதியத்தை ஏற்படுத்தி உதவுவது பற்றி முடிவெடுக்க கூட்டப்பட்ட கூட்டத்தில் முதலமைச்சரோ, அமைச்சர்களோ கூட பங்கேற்கவில்லை.

ஆனால், முதலமைச்சர் தாம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வடக்கு மாகாணசபை நிவாரண உதவி வழங்க வேண்டியது பற்றி கூறியிருந்தார்.

அவ்வாறாயின், இந்த உதவியை வழங்கும் விடயத்தில் ஏன் ஒன்றுபட முடியாது போனது?

போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நிதி திரட்டப்பட வேண்டுமா என்ற விமர்சனங்களையும் காண முடிகிறது.

வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் உதவி வழங்கக் கூடாது என்ற நியதி ஒன்றும் கிடையாது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் இப்போதுள்ளதையும் விட, மோசமான பொருளாதார, வாழ்க்கைத் தர நிலையில், தமிழ்நாட்டு அகதி முகாம்களில் ஏரராளமான ஈழத் தமிழர்கள் வசிக்கின்றனர் என்பது பலருக்குத் தெரியாது.

அவர்களே தமது ஒரு வேளை உணவையோ, வேறு தேவைகளையோ சுருக்கி உதவிகளை அள்ளி வழங்கிய போது, பாதிக்கப்பட்டவர்கள் ஏன் உதவ வேண்டும் என்ற குரூர மனப்பாங்கில் வடக்கிலுள்ள மக்கள் ஒதுங்கிக் கொள்வது எந்த வகையில் நியாயமானது என்று தெரியவில்லை.

இனத்தாலோ, மொழியாலோ, வேறு எந்த வகையிலோ தொடர்பற்றவர்களே, உதவிக்காக ஓடிச் செல்லும் போது, போரினால் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் என்ற அடைமொழியுடன் ஈழத் தமிழர்கள் ஒதுங்கிக் கொள்வது அபத்தமானது.

வடக்கு மாகாணசபையோ, மக்களோ அளிக்கின்ற உதவி என்பது பெரிய தொகையானதாக இருக்க வேண்டும் என்பதில்லை. அது பாதிப்பை ஈடுசெய்யக் கூடியளவில் இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானது அல்ல.

சிறியளவாயினும், ஆபத்து நேரத்தில் செய்கின்ற உதவி தான் பெரியது.

சென்னைப் பெருவெள்ளத்தினால் ஒரு இலட்சம் கோடி ரூபா வரை அழிவு ஏற்பட்டதாக ஒரு கணக்கு கூறுகிறது. அவ்வளவு தொகையையயும், இந்திய அரசாங்கமோ, வேறு எந்த நாடோ கொடுத்து ஈடுகட்டப் போவதில்லை.

அவசரத் தேவைகளை மட்டும் தான் நிறைவேற்றப் போகிறது அரசாங்கம். அதில் ஒரு துளியளவு பங்கை இலங்கை மக்களும் பொறுப்பேற்பதில் கூட அரசியல் பிளவுகள் காணப்படுவது கேவலமானது.

வெறும் அறிக்கைகளின் மூலம், தெரிவிக்கப்படும் அனுதாபங்களும் ஆறுதல் வார்த்தைகளும் பாதிக்கப்பட்ட மக்களின் செவிகளைக் கூடச் சென்றடையப் போவதில்லை. சிறிய உதவியாக இருந்தாலும் இது பாதிக்கப்பட்டவர்களின் உள்ளத்தைக் குளிர்விக்கும்.

இந்த விடயத்தில், பாதிக்கப்பட்ட மக்களை உணர்வுபூர்வமாக அணுகுவதற்கு இலங்கை அரசாங்கமும் தமிழர்களும் தவறியுள்ளனர் என்று தான் தோன்றுகிறது.

இந்தக் கட்டத்தில் ஒரு சந்தேகமும் எழுகிறது, பிறருக்கு உதவும் கொடையுள்ளம் படைத்தவர்களைக் கொண்ட நாடுகளின் 2015ஆம் ஆண்டுக்கான பட்டியலில், இலங்கை 8ஆவது இடத்தில் இருப்பதாக வெளியான செய்திகள் பலருக்கும் மறந்திருக்காது.

போரினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் தான் இந்தப் பெருமை இலங்கைக்குக் கிடைத்தது.

நன்கு வளர்ச்சியடைந்த செல்வந்த நாடுகளைக் கூட பின்தள்ளிய இலங்கையில் உள்ள தமிழர்களிடம், இப்படியான சிந்தனைகளும் உள்ளன என்பது வேதனைக்குரியது.

இது தான் தமிழர்களில் பெரும்பான்மையானோரின் மனோநிலை என்றால், இலங்கைக்குக் கிடைத்த அந்தப் பெருமைக்கு தமிழர்கள் உரித்தானவர்கள் இல்லை என்று தான் கருத வேண்டும்.

– என்.கண்ணன்

வழிமூலம்  – வீரகேசரி வாரவெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *