மேலும்

எல்லா தமிழர்களையும் புலிகளாகப் பார்க்கவில்லை – சிறிலங்கா அரசு

lakshman kiriellaதமிழர்களையும் தமிழ் அமைப்புக்களையும் புதிய கோணத்திலேயே தற்போதைய அரசாங்கம் நோக்குகிறது என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று, புலம்பெயர்ந்த அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

“அனைத்து தமிழ் மக்களும் புலிகளல்ல. எல்லா தமிழ் அமைப்புக்களும் புலிகளுடன் தொடர்புள்ள அமைப்புக்களல்ல.

கடந்த மகிந்த ராஜபக்‌ச அரசாங்கம் எல்லா தமிழ் மக்களையும் புலிகளாகவே பார்த்தது. அனைத்து புலம்பெயர் அமைப்புகளும் புலி அமைப்புகளாகவே சித்தரிக்கப்பட்டன.

தமிழர்களையும் தமிழ் அமைப்புகளையும் கடந்த அரசு துரத்திச் சென்றது.

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு தமது சொந்த இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் எமது அரசாங்கம் அந்த கோணத்தில் பார்க்கவில்லை.

தமிழர்களை நாம் இனவாதத்துடன் பார்க்கமாட்டோம். புதிய அரசாங்கம் சகலவற்றையும் புதிய கோணத்தில் பார்க்கிறது.

நாம் கண்ணைமூடிக் கொண்டு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கவில்லை. அனைத்துலக காவல்துறை, அனைத்துலக புலனாய்வு அமைப்புக்கள், அரச புலனாய்வுத்துறை என்பவற்றின் முடிவுகளுக்கமையவே தடை நீக்கம் செய்யப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *