மேலும்

மகிந்த பிரதமராவதால் இந்தியாவுக்கு என்ன பாதகம்?

mahinda- a'puraராஜபக்ச சிறிலங்காவின் பிரதமராகினாலும் கூட, இவர் அதிபராகப் பதவி வகித்த போது செயற்பட்டது போன்று பலமுள்ள ஒருவராகத் தன்னைக் காண்பிக்க முடியாது.  

இவ்வாறு dailyo இணையத்தளத்தில், SEEMA GUHA எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறுவதற்கு இன்னமும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் அங்கு பல்வேறு எதிர்வுகூறமுடியாத அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.

சிறிலங்காத் தீவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மிகவும் வெற்றிகரமாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதியைப் பெற்றுள்ளார். ஆகஸ்ட் 17 அன்று இடம்பெறவுள்ள தேர்தலில் எவர் வெற்றி பெறுவார் என்பது தொடர்பில் எவரும் உறுதியுடன் தெரிவிக்கவில்லை.

இதற்கும் மேலாக, தற்போது இத்தேர்தலை  நடத்த வேண்டிய நிலையில் சிறிலங்கா உள்ளது. ஏனெனில் வரும் செப்ரெம்பர் மாதத்தின் இறுதியில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காப் போரில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

இந்நிலையில் இந்த அறிக்கையிலிருந்து சிறிலங்காத் தரப்பைக் காப்பாற்றுவதற்கு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

செப்ரெம்பர் அறிக்கை வெளியிடப்படும் போது சிறிலங்காவில் புதிய நாடாளுமன்றமும் புதிய பிரதமரும் பதவியேற்றிருப்பார்கள். சிலவேளைகளில் மகிந்த ராஜபக்ச புதிய பிரதமராக பதவி வகிக்கலாம்.

மகிந்த ராஜபக்ச கடந்த ஜனவரி மாதத்தில் அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் இவர் தற்போது மீண்டும் அரசியலுக்குள் நுழைந்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதியை சிறிசேன வழங்கியதானது முன்னாள் அதிபர் தற்போதும் இக்கட்சியில் செல்வாக்கு மிக்க ஒருவராகவே உள்ளார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபடக் கூடாது என்பதற்காகவே சிறிசேன, ராஜபக்சவுக்கு வேட்பாளர் நியமனத்தை வழங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஏனெனில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தோல்வியுற்றால் ஐக்கிய மக்கள் கட்சிக்கு ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பை வழங்கிவிடும் என சிறிசேன கருதியதாலேயே ராஜபக்ச தற்போது தேர்தலில் போட்டியிடுகிறார்.

மகிந்த ராஜபக்ச மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதியளிக்க மாட்டேன் என முன்னர் சிறிசேன உறுதியளித்த போதிலும் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் ராஜபக்ச அதிகளவில் ஆதரவைக் கொண்டிருந்ததால் சிறிசேனவால் இவரை மிக இலகுவாகத் தட்டிக்கழிக்க முடியவில்லை.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற ராஜபக்சவின் முதலாவது தேர்தல் கூட்டத்தில் பெருமளவான மக்கள் பங்கேற்றிருந்தனர். தான் கட்டியெழுப்பிய பல்வேறு விடயங்களை கடந்த ஆறு மாதங்களில் தற்போதைய அரசாங்கம் அழித்தொழித்து விட்டதாகக் கூறுவதே ராஜபக்சவின் பிரதான தேர்தல் பரப்புரையாகும்.

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கமானது கடந்த 20 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாகவே செயற்பட்டது. இதனால் ஆறு மாதங்கள் மட்டுமே ஆட்சியைத் தக்கவைக்க முடிந்துள்ளது. இந்த அரசாங்கத்தால் தொடர்ந்தும் சுமைகளைத் தாங்கமுடியவில்லை என ராஜபக்ச தனது பரப்புரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்ததற்காக ராஜபக்சவை சிங்களக் கடும்போக்காளர்கள் பெரிதும் வரவேற்கின்றனர். அத்துடன் ராஜபக்ச ஒரு சிங்களக் கதாநாயகனாகவே உருவகிக்கப்படுகிறார். ராஜபக்ச புலிகளை முற்றாக ஒழித்திருப்பினும் இவர் தனது குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் அதிகாரங்களைக் குவித்திருந்தார்.

இதனால் இவருக்கு எதிராகப் பல்வேறு ஊழல் மோசடிகள் முன்வைக்கப்பட்டன. இதன்பயனாக இவர் கடந்த அதிபர் தேர்தலில் எதிர்பார்த்திராத அளவுக்கு அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்தார்.

அதிபர் தேர்தலில் ராஜபக்ச எதிர்த்துப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன, ராஜபக்சவின் அரசாங்கத்தின் கீழிருந்த ஒரு அமைச்சராவார். இவர் பொது எதிரணியின் ஆதரவுடன் அதிபர் தேர்தலில் 51.28 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

சிறுபான்மைத் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் சிறிசேனவை ஆதரித்து வாக்களித்தனர். ஆனால் ராஜபக்ச இத்தேர்தலில் 47.58 வீத வாக்குகளைப் பெற்றார். ஆகவே முன்னாள் அதிபரான ராஜபக்சவுக்கு தற்போதும் உறுதியான வாக்குப் பலம் உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சவின் விசுவாசிகள் வெற்றி பெற்றால், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் சில முடிவுகளை எடுப்பதற்கு சிறிசேன எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியேற்படும்.

இதற்கான சாத்தியத்தை இல்லாதொழிப்பதற்கான நகர்வை அரசியல் யாப்பில் சிறிசேன சீர்திருத்தியுள்ளார். இதனால் ராஜபக்ச எளிதில் தேர்தலில் வெற்றிபெறுவதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல.

ராஜபக்ச கடந்த ஜனவரித் தேர்தலில் தோல்வியுற்ற போது இதனை உலகின் பல்வேறு ஜனநாயக நாடுகள் வரவேற்றன. இந்தியா, அமெரிக்கா ஆகியன மிகவும் மகிழ்வடைந்தன. சிறிசேன அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்க முன்வந்தன.

ஐ.நா அறிக்கையைத் தாமதப்படுத்துமாறு அமெரிக்கா பரிந்துரைத்தது. இது சிறிசேன அரசாங்கத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது. இது உண்மையில் மார்ச் மாதம் வெளியிடப்பட வேண்டும். ஆனால் சிறிசேனவுக்கு இது தொடர்பில் மேலும் கால அவகாசம் தேவை என்பதால் இதனைத் தள்ளிப்போடுவதற்கு அமெரிக்கா உதவியுள்ளது.

சிறிசேன, சீனாவிற்குத் தனது முதலாவது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளாது இந்தியாவிற்குப் பயணம் செய்ததன் மூலம் இந்திய அரசாங்கத்தின் நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டார். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட 2009லிருந்து விரிசலடைந்திருந்த இந்தியாவுடனான உறவு சிறிசேன அதிபராகப் பதவியேற்ற பின்னர் மீண்டும் நெருக்கமாகியது.

இந்தியா, சிறிலங்கா உறவில் விரிசல் ஏற்படுவதற்கு சீனா மிக முக்கிய காரணியாகும். சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கு ராஜபக்ச அனுமதியளித்தார். இது ஒரு தடவையல்ல இரண்டு தடவைகள் இடம்பெற்றன.

இது இந்தியாவை அதிருப்திக்கு உள்ளாக்கியது. சீனாவின் இந்திய மாக்கடல் மீதான செல்வாக்கானது இந்தியாவின் பாதுகாப்பிற்கும் மூலோபாய நலன்களுக்கும் குந்தகம் விளைவிக்கும் என இந்தியா கருதுகிறது. இந்திய மாக்கடலில் சீனா செல்வாக்குச் செலுத்துவதானது இந்தியாவிற்கு பெரும் சவாலாக எழுந்துள்ளது.

இந்நிலையில் ராஜபக்ச மீண்டும் சிறிலங்காவின் ஆட்சியில் அமர்ந்தால் சீனக் கடற்படையினரின் பிரசன்னம் மீண்டும் சிறிலங்காவில் அதிகரிக்குமா?

ராஜபக்ச சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேணியிருந்தார். 1987ல் மேற்கொள்ளப்பட்ட இந்திய சிறிலங்கா உடன்படிக்கையின் பிரகாரம், இவ்விரு நாடுகளினதும் துறைமுகங்களை வேறெந்த சக்திகளும் பயன்படுத்த அனுமதிக்க முடியாது.

இதனைக் கருத்திற்கொண்டே சிறிலங்காவின் புதிய அரசாங்கம் சீன நீர்மூழ்கிக்கப்பல்கள் மற்றும் போர்க் கப்பல்கள் சிறிலங்காவில் தரித்து நிற்பதற்கு அனுமதியளிக்கவில்லை.

சீனர்களால் உடன்படிக்கை செய்யப்பட்ட 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான கொழும்பு துறைமுக நகரத் திட்டமானது சிறிசேனவால் இடைநிறுத்தப்பட்டது. இத்திட்டம் உட்பட சீனாவால் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனக் கூறப்பட்டு சிறிசேன அரசாங்கத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இவை தவிர, 13 வது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டவாறு தமிழ் மக்களின் அவாக்களை ராஜபக்ச தீர்க்க முன்வரவில்லை. ராஜபக்ச சிறிதளவேனும் சிறுபான்மையின மக்களின் பிரச்சினையைக் கருத்திலெடுக்கவில்லை.

பதிலாக, தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் வடக்கு மாகாணத்தில் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் இராணுவத்தினலரால் கையகப்படுத்தப்பட்டன. ராஜபக்சவின் காலத்தில் வடக்கு மாகாண ஆளுநராக முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார்.

ராஜபக்ச பிரதமராகினால் மீண்டும் இத்தகைய பிரச்சினைகள் தோன்றுமா என்பதே தற்போதைய கேள்வியாகும். ஆனால் சிறிசேன தற்போதும் அதிபராக உள்ளதால் சீனாவுடன் ராஜபக்ச தொடர்பைப் பேணுவது அவ்வளவு இலகுவானதல்ல.

ஐ.நா அறிக்கை வெளியிடப்படும் போது ராஜபக்ச மிகவும் விழிப்பாகச் செயற்படுவார். ஏனெனில் சிறிலங்காவில் தொடரப்பட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும் என சிறிசேன மேற்குலக நாடுகளிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

ஆகவே சிறிசேன, ராஜபக்சவைக் காப்பாற்றுவதை விட உலக நாடுகளிடம் அளித்த வாக்கைக் காப்பாற்றுவதிலேயே அதிக கவனம் செலுத்துவார். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ராஜபக்சவிடம் தொடர்ந்தும் அழுத்தம் இடப்படும்.

ராஜபக்ச சிறிலங்காவின் பிரதமராகினாலும் கூட, இவர் அதிபராகப் பதவி வகித்த போது செயற்பட்டது போன்று பலமுள்ள ஒருவராகத் தன்னைக் காண்பிக்க முடியாது.  ராஜபக்ச தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஒரு வாய்ப்பாக இதனைப் பயன்படுத்த முடியுமா என்பதைக் கூறமுடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *