மேலும்

பிறேமதாசாவின் சாதனை இந்த தேர்தலில் முறியடிக்கப்படுமா?

R-Premadasaபிறேமதாச சில சட்ட நகல்களுக்கு நாடாளுமன்றின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக் கொள்வதைத் தடுப்பதற்காகவே ஜே.ஆர் மிக வேகமாக, இரவோடு இரவாக நாடாளுமன்றைக் கலைத்தார் என்பதில் எவ்வித இரகசியமும் இல்லை.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் பிரசாத் குணவர்த்தன எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்காவின் முக்கிய இரு அரசியற் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியன ஆகஸ்ட் 17ல் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காகத் தம்மைத் தயார்படுத்தி வருகின்றன. இது தொடர்பில் இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறுகின்றன. இவ்விரு தரப்பினரும் நாடாளுமன்றில் அதிக ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதற்கான பரப்புரைப் பணிகளில் ஈடுபடுகின்றன.

113 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் கட்சியே சிறிலங்கா நாடாளுமன்றை அமைப்பதற்கான பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிருக்கும். விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறைமையின் கீழ் தனியொரு கட்சி 113 ஆசனங்களைப் பெற்றுப் பெரும்பான்மைப் பலத்தை உறுதிப்படுத்துவதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல.

இந்த முறைமையானது மறைந்த முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ் ஜெயவர்த்தன ஒருபோதும் போட்டியிடவில்லை. இவ்வாறானதொரு சூழலில் ஜேவிபி, கடந்த தேர்தல்களில் கூடிய ஆசனங்களைப் பெற்ற போதும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிராத கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க உதவியது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் ஜெயவர்த்தன நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்குப் பதிலாக, 1982 டிசம்பரில் தனது ஆட்சிக்காலத்தை மேலும் நீட்டிப்பதற்காக கருத்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார். இதன்மூலம் 1977ல் பெற்றுக் கொண்டது போன்று அறுதிப் பெரும்பான்மை ஆதரவுடன் ஜெயவர்த்தன தனது ஆட்சியை மேலும் தக்கவைத்துக் கொண்டார்.

தனது சிவில் உரிமையை இழந்திருந்த திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவால் தலைமை தாங்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவதற்காக முன்னாள் அதிபர் ஜெயவர்த்தன 1982 ஒக்ரோபரில் அதிபர் தேர்தலை நடத்தினார்.

இத்தேர்தல் பரப்புரையில் தனக்கு ஆதரவு வழங்குவதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர் மைத்திரிபால சேனநாயக்க மற்றும் அனுரா பண்டாரநாயக்க ஆகியோரை ஜெயவர்த்தன தன்னுடன் இணைத்துக் கொண்டார். பிரித்தாளும் தந்திரம் மிக்க ஒரு அரசியல் தலைவராக ஜே.ஆர் விளங்கினார்.

ஜே.ஆர் தனது அதிபர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற போது பிரதமராகப் பணியாற்றிய ரணசிங்க பிறேமதாசவின் எதிர்பார்ப்புக்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தைக் கலைத்தார். முக்கிய சட்ட நகல்களுக்கு நாடாளுமன்றின் ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்கு பிறேமதாசா விரும்பிய போதிலும் அதற்கு ஜே.ஆர் எதிராகச் செயற்பட்டார்.

ஜே.ஆரைச் சந்தித்த பிறேமதாச, நாடாளுமன்றைக் கலைக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்தார். ‘நான் உம்முடைய வேண்டுகோளைப் பரிசீலிக்கிறேன்’ என ஜே.ஆர் பதிலளித்த போதிலும் அன்றிரவே நாடாளுமன்றை ஜே.ஆர். கலைத்தார். இந்தச் செய்தி உண்மையில் பிறேமதாசாவுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

பிறேமதாச சில சட்ட நகல்களுக்கு நாடாளுமன்றின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக் கொள்வதைத் தடுப்பதற்காகவே ஜே.ஆர் மிக வேகமாக, இரவோடு இரவாக நாடாளுமன்றைக் கலைத்தார் என்பதில் எவ்வித இரகசியமும் இல்லை.

இதன் பின்னர் 1989ல் பிறேமதாசா, பொதுத்தேர்தலில் போட்டியிட்டார். இத்தேர்தலானது விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இத்தேர்தலில் ஐ.தே.க தலைமையில் பிறேமதாசாவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் தனது சிவில் உரிமையை மீளவும் பெற்றுக் கொண்ட சிறிமாவா பண்டாரநாயக்கவும் போட்டியிட்டனர்.

இக்காலப்பகுதியில் நாட்டில் ‘இரண்டு யுத்தங்கள்’ இடம்பெற்றன. ஒன்று வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையிலும் மற்றையது தெற்கில் ஜே.வி.பி தலைமையிலும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் இத்தேர்தலானது பிறேமதாசவுக்கு கடும் நெருக்கடி மிக்கதொரு தேர்தலாக அமைந்தது.

இத்தேர்தல் காலத்தில் ஐ.தே.க வேட்பாளர்கள் பலர் ஜே.வி.பி கிளர்ச்சிவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் தென்சிறிலங்காவில் கலவரம் தீவிரமடைந்தது. ஐ.தே.க வேட்பாளர்கள் பலர் தாக்கப்பட்டனர். இதனால் ஐ.தே.க சில இடங்களில் தனது வேட்பாளர்களை நிறுத்த முடியவில்லை.

ஜே.வி.பி கிளர்ச்சி அதிகம் இடம்பெற்ற மாத்தறை மாவட்டத்தில் திரைப்பட கலைஞரான காமினி பொன்சேகாவைப் போட்டியிடுமாறு பிறேமதாச கோரிக்கை விடுத்தார். பிறேமதாசா தனது விசுவாசத்திற்குரிய நண்பன் என்ற வகையில் காமினி இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். இத்தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் காமினி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். இதன்மூலம் காமினி பிரதி சபாநாயகராக அறிவிக்கப்பட்டார்.

இத்தேர்தலில் சிறிலங்காவின் தென்பகுதியில் வாக்களிப்பதற்கு மக்கள் அச்சம் கொண்டனர். ஏனெனில் ஜே.வி.பி கிளர்ச்சிவாதிகள் மக்களின் தேசிய அடையாள அட்டைகளைப் பலவந்தமாகப் பறித்தனர். இத்தேர்தலில் 125 ஆசனங்களைப் பெற்று பிறேமதாச தலைமையிலான ஐ.தே.க வெற்றி பெற்றது.

ஜே.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையானது இத்தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி 65 ஆசனங்களைப் பெற உதவியது. இத்தேர்தலில் வேறெந்தக் கட்சியினதும் உதவியின்றி தனியொரு கட்சியாக விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் ஐ.தே.க ஆட்சி அமைத்துக் கொண்டது.

வரும் ஆகஸ்ட் 17ல் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தமது கூட்டணிகளின் கீழ் போட்டியிடவுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவின் யானைச் சின்னமும் மகிந்தவின் வெற்றிலையும் வாக்காளர் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளன.

ராஜபக்ச தனது தலைமையின் கீழ் அடுத்த நாடாளுமன்றை அமைக்க வேண்டும் எனக் கனவு காணுகிறார். முன்னாள் அதிபர் ஒருவர் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதன்முறையாகும். இரண்டு அதிபர் தேர்தல்களில் தோல்வியுற்ற ரணில் விக்கரமசிங்க தற்போது மூன்றாவது தடவையாக பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

நாட்டின் அதிபர் என்ற வகையில் இத்தேர்தலில் மைத்திரிபால சிறிசேன எக்கட்சிக்கும் ஆதரவளிக்காது நடுநிலை வகிக்கிறார். நாட்டில் ஆங்காங்கே சில தேர்தல் வன்முறைகள் இடம்பெற்ற போதிலும் இதுவரையில் மிகவும் அமைதியான ஒரு சூழல் நிலவுகிறது. தேர்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராகக் கடும் தண்டனைகள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இம்முறை சிறிலங்காவில் நேர்மையானதும் நீதியானதுமான தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்தியம் தென்படுகிறது. ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி போன்றன தடைசெய்யப்பட்டுள்ளன. போலி வாக்கு அட்டைகளைப் பயன்படுத்துவதற்கான கால அவகாசத்தை தேர்தல் ஆணையாளர் இம்முறை வழங்கவில்லை. இவ்வாறு பல்வேறு தேர்தல் சட்டங்கள் மேலும் இறுக்கமடைந்துள்ளன.

இம்முறை விக்கிரமசிங்கவும் ராஜபக்சவும் மிகவும் இறுக்கமான ஒரு தேர்தல் களத்தைச் சந்தித்துள்ளனர். அதாவது விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் இவ்விரு கட்சிகளில் எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை அடையாது என நம்பப்படுகிறது.

ஜே.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறைமையின் கீழ் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறுவது இதுவே கடைசித் தேர்தலாக இருக்கலாம். இந்த முறைமையானது வேட்பாளருக்கான முக்கியத்துவத்தை அதன் கட்சியின் ஊடாக வழங்குகிறது.

மனிதனை விட கட்சியே முக்கியம் என்பதாலேயே முதலில் யானையையும் அதன் பின்னரே மனிதனையும் அங்கீகாரிக்க வேண்டும் என்பது ஜே.ஆரின் கோட்பாடாகும். ஆகவே இந்த வகையில் ஜே.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் இடம்பெற்ற முதலாவது தேர்தலில் பிறேமதாச அறுதிப் பெரும்பான்மை வெற்றியைப் பெற்றிருந்தார்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மகிந்த அல்லது ரணில் அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதன் மூலம், 25 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1989ல் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறேமதாசாவின் சாதனையை ரணில் அல்லது மகிந்த ஆகிய இருவரில் எவராவது ஒருவர் முறித்துக் கொள்வாரா என்பதே தற்போது முன்வைக்கப்படும் கேள்வியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *