மேலும்

சயனைட் குப்பிகள், செய்மதி தொலைபேசியுடன் தமிழ்நாட்டில் ஐவர் கைது – பிரிஐ தகவல்

Arrestதமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளியில், இரு இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகள்( ஜிபிஎஸ்) மற்றும் செய்மதி தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறையினர் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, கார் ஒன்றை மறித்து சோதனையிட்ட அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்தக் காரில் இருந்து, செய்மதி தொலைபேசி ஒன்று, நான்கு புவிநிலைகாட்டி கருவிகள், 75 சயனைட் குப்பிகள், 300 கிராம் சயனைட் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்தக் காரில் பயணித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் இலங்கைத் தமிழ் அகதிகளாவர். ஏனையோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகளாலேயே சயனைட் குப்பிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் பிரிஐ குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, சென்னையில் இருந்து வெளியாகும் தமிழ் நாளிதழ் ஒன்றில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கிருஸ்ணகுமார் (39), சசிகுமார் (26), ராஜேந்திரன் (44) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிந்திய இணைப்பு

அதேவேளை, கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவரே இலங்கைத் தமிழர் என்று தி ஹிந்து நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1990களில் உறப்பினராக இருந்த கே.கிருஷ்ணகுமார் (வயது 39) என்பவரே அவர் என்றும் அவர் 2009இல் இந்தியா வந்ததாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இவரிடம் இருந்து நான்கு ஜிபிஎஸ் கருவிகள் ,ஏழு கைத்தொலைபேசிகள், 46,200 ரூபா இந்திய நாணயம், 19,300 ரூபா இலங்கை நாணயம், இந்திய, சிறிலங்கா சாரதி அனுமதிப்பத்திரங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இவருடன் கைது செய்யப்பட்ட சசிகுமார் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் மதுரையில் இருந்து கார் மூலம் உச்சிப்புளி வந்த போது கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட கே.கிருஷ்ணகுமார் திருச்சியில் கே.கே நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்து தங்கியிருந்ததாகவும், இரகசியமாக யாழ்ப்பாணம் செல்ல இவர் திட்டமிட்டிருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாகவும் தமிழ்நாடு காவல்துறையினரை மேற்கோள்காட்டி தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *