மேலும்

ஒக்ரோபர் 19 – படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களை நினைவு கூரும் நாளாக பிரகடனம்

nimalarajanவடக்கு, கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களையும் பொதுவாக நினைவு கூரும் நாளாக, ஒக்ரோபர் 19ஆம் நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை லண்டனில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்ற, சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் கூட்டத்திலேயே இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

லண்டனைத் தளமாக கொண்ட ஊடகவியலாளர்கள், பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பிபிசியின் முன்னாள் ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசமும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

இந்தக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில், ‘

தமிழ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட ஒக்ரோபர் 19ஆம் நாள், சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் படுகொலை செய்யப்பட்ட எல்லா ஊடகவியலாளர்களையும் நினைவு கூரும் நாளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

வடக்கில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளர் நிமலராஜன்.

தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு தமிழ் ஊடகவியலாளர்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.

அவர்கள் அடக்குமுறைகளைத் தாங்கிக் கொண்டு, தமது கடமைகளுக்காக செய்த தியாகம் அளவிடமுடியாதது.

2000ஆம் ஆண்டு ஒக்ரோபர் 19ஆம் நாள் தொடக்கம், 2009 மே 19ஆம் நாள் வரையான  எட்டு ஆண்டுகள், ஆறு மாதங்களில், தமது பேனாவினால்  தமிழ்மக்களுக்காக போராடிய, 43 தமிழ் ஊடகவியலாளர்களை இழந்திருக்கிறோம். இது தமிழ்ச் சமூகம் கொடுத்த மிகப் பெரிய விலை.

பெரும்பாலான ஊடகவியலாளர்களின் படுகொலையை தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் ஒரு அங்கமாகவே எடுத்துக் கொள்ள முடியும்.

பெரும்பாலான இந்தப் படுகொலைகள் நிழல் போர் நடந்த காலத்திலேயே இடம்பெற்றுள்ளன” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *