மேலும்

20 ஆசனங்களைப் பெறுவதன் மூலம் தீர்வுக்கான பேரம்பேசும் சக்தியை பெறமுடியும் – இரா.சம்பந்தன்

R.sampanthanநாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டால், ஏனைய இனத்தவர்களும், ஆட்சியாளர்களும் சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை, சேருவில தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சியின் தொகுதிக் கிளை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்கள் மற்றும் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன்-

“நாம் அதிகபட்சமாக 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெறுவதன் ஊடாக இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இன்றியமையாத பேரம்பேசும் சக்தியைப் பெற முடியும்.

இதனை, நாம் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்து கொண்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பயணத்தை நிறைவு செய்ய தயாராகவுள்ளோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதபலத்தை பார்த்து சிறிலங்கா அரசாங்கம் எம்மை பலமுறை பேச்சுக்கு அழைத்ததுடன் பல தீர்வுகளையும் முன்வைத்தனர்.

எனினும் கடந்த காலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்களை நாம் தவறவிட்டுள்ளோம்.

அந்த இராணுவ பலத்தை நாம் ஜனநாயக ரீதியில் அரசியல் பலமாகக் காட்டவேண்டிய தருணம் தற்போது தோன்றியுள்ளது.

இந்த அரசாங்கத்திடம் நாம் மிகவும் நிதானமாக நடந்து கொள்கிறோம்.

தற்போது சிறிலங்காவின் அதிபராக உள்ள மைத்திரிபால சிறிசேனவை நான் நீண்டகாலமாக அறிவேன்.

1994 ம் ஆண்டு முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தமிழ் மக்களுக்கான தீர்வுப் பொதியொன்றைக் கொண்டு வந்தபோது அவருக்குப் பக்கபலமாக இருந்தவர்.

தமிழ்மக்களுக்கு ஒரு தீர்வை வழங்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.

கடந்த அரசாங்கத்துடன் நடத்திய இரண்டு பேச்சுக்களை என்னால் மறக்க முடியாது. ஒன்று தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு பேசியது.

இரண்டாவது 13வது அரசியலமைப்பு திருத்தத்தில் மாற்றத்தை கொண்டுவர அமைச்சரவை உதவியுடன் மகிந்த ராஜபக்ச முயற்சித்தபோது நடைபெற்ற பேச்சு.

இந்த இரண்டு பேச்சுக்களிலும் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றிருந்தார்.

அப்போது அவர் சிறிலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் என்பதாலும் அதிகப்படியான சிங்கள மக்களின் ஆதரவை கொண்ட ஒரு தலைவர் என்பதனாலும் அன்றும் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

ஆயினும், அவர் இனவாதத்துடன் எந்த சந்தர்ப்பத்திலும் நடந்து கொள்ளவில்லை.

மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், மாட்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா ஆகிய பெரியோர்கள் வழியில் செல்லவுள்ளார்.

எனவே, இந்த ஆட்சியும் அமையவுள்ள ஆட்சியும் நமக்கு சாதகமான பல சந்தர்ப்பங்களை கொண்டுள்ளது. இதனை நாம் மிக சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *