மேலும்

ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து போரிட்ட இலங்கையர் சிரியாவில் விமானத் தாக்குதலில் பலி

srilankan-isஐஎஸ்Iஎஸ் எனப்படும் இஸ்லாமிய அரசுடன் இணைந்து போரிட்ட சிறிலங்காவைச் சேர்ந்த கராத்தே பயிற்சி ஆசிரியர் ஒருவர் சிரியாவில் கடந்தவாரம் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

அனைத்துலக மற்றும் சமூக ஊடகங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகளால் அபு சுரையாஹ் சைலானி என்ற பெயரிடப்பட்ட கண்டி, கலேவெலவைச் சேர்ந்த கராத்தே பயிற்சி ஆசிரியரே கொல்லப்பட்டவராவார். இவரது உள்ளூர் பெயர் வெளியிடப்படவில்லை.

ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து செயற்பட்டு மரணமான சிறிலங்காவைச் சேர்ந்த முதல் நபர் இவராவார்.

இவரிடம் கராத்தே பயின்ற மாணவர்கள், முகநூலில் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 25ஆம் நாள் மஹ்ரிப் தொழுகைக்குச் சென்று திரும்பிய போதே இவர் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக முகநூலில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

37 வயதான அபு சுரையாஹ் சைலானி, சிறிலங்காவில் கபொத சாதாரண தரக் கல்வியை முடித்த பின்னர் இஸ்லாமிய கோட்பாட்டுக் கல்வியை கற்றுள்ளார்.

srilankan-is

அத்துடன் பாகிஸ்தானின் அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் சரியா சட்டங்களில் எல்எல்பி பட்டம் பெற்றுள்ளனர்.

சிறிலங்காவில் கராத்தே பயிற்றுனராக இருந்த இவர்,  மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கருப்புப் பட்டியைப் பெற்றுள்ளதுடன் மகரகமவுக்கு வகுப்புகளை நடத்துவதற்காக வந்து சென்றுள்ளார்.

கொழும்பில் இருந்தே சைலானிக்கு நெருக்கமானவரும் தற்போது சிரியாவில் உள்ளவருமான ஒருவர் சைலானியின் மரணத்தை முகநூலில் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க கலேவெலக்கு காவல்துறையினரோ குற்றப்புலனாய்வுத் துறையினரோ அனுப்பி வைக்கப்படவில்லை என்று சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ரொகான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொள்ளவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *