மேலும்

மூன்று ஆண்டுகளில் 785 மில்லியன் ரூபாவை விமானப் பயணங்களுக்காகச் செலவிட்ட மகிந்த

mahinda-planeசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்துக்காக, சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானங்களை 785 மில்லியன் ரூபாவுக்கு வாடகைக்கு அமர்த்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டு தொடக்கம், 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின், விமானங்களை 90 பயணங்களுக்குப் பயன்படுத்தியுள்ளார் மகிந்த ராஜபக்ச. இதற்கான கட்டணம் 785,079,185 ரூபாவாகும்.

மகிந்த ராஜபக்ச, சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் ஒன்று அல்லது இரண்டு எயர்பஸ் ஏ-340 விமானங்களைப் பயன்படுத்துவது வழக்கம்.

இவற்றில் ஒன்று 243 ஆசனங்களையும், மற்றது 299 ஆசனங்களையும் கொண்டது. இவை சிறிலங்கன் நிறுவனத்திடம் உள்ள மிகப் பெரிய விமானங்களாகும்.

மகிந்த ராஜபக்ச இவற்றை வாடகைக்கு அமர்த்தும் போது கட்டணம் செலுத்திப் பயணிப்போருக்கு இவற்றில் இடம் கிடைப்பதில்லை. பல நாட்களுக்கு இந்த நிலை இருக்கும்.

இந்த மூன்று ஆண்டுகளில் 2012 ஜூன் மாதம், போர்த்துக்கல்லின் லிஸ்பன், கியூபாவின் ஹவானா, பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ, தென்னாபிரிக்காவின் ஜொஹானெஸ்பெர்க் நகரங்களுக்கு மேற்கொண்ட பயணங்களுக்கே, அதிகம் செலவாகியுள்ளது. இதற்கு 98,270,460 ரூபா அல்லது சுமார் 100 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

2013 மார்ச் மாதம் மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையத்தின் திறப்பு விழாவுக்காக  சிறிலங்கன் விமானம் ஒன்று1,780,800 ரூபாவுக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது.

2014 ஜூன் மாதம், மகிந்த ராஜபக்ச தென்னாபிரிக்காவின் கேப் டவுண், பொலிவியாவின் சான்டா குரூஸ்,  மாலைதீவு, சிசெல்ஸ் போன்ற நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்துக்காக 76,600,084 ரூபா விமானக் கட்டணமாக செலவிடப்பட்டுள்ளது.

2014 டிசெம்பரில் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, திருப்பதியில் வழிபாடு செய்வதற்காக மகிந்த ராஜபக்ச வாடகைக்கு அமர்த்திய விமானத்துக்கான 3,916,836 ரூபா கட்டணம் இன்னமும் செலுத்தப்படாமல் உள்ளது.

அத்துடன் 2014 ஒக்ரோபரில் ரோம் மற்றும் வத்திக்கானுக்கும், 2014 நொவம்பரில், காத்மண்டு மற்றும் மாலைதீவுக்கும் மேற்கொண்ட பயணங்களுக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்டதற்கான  44,195,550 ரூபா கட்டணத்தையும் மகிந்த ராஜபக்ச இன்னமும் செலுத்தவில்லை.

ஏனைய பெரும்பாலான பயணங்களுக்கான விமான வாடகைக் கட்டணம் அவர் ஆட்சியில் இருந்த போதே செலுத்தப்பட்டு விட்டது.

மகிந்த ராஜபக்ச மிகப் பெரிய விமானங்களை வாடகைக்கு அமர்த்தியதால், அந்த விமானங்களின் பயணங்கள் தடைப்பட்டது, ஏனைய விமானங்களின் அட்டவணையில் ஏற்பட்ட தாமதங்கள், மற்றும் ஏனைய விமானங்களை மாற்றியமைத்ததால் சிறிலங்கன் விமான நிறுவனத்துக்கு பல மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *