மேலும்

மகிந்த அணியை கிலிகொள்ள வைத்துள்ள மைத்திரியின் தாக்குதல் – அடுத்த கட்டம் குறித்து குழப்பம்

mahinda-medamulanaமகிந்த ராஜபக்சவை தாம் அங்கீகரிக்கவில்லை என்றும், அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்படாது என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை வெளியிட்ட கருத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவின் கருத்து வெளியானதையடுத்து, மகிந்த ராஜபக்ச அதிர்ச்சியடைந்ததாகவும், உடனடியாக தனக்கு நெருக்கமான தலைவர்களை மீரிஹானவில் உள்ள வீட்டுக்கு அழைத்து கலந்துரையாடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துக்களால் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குப் பெரும்  பின்னடைவு ஏற்படும், என்று கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவலை வெளியிட்டுள்ள அவர், தற்போதைய நிலைமை குறித்து ஆராய அவசரமாக கட்சியின் மத்திய செயற்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.

அதேவேளை, சிறிலங்கா அதிபரின் கருத்து, தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேராவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிக்கை ஒன்றை வெளியிடும் என்று, தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் குழு கூடி இதுபற்றி ஆராயும் என்றும், அதையடுத்து இந்த அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மைத்திரிபால சிறிசேனவின் தாக்குதல் மகிந்த அணியினரைக் கிலிகொள்ள வைத்துள்ளதாகவும், அடுத்த கட்டம் குறித்து தீர்மானிப்பதில் குழப்பமடைந்துள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *