மேலும்

மகிந்தவுக்கு பிரதமர் பதவியை மறுப்பது ஏன்? – மைத்திரி அளித்த விளக்கம்

maithriவரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றாலும், மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படமாட்டார் என்று தெளிவாகத் தெரிவித்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதற்கான காரணத்தையும் விபரித்துள்ளார்.

நேற்று சிறிலங்கா அதிபர் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்,

“வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றாலும், மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படமாட்டார்.

மகிந்த ராஜபக்சவை விடவும் பிரதமர் பதவிக்குப் பொருத்தமான பல மூத்த தலைவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கின்றனர்.

தகுதியுள்ள மூத்த தலைவர்களுக்கு மகிந்த ராஜபக்ச உரிய இடத்தை அளிக்க மறுத்து விட்டார் மகிந்த ராஜபக்ச.

இரண்டு தடவைகள் அதிபராக இருந்த பின்னரும் கூட, கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் இருந்து. மீண்டும் அவர் பிரதமர் பதவியைப் பிடுங்கிக் கொள்ள முயற்சிக்கிறார்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனுவில் இடமளிக்கப்பட்ட போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுக்காதமைக்கான காரணத்தையும் அவர் விபரித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்க வேண்டும் என்றும் அவரைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் பெரும்பாலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

அப்போது எனக்கு இரண்டு தெரிவுகள் இருந்தன. முதலாவது, கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகிக் கொள்வது.

ஆனால் நான் அதைச் செய்திருந்தால், மகிந்த ராஜபக்ச கட்சியின் தலைவராகியிருந்திருப்பார்.

அவர் தனது ஆதரவாளர்களை மட்டும் வேட்பாளர்களாக நிறுத்தி விட்டு, அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளரை ஆதரித்தவர்களையெல்லாம் பிடித்து வெளியே தள்ளியிருப்பார்.

எனவே தான், அதனைத் தடுப்பதற்காக கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதில்லை என்று முடிவெடுத்தேன். அது, மகிந்த ராஜபக்சவை அவர்கள் வேட்பாளராக நிறுத்த இடமளித்தது.

எனினும் மகிந்த ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்துவதற்கு நான் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தேன்.

இருந்தபோதிலும் நான் ஊடகங்களாலும் ஏனைய தரப்பினராலும் வில்லன் என்றும் துரோகம் என்றும் விமர்சிக்கப்படும் நிலையை ஏற்படுத்தியது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தில் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் சர்ச்சையில் சிக்கிய போது, அவரைப் பதவியில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொள்ளும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுக் கொண்டேன்.

சுத்தமான கறைபடியாதவராக இருக்கும் நீங்கள், உங்களின் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறினேன் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *