மேலும்

மருத்துவமனையில் சுசில் அனுமதிக்கப்பட்டதும் வேட்புமனுக்களை கைப்பற்ற ஓடிச்சென்ற மகிந்த

mahinda-signatureஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் நேற்றுமுன்தினம் இரவு திடீர் சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, வேட்புமனுக்களைப் பாதுகாப்பதற்காக  கூட்டம் ஒன்றில் இருந்து ஓடிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது-

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசியல்வாதிகள் பலருடைய வேட்புமனுக்களை கட்சி நிராகரித்திருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவின் கொழும்பு கெப்பிட்டிபொல மாவத்தையில் உள்ள இல்லத்தில் பெரியதொரு நாடகம் அரங்கேறியது.

பீலிக்ஸ் பெரேராவின் வீட்டுக்கு ஞாயிறு இரவு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வந்திருந்தார். அவருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜெயந்த் உள்ளிட்ட வேட்பாளர் நியமனக்குழுவின் உறுப்பினர்கள் சிலருக்கும் சந்திப்பு ஒன்று நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

மகிந்த ராஜபக்ச அங்கு வந்த போது, சுதர்சினி பெர்னான்டோ புள்ளே மற்றும் மாகாண மட்ட அரசியல்வாதிகள் பலரும் அங்கு இருந்தனர்.

மகிந்த ராஜபக்ச அங்கு வந்த பின்னர், கூட்டம் நடத்த அமைதியான இடம் ஒன்று தேவை எனக் கூறினார். முன்னாள் அமைச்சரின் வீட்டின் முதல் தளத்தில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு அவர் மூடிய அறையில், கொழும்பு மற்றும் கம்பகா மாவட்ட வேட்பமனுக்கள் தொடர்பாக சுசில் பிரேம் ஜெயந்த மற்றும், வேட்பாளர் நியமனக்குழுவின் உறுப்பினர்களுடன் பேச்சுக்களை நடத்தினார்.

கூட்டம் முடியும் வரை சுதர்சினி பெர்னான்டோ புள்ளே, பீலிக்ஸ் பெரேரா, மற்றும் மாகாண மட்ட அரசியல்வாதிகள் கீழ் தளத்தில் காத்திருந்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை உள்ளடக்க  வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச கூட்டத்தில் வலியுறுத்தினார் என தகவலறிந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன.

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து, அவரது மீள்வருகைக்கு ஆதரவாக கடந்த வாரம் கொழும்பில் பாரிய சுவரொட்டிப் பரப்புரையை மேற்கொண்டிருந்தார் துமிந்த சில்வா.

இந்தக் கூட்டத்தில் சரண குணவர்த்தனவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விவகாரமும் எழுப்பப்பட்டது. எவ்வாறாயினும், சரண குணவர்த்தனவுக்குப் பதிலாக, அவரது மனைவிக்கு கம்பகா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட இடமளிக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தின் முடிவில், அந்த அறையில் இருந்து தலையைப் பிடித்தவாறு வெளியே வந்த சுசில் பிரேம்ஜெயந்த வலியை உணர்வதாக தெரிவித்தார்.

சோர்வு மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு குறைந்ததால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சில நாட்களாக சுசில் பிரேம் ஜெயந்த வேட்பாளர் பட்டியல் தொடர்பான இறுக்கமான பணிகளை மேற்கொண்டிருந்தார் என்று பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார்.

சில நிமிடங்களில் பீலிக்ஸ் பெரேராவின் இல்லத்தில் இருந்து சுசில் பிரேம்ஜெயந்த அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு ஓய்வு தேவைப்பட்டது.

அதேவேளை, மகிந்த ராஜபக்ச பிலியந்தலவில் நடந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்கச் சென்றிருந்தார் மகிந்த ராஜபக்ச.

அப்போது தினேஸ் குணவர்த்தன தொலைபேசியில் அழைத்து, சுசில் பிரேம்ஜெயந்த நவலோகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தகவலைக் கூறினார்.

உடனடியாகவே அந்தக் கூட்ட மேடையில் இருந்து இறங்கினார் அவர். சுசில் பிரேம் ஜெயந்தவின் நிலையை அறியவும், வேட்புமனுக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் விரைந்து சென்றார்.

எவ்வாறாயினும், நேற்றுக்காலை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட சுசில் பிரேம் ஜெயந்த கொழும்பு மாவட்டச் செயலகத்தில் தமது வேட்புமனுவைச் சமர்ப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *