மேலும்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் 501 வேட்புமனுக்களில் 6,151 வேட்பாளர்கள் போட்டி

Mahinda Deshapriyaசிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள தேர்தலில் 6,151 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நேற்று நண்பகல் வேட்புமனுத் தாக்கல்  மற்றும் மீளாய்வு என்பன முடிவுற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

225 உறுப்பினர்களைக் கொண்ட சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 196 உறுப்பினர்கள், தேர்தல் மூலம் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகின்றனர். 29 உறுப்பினர்கள் தேசியப்பட்டியலில் இருந்து நியமிக்கப்படுவர்.

சிறிலங்காவில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களிலும், 196 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக ஓகஸ்ட் 17ஆம் நாள் நடத்தப்படவுள்ள தேர்தலில், 6,151 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இவர்களில் 3,653 வேட்பாளர்கள் 22 அரசியல் கட்சிகளின் சார்பாகவும்,  2,498 வேட்பாளர்கள் சுயேச்சை குழுக்களின் சார்பாகவும் போட்டியிடுகின்றனர்.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 537 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 36 வேட்புமனுக்கள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டன. 501 வேட்பு மனுக்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்பட்டன.

22 அரசியல் கட்சிகளின் 300 வேட்புமனுக்களும், சுயேச்சைக் குழுக்களின் 201 வேட்புமனுக்களும் போட்டிக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *