மேலும்

குருநாகல மாவட்டத்தில் சரத் பொன்சேகா போட்டி? – மகிந்தவுடன் மல்லுக்கட்டப் போகிறார்

Mahinda-Fonsekaநாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் வகையில், சரத் பொன்சேகாவை அங்கு களமிறக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஏற்கனவே கொழும்பு மாவட்டத்தில் தனது ஜனநாயக கட்சி சார்பில் தனித்துப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மகிந்த ராஜபக்சவின் ஆதிக்கம் அதிகரித்து, அவர் குருநாகலவில் போட்டியிடவுள்ள நிலையில், சரத் பொன்சேகா கொழும்பில் தனது வேட்புமனுவில் இருந்து விலகி, குருநாகலவில் ஐதேகவின் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு சிறப்பு பதவி ஒன்றை அளிக்கவும் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, குருநாகலவில் உள்ள கிறீன்பீல்ட் விடுதியில்  தனது கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய சரத் பொன்சேகா, தாம் வடமேல் மாகாணத்தில் இருந்தே அரசியலை ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளார்.

“சிறையில் இருந்து விடுதலையான பின்னர், மேல் மாகாணத்தில் இருந்தே அரசியலை ஆரம்பித்தேன்.

உள்நாட்டு அரசியலில் குருநாகல மாவட்டம் மிக முக்கியமான இடமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இங்கு பெரியளவு வாக்கு வங்கி உள்ளது. இந்த தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் வெற்றிலை தோற்கடிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குருநாகல மாவட்டம் சிறிலங்காவில் அதிக வாக்காளர்களைக் கொண்ட மூன்றாவது மாவட்டமாகும்.

இங்கு அதிகளவில் சிறிலங்காப் படையினரும், ஓய்வுபெற்ற படையினரும், போரில் இறந்த படையினரின் குடும்பங்களும் வாக்காளர்களாக உள்ளனர்.

சரத் பொன்சேகா களமிறங்கினால், போர் வெற்றியை மையப்படுத்திய பரப்புரைகளின் மூலம், குருநாகலவில் மகிந்த ராஜபக்ச பெறக் கூடிய வாக்குகள் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *