மேலும்

மைத்திரியின் அடுக்கடுக்கான நிபந்தனைகளால் அதிர்ந்து போயுள்ள மகிந்த தரப்பு

mahinda-ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுடன் நேற்று நடத்திய நீண்ட பேச்சுக்களை அடுத்து, வேட்பாளர் பட்டியலில் மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்க முடிவு செய்துள்ள மைத்திரிபால சிறிசேன, அதற்காக பல நிபந்தனைகளையும் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நியமனக்குழுவுடன் நேற்று  மைத்திரிபால சிறிசேன ஆலோசனை நடத்தியிருந்தார்.

விஜேராம மாவத்தையில்உள்ள அதிபரின் இல்லத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜெயந்த, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலர் அனுர பிரியதர்சன யாப்பா, எஸ்.பி.திசநாயக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதற்கு முன்னதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  கட்சித் தலைவர்களுடன் சுசில் பிரேம் ஜெயந்த ஆலோசனை நடத்தினார்.

அதேவுளை, மகிந்த ராஜபக்சவுக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம் என்ற நிலையில் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில், மகிந்த ராஜபக்ச அணியினரும் கூடி ஆராய்ந்தனர். இதில் சுசில் பிரேம் ஜெயந்தவும் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் அவர் மகிந்த ராஜபக்சவுக்கு வாய்ப்பளிக்கும் முடிவில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, பல்வேறு தரப்பினருடன் நடத்திய ஆலோசனைகளை அடுத்து, சில நிபந்தனைகளுடன் மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட வாய்ப்பளிப்பதென மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக நேற்றிரவு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, அம்பாந்தோட்டை மாவட்டத்திலேயே மகிந்த ராஜபக்ச போட்டியிட வேண்டும்.

அவரை பிரதமர் வேட்பாளராக நியமிக்க முடியாது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைக் குழுத் தலைவராகவோ அல்லது மாவட்டத்தின் தலைமை வேட்பாளராகவோ அறிவிக்க முடியாது.

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தமக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றினாலும் கூட மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதாக வாக்குறுதி அளிக்க முடியாது என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்துக்கமையவே பிரதமர் தெரிவு செய்யப்படுவார் என்றும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிபந்தனைகளின் படி, பிரதமராக நியமிக்கப்படாவிடின் சாதாரணமான ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவே மகிந்த ராஜபக்ச இருக்க முடியும் என்றும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு போட்டியிட இடமளிப்பது குறித்தும், மைத்திரிபால சிறிசேன கடும் போக்கை வெளிப்படுத்தியுள்ளார்.

ஊழல் மோசடி, மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ள சஜின்வாஸ் குணவர்த்தன, துமிந்த சில்வா, மேர்வின் சில்வா, பிரேமலால் ஜெயசேகர ஆகியோருடன், மகிந்தவுக்கு நெருக்கமான, ரோகித அபேகுணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, லக்ஸ்மன் வசந்த பெரேரா, மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மகிந்த ஆதரவு மேல்மாகாணசபை உறுப்பினர் சமன்மல்லி சகலசூரியவுக்கும் வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்ப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டால், தாமும் போட்டியிடுவேன் என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவும் தெரிவித்துள்ளார்.

சந்திரிகாவின் நிலைப்பாடு தெளிவானது. அவர் தேசியப்பட்டியலின் ஊடாக வரமாட்டார். அவர் தேர்தலில் போட்டியிட்டு, மக்களின் வாக்குகளுடன் நாடாளுமன்றம் வருவார் என்று அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் நிபந்தனைகளாலும், தமது ஆதரவாளர்கள் ஓரம்கட்டப்படும் நிலையிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டால், மகிந்த ராஜபக்ச தரப்பு தனித்துப் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவரது பெயர்களையும், உன்னிப்பாக அவதானித்து, ஆலோசனை நடத்தியே அதற்கு அனுமதி அளிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *