மேலும்

முன்னாள் போராளிகள் கட்சியின் கோரிக்கையை நிராகரித்தது கூட்டமைப்பு

TNApressவரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் போராளிகளின் புதிய அமைப்பான, ஜனநாயகப் போராளிகள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன், முன்னாள் போராளிகளின் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ந.வித்தியாதரன் தலைமையிலான குழுவினர் நடத்திய பேச்சுக்கள் தோல்வியில் முடிந்துள்ளன.

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கூட்டமைப்பின் தரப்பில் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டனர்.

tna-ex-ltte

இந்தப் பேச்சுக்களை அடுத்து கருத்து வெளியிட்ட, முன்னாள் போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ந.வித்தியாதரன், தமக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கும் இடையில் நடந்த சந்திப்பு வெற்றியளிக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், அவர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பத்தை, இந்தச் சந்திப்பின்போது முன்வைத்தோம்.

எனினும் இப்போதைய அரசியல் சூழலில் முன்னாள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்படுவது தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக அமையும் என கூறி எமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, முன்னாள் போராளிகள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து அரசியலில் ஈடுபடுவதற்கு கூட்டமைப்பு இணங்கவில்லை என்பது தமக்கு வேதனையும் மனவருத்தமும் அளிக்கிறது என, கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் போராளி துளசி தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து, தாம் பேச்சுக்களை நடத்தி தீர்மானிக்கப் போவதாகவும் துளசியும் வித்தியாதரனும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *