மேலும்

கூட்டமைப்பில் சுமுகமான முறையில் ஆசனப்பங்கீடு – 24 வேட்பாளர்களை நிறுத்துகிறது தமிழரசுக் கட்சி

tna-leadersவரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடு குறித்த பேச்சுக்களில் சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று மாலை நடந்த பேச்சுக்களை அடுத்தே இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இந்தப் பேச்சுக்களில் பங்கெடுத்திருந்தனர்.

tna-leaders

இதையடுத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும், இலங்கை தமிழரசுக் கட்சி 24 வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது.

ஈபிஆர்எல்எவ் 8 வேட்பாளர்களையும், ரெலோ 7 வேட்பாளர்களையும், புளொட் 4 வேட்பாளர்களையும் நிறுத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவட்ட ரீதியாக, யாழ். மாவட்டத்தில், தமிழரசுக் கட்சி- 6 வேட்பாளர்களையும், ஈபிஆர்எல்எவ் 2 வேட்பாளர்களையும், புளொட் மற்றும் ரெலோ ஆகியன தலா 1 வேட்பாளரையும் நிறுத்தும்.

வன்னி மாவட்டத்தில், தமிழரசுக் கட்சி 3 வேட்பாளர்களையும், ரெலோ 3 வேட்பாளர்களையும், ஈபிஆர்எல்எவ் 2 வேட்பாளர்களையும், புளொட் 1 வேட்பாளரையும் நிறுத்தவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி 5 வேட்பாளர்களையும், ஈபிஆர்எல்எவ் , புளொட் மற்றும் ரெலோ ஆகியன தலா 1 வேட்பாளரையும் நிறுத்தும்.

அம்பாறை மாவட்டத்தில், தமிழரசுக் கட்சி- 6 வேட்பாளர்களையும், ஈபிஆர்எல்எவ் 2 வேட்பாளர்களையும், புளொட் மற்றும் ரெலோ ஆகியன தலா 1 வேட்பாளரையும் நிறுத்தவுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில், தமிழரசுக் கட்சி 4 வேட்பாளர்களையும், ஈபிஆர்எல்எவ் மற்றும் ரெலோ ஆகியன தலா 1 வேட்பாளரையும் நிறுத்துவதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *