மேலும்

வித்தியா படுகொலை வழக்கு சிறப்பு நீதிமன்றம் மூலம் துரிதமாக விசாரணை – மைத்திரி உறுதி

maithiri-jaffna (3)புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக, சிறப்பு நீதிமன்றம் ஊடாக துரிதமாக விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார்.

வித்தியா படுகொலையை அடுத்து எழுந்துள்ள சூழ்நிலைகள் குறித்து நேரில் பார்வையிடுவதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்துக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

இன்று காலை 10.15 மணியளவில் யாழ். மாநகரசபை மைதானத்தில் உலங்குவானூர்தியில் வந்திறங்கிய சிறிலங்கா அதிபரை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர்.

அங்கிருந்து, யாழ். வேம்படி உயர்தர பெண்கள் பாடசாலைக்குச் சென்ற சிறிலங்கா அதிபர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

வட மாகாணத்தில் உள்ள 17 பாடசாலை மாணவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன் போது மாணவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட, மைத்திரிபால சிறிசேன, அவற்றைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார்.

maithri-jaffna (1)maithri-jaffna (2)maithri-jaffna (3)maithri-jaffna (4)maithri-jaffna (5)maithri-jaffna (6)

குறிப்பாக வித்தியா படுகொலையை அடுத்து மாணவிகளுக்கு எழுந்துந்ந பாதுகாப்பு பிரச்சினை மற்றும் பாடசாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்துள்ள பாதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை குறித்தும் சிறிலங்கா அதிபருக்கு மாணவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கு, மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக, சிறப்பு நீதிமன்றம் ஊடாக துரிதமாக விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக, சிறிலங்கா அதிபர் உறுதியளித்தார்.

அத்துடன், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் ஒருமுறை நாட்டில் ஏற்பட இடமளிக்கமாட்டேன் என்றும் அவர் உறுதி அளித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கிடையே அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை தொடர்பாக, பாதுகாப்புத் தரப்பினரை அறிவுறுத்தி சிறிப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுனரின் அதிகாரபூர்வ வதிவிடத்துக்குச் சென்ற, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அங்கு,  மாணவி வித்தியாவின் தாயார் மற்றும் சகோதரனைச் சந்தித்து, கவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.

அதன் பின்னர், யாழ். நாகவிகாரைக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டு விட்டு கொழும்புக்குப் புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *