மேலும்

போர்க்களமானது யாழ். நீதிமன்ற வளாகம் – கல்வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச்சூடு

jaffna-court-demoயாழ்.நீதிமன்ற வளாகத்தைச் சூழ்ந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், நீதிமன்றத்தின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதையடுத்து, சிறிலங்கா காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும், அவர்களை கலைத்தனர்.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக கொழும்பில் கைது செய்யப்பட்ட ஒன்பதாவது சந்தேகநபர் மற்றும் அவரைத் தப்பிச் செல்ல உதவிய சட்ட விரிவுரையாளர் வி.ரி.தமிழ்மாறன் ஆகியோர், இன்று மதியம் யாழ். நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என்று நேற்று வட பிராந்திய பிரதி காவல்துறை மா அதிபர் உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலையில் இருந்தே யாழ். நீதிமன்ற வளாகத்தின் இரு புறத்திலும் கூடிய பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தினர்.

ஒரு கட்டத்தில் இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது.

jaffna-court-demo (1)

jaffna-court-demo (2)jaffna-court-demo (3)jaffna-court-demo (5)jaffna-court-demo (4)jaffna-court-demo (6)

காவல்துறையினரின் தடுப்புகளை மீறி நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைய முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், கற்களையும், கையில் அகப்பட்ட பொருட்களையும் வீசியெறிந்து தாக்கினர்.

இதனால், நீதிமன்ற கண்ணாடிகள் நொருங்கின. நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை வாகனங்களும் அடித்து நொருக்கப்பட்டன.

அப்பகுதியில் காவலில் இருந்து மூன்று காவல்துறையினரும் காயமடைந்தனர்.

இதையடுத்து, சிறிலங்கா காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்தனர்.

வன்முறையில் ஈடுபட்டதாக 25 பேரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

எனினும், சற்றுத் தொலைவில் இருபுறமும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்துள்ளனர்.

இதனால் பெரும் பதற்றநிலை யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ளது.

போராட்டம் வன்முறையாக மாறி வரும் நிலையில் மேலதிக காவல்துறையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *