மேலும்

பாலச்சந்திரன் சண்டையிலேயே உயிரிழந்திருக்க வேண்டும் என்கிறார் சரத் பொன்சேகா

field-marshan-sarath-fonseka (1)வன்னியில் போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டதான குற்றச்சாட்டையும், பாலச்சந்திரன் பிரபாகரன் படுகொலைக் குற்றச்சாட்டையும், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.

போர் நிறைவடைந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்திருந்த செவ்வியிலேயே, போருக்குத் தலைமை தாங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

“விடுதலைப் புலிகளுக்கு எதிராக கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தும் சுதந்திரம் வழங்கப்படாமையால், சிறிலங்கா இராணுவம் மிக கடுமையான விலையைக் கொடுக்க நேரிட்டது.

பொதுமக்களைக் கருத்தில் கொண்டு நான்கரை மாதங்கள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பதை விட வேறு வழி இராணுவத்துக்கு இருக்கவில்லை.

வெளிநாட்டு அழுத்தங்களினால், கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்று அரசாங்கம் எடுத்த முடிவினால், எமது படையினர் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

2009 ஜனவரி தொடக்கம்  மே வரையான காலத்தில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் படையினருமாக, 2000 பேர் கொல்லப்பட்டனர். 2008ம் ஆண்டு முழுவதும் கொல்லப்பட்ட படையினருக்கு சமமான எண்ணிக்கை இது.

முன்னெப்போதும் இல்லாதளவுக்கு ஏற்பட்ட இந்த இழப்புகள், போர் எந்தளவுக்கு கடுமையான சூழலில் இடம்பெற்றது என்பதை வெளிப்படுத்துகிறது.

நான்காவது கட்ட ஈழப்போரில் இராணுவம் 5000 படையினரை இழந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனான 12 வயதுடைய பாலச்சந்திரன், சண்டையின் போதே உயிரிழந்திருக்க வேண்டும்.எனது படையினர் அதற்குப் பொறுப்பு அல்ல.

போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தால், அங்கு எலும்புக்கூடுகள் தான் மிஞ்சியிருக்கும்.

சரணடைந்த விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதான குற்றச்சாட்டுக் குறித்து கருத்து வெளியிட முடியாது.

ஊடகங்களால் விவாதிக்கப்பட்ட வெள்ளைக் கொடி சம்பவம், இயந்திரக் காலாற்படைக்குத் தேவையான கவச போர் ஊர்திகளை வாங்குவதற்காக  நான் சீனா சென்றிருந்த போதே நடந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

2009  மே 11ம் நாள் சீனா சென்ற நான், மே 17ம் நாள் காலை 9 மணியளவிலேயே நாடு திரும்பினேன்.

நடவடிக்கைத் தலைமையகத்தில் நான் இல்லாவிட்டாலும் நாளொன்றுக்கு மூன்று தடவைகள் நான் வழிகாட்டல் கட்டளைகளை வழங்கிக் கொண்டிருந்தேன்.

நான் சீனாவுக்குப் புறப்பட்ட போதே, போர்,  சார்ஜன்ட்கள் மற்றும் கோப்ரல்களுக்கு (இளநிலை அதிகாரிகள்) மாற்றப்பட்டு விட்டது.

எதிரிகள் 12 கி.மீ  நீளமான, 2 கி.மீ அகலமான பகுதிக்குள் சிக்கி விட்டனர். சார்ஜன்ட்களும், கோப்ரல்களும் எதிரிகளின் நிலப்பகுதிக்குள் முன்னேறுவதற்கு தலைமை தாங்கினர்.

இரண்டு வாரங்களுக்கு மேல் விடுதலைப் புலிகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை”  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *