மேலும்

வடக்கு, கிழக்கின் தேர்தல் தொகுதிகள் பறிபோகாது – பிரதான கட்சிகள் இணக்கம்

sri lanka parliamentசிறிலங்காவின் தேர்தல் முறையை மாற்றியமைக்கும், உத்தேச 20வது திருத்தச்சட்டத்தில், வடக்கு, கிழக்கில் தற்போதுள்ள தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்ட காலத்துக்குள் மாற்றியமைப்பதில்லை என்று இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தேச 20வது திருத்தச்சட்டம் தொடர்பாக இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட அமைச்சரவை உப குழுக்கூட்டத்தின் பின்னர், அமைச்சர் திகாம்பரம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவின் புதிய தேர்தல் முறைப்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225இல் இருந்து 255 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், தொகுதி மூலம் நேரடியாகவும், விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை மூலம் மாவட்ட அடிப்படையிலும், தேசியப்பட்டியல் மூலமும், பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

உத்தேச திருத்தச்சட்டத்தின் மூலம், தொகுதிகள் மீள்நிர்ணயம் செய்யப்படும் போது, வடக்கு மற்றும் கிழக்கில், தொகுதிகள் மற்றும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் போரினால் இலட்சக்கணக்கான வாக்காளர்கள் இடம்பெயர்ந்துள்ளதால், ஏற்கனவே இருக்கும் பல தொகுதிகள் காணாமற்போகும்.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில், ஏற்கனவே 11 தேர்தல் தொகுதிகள் இருந்த நிலையில், தொகுதி மீள்நிர்ணயம் செய்யப்பட்டால் அது 6 அல்லது ரூ ஆக குறைவடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் சுட்டிக்காட்டி, வடக்கு கிழக்கில் தேர்தல் தொகுதிகளை மீள நிர்ணயம் செய்வதை 10 ஆண்டுகளுக்கு பிற்போட வேண்டும் என்ற கோரியிருந்தன.

இந்தக் கோரிக்கையை, பிரதான கட்சிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாக அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இதன்படி யாழ்ப்பாணம், உள்ளிட்ட வடக்கு கிழக்கில், மீள்குடியமர்வு நிறைவடையும் வரை குறிப்பிட்ட காலத்துக்கு தொகுதிகளை மீள் நிர்ணயம் செய்வதில்லை என்று இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, 20வது திருத்தச்சட்டம் தொடர்பாக, சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்கு மத்தியில் இருந்த பல முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

இந்த திருத்தச்சட்ட வரைவு வரும் 20ம் நாள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பின்னர், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *