மேலும்

நேபாள மீட்பு நடவடிக்கையும், இந்தியா – சீனாவின் மூலோபாய நலன்களும்

indians-nepalநேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு அதிகளவில் அழிவு ஏற்பட்டதன் பின்னர்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்குவதற்காக அணுவாயுதப் போட்டியாளர்களான இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் விரைந்து சென்றதற்கு, சிக்கலான பூகோள அரசியல் நிர்ப்பந்தங்கள் மற்றும் நடைமுறை நலன்களைக் கொண்டுள்ளமையே காரணமாகும்.

இவ்விரு நாடுகளும் நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள், மோப்ப நாய்கள் மற்றும் சிறப்பு உபகரணங்கள் போன்றவற்றை நேபாளத்தின் பாதிக்கப்பட்ட இமாலய மாநிலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தினர்.

இவ்விரு நாடுகளினதும் மீட்புப் பணியாளர்கள் பல தொன் கணக்கான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளனர். அத்துடன் அழிவுகளுக்குள் சிக்குண்ட மக்களைக் காப்பாற்றுவதற்காக இணைந்து பணியாற்றியுள்ளனர்.

ஆனால் இராணுவ வீரர்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட இவ்விரு நாடுகளினதும் மீட்பு நடவடிக்கைகள் பரந்தளவிலான மூலோபாய நலனைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

எவ்வாறிருப்பினும் இந்தியாவின் சமூக ஊடகம் ஒன்றால் வெளியிடப்பட்ட நேபாள நிலநடுக்கம் தொடர்பான உள்ளடக்கமானது உணர்வற்ற ஒன்று எனவும் தேசப்பற்றை மையப்படுத்தியதாக இருந்ததாகவும் நேபாளிகள் முறையிட்டுள்ளனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அகப்பட்ட தனது நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்டெடுப்பதை நோக்காகக் கொண்டே இந்தியா, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், தமது நாட்டை ‘கொலனித்துவம்’ ஆக்குவதற்கான ஒரு மூலோபாயத்துடனேயே நேபாள மீட்பு நடவடிக்கையில் தனது நாட்டு இராணுவத்தினரை இந்தியா  பயன்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.

இவ்வாறான எந்தவொரு மூலோபாய அல்லது போட்டிமிக்க நோக்கங்கள் எதனையும் கருத்திற் கொண்டு மீட்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை என இந்திய மற்றும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது பிராந்தியப் போட்டி நிலையின் ஒரு பகுதியாகவே நேபாளத்தில் இவ்விரு நாடுகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர் என்கின்ற குற்றச்சாட்டை இவ்விரு நாடுகளினதும் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

‘இந்தியா மற்றும் சீனாவால் பாதிக்கப்பட்ட நேபாளிகளுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் சாதாரண உதவியை விட அதிகமாகும். இவ்விரு நாடுகளும் நேபாளத்தில் நீண்டகால செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கான ஆழமான திட்டத்தின் ஒரு பகுதியாகவே இவ்வாறான உதவிகளை வழங்கியுள்ளனர்’ என புதுடில்லியிலுள்ள மூலோபாய முயற்சிகளுக்கான அமைப்பின் பாதுகாப்பு ஆய்வாளர் பிரிகேடியர் அருண் சாகல் தெரிவித்துள்ளார்.

இந்து மதத்தவர்களை அதிகமாகக் கொண்ட நாடாக நேபாளம் விளங்குவதால் மட்டுமன்றி நேபாளம் மற்றும் இந்தியா ஆகியவற்றின் கலாசாரம், மொழி மற்றும் உணவுப் பழக்கங்கள் போன்றன ஒத்ததாகக் காணப்படுவதாலேயே இந்தியா, நேபாளத்தின் மீது நீண்டகாலச் செல்வாக்கைப் பேணிவந்துள்ளது.

கடந்த ஆண்டிலிருந்து நேபாளமானது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பொதுமக்கள், பொருளாதாரம் மற்றும் மூலோபாய உறவுகளை சார்க் அமைப்பிலுள்ள அதன் ஏழு அயல்நாடுகளுடனும் விரிவுபடுத்துகின்ற கோட்பாட்டிற்கு நேபாளம் மிக முக்கிய பங்காளியாகக் காணப்படுகிறது.

நேபாளத்துடனான இந்தியாவின் உறவுநிலை மேலும் நெருக்கமானதாகக் காணப்படுகிறது.  இந்தியாவில் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட நேபாளிகள் வசிக்கின்றனர். இதேபோன்று பத்தாயிரக்கணக்கான இந்தியர்கள் நேபாளத்தில் வசிக்கின்றனர்.

இவ்விரு அயல்நாடுகளுக்கும் இடையில் இலவச நுழைவிசைவுப் போக்குவரத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல நூற்றுண்டுகளாக பாரம்பரிய நிகழ்வாக ஆண்டு தோறும் நேபாளத்திலிருந்து ‘கூர்க்கா’ வீரர்கள் இந்திய இராணுவத்தில் தொடர்ந்தும் இணைக்கப்படுகின்றனர். இதேபோன்று ஓய்வுபெற்ற முன்னாள் படைத் துறைத் தலைவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதிய நிதியாக பல பில்லியன் ரூபாக்கள் செலவிடப்படுகின்றன.

கார், மோட்டார் சைக்கிள், பொறியியல் மற்றும் மின்சாரப் பொருட்கள், உடைகள், மருந்துப் பொருட்கள், குடிபான வகைகள் மற்றும் சிகரட்டுக்கள் போன்றன இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

பல பத்தாண்டுகளாக இந்தியாவின் வர்த்தக மார்வாடி சமூகத்தவர்கள் நேபாளத்தில் மிகப் பாரிய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவர்கள் சுற்றுலாத்துறை, விவசாயம் போன்ற பல தொழில்களில் ஈடுபடுகின்றனர்.

‘தனது வர்த்தக மற்றும் போக்குவரத்து மார்க்கங்களுக்கு இந்தியாவிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பது முற்றிலும் கடலால் சூழப்பட்ட நேபாளத்திற்கு நன்கு தெரியும் என்கிறார் சாகாய்.

இவ்வாறான ஒரு சூழலில், கடந்த இரு பத்தாண்டுகளாக, இந்தியாவின் செல்வாக்கை மட்டுப்படுத்துவதற்கு நேபாளம், சீனாவை எதிர்பார்க்கிறது எனவும் சாகாய் தெரிவித்தார்.

1987ல் இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் நேபாளம் மீது நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டிருந்த முற்றுகையை நினைவுபடுத்தும் நேபாளிகள் தம்மை வசியப்படுத்துவதற்கு இந்தியா சிறிதளவு முயற்சியை மேற்கொண்டுள்ளதாகக் கருதுகிறார்கள்.

சீனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நேபாளம் உடன்படிக்கை எட்டிய பின்னர், நேபாளத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்காக இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இரு தரப்பு வர்த்தகம் மற்றும் போக்குவரத்து உடன்படிக்கை போன்றவை மீறப்பட்ட பின்னர் அதனை முறியடிப்பதற்காக நேபாளம் மீது இந்தியா முற்றுகையை மேற்கொண்டது.

நேபாளம் மீதான இந்தியாவின் முற்றுகையானது இந்தியாவின் ‘பெரிய சகோதரன்’ என்கின்ற மனப்போக்கில் கசப்பை ஏற்படுத்தியது.  இதனால் இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையிலான நட்புறவு மற்றும் இரு தரப்பு உறவுநிலை விரிசலடைந்தது. இதனால் நேபாளம் புதுடில்லி பக்கம் திரும்பாது, சீனா மீது செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்தது.

2014ல், நேபாளத்தின் அதிக முதலீட்டளராக இருந்த இந்தியாவை சீனா பின்னுக்குத் தள்ளியது. குறிப்பாக, கட்டுமானம் மற்றும் சக்தித் துறைகளின் ஊடாக சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக தனது நேபாள எல்லையிலிருந்து இமயமலைக்குக் குறுக்காக தொடருந்து மற்றும் வீதிகளை விரிவுபடுத்தியது.

இது காத்மண்டுவுடன் இணைக்கப்படலாம். அவ்வாறு இணைக்கப்பட்டால் இது தொடர்பாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர்கள் கவலை கொள்ள நேரிடும்.

இந்தியாவின் அயல்நாடுகளான பங்களாதேஸ், பூட்டான், மாலைதீவு, பாகிஸ்தான் மற்றும் சிறிலங்கா போன்றவற்றுடனும் ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் பர்மா போன்றவற்றுடன் சீனா பாதுகாப்பு, இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவைப் பேணுவதானது அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.

இவ்வாறான திட்டங்கள் சீனாவின் பட்டுப் பாதை பொருளாதாரத் தொடரை உருவாக்குவதற்கான திட்டங்களில் ஒன்றாகும். அதாவது சீனா தனது பிராந்தியத்தில் மிகவும் பரந்த மேலாதிக்க குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்கான ஒரு முயற்சியாகவே பட்டுப் பாதைத் திட்டத்தை மேற்கொள்கிறது.

எனினும், சீனாவின் பிரசன்னமானது பொதுவாக நேபாளத்தில் வரவேற்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் – ராகுல் பேடி

ஆங்கில வழிமூலம்  – irishtimes

மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *