மேலும்

பொறுப்புக்கூறல் நிலைப்பாட்டில் இருந்து விலகாது அமெரிக்கா – கூட்டமைப்பிடம் ஜோன் கெரி உறுதி

john-kerry-TNA meeting (7)சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள புதிய சூழலைத் தமிழர் தரப்பு, சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான பயணத்தின் இரண்டாவது நாளான இன்று காலையில், கொழும்பில், தாஜ் சமுத்ரா விடுதியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை, 9.30 மணியளவில் ஆரம்பித்த இந்தப் பேச்சுக்கள், சுமார் 45 நிமிடங்கள் வரை இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவை.சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், இந்தச் சந்திப்பில் பங்கேற்றார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலருடன், தெற்கு மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது, தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும், தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டியதன் அவசியம் மற்றும், அதற்கான அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பின் அவசியம் குறித்தும், இரா. சம்பந்தன் எடுத்துக் கூறியிருந்தார்.

john-kerry-TNA meeting (1)

john-kerry-TNA meeting (2)

அத்துடன், வடக்கு மாகாணத்தில் உள்ள நிலவரங்கள் மற்றும், வடக்கிலுள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மற்றும் அவற்றுக்கான தீர்வு யோசனைகள் அடங்கிய விபரமான ஆவணம் ஒன்றை, அமெரிக்க இராஜாங்கச் செயலரிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கையளித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, சிங்கள மற்றும் தமிழ்த் தலைவர்கள் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளத்தக்க அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு ஆக்கபூர்வமாக இணைந்து செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், போர்க்காலத்தில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கும், நல்லிணக்கத்துக்கும் அமெரிக்கா தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுக்கும் என்றும் ஜோன் கெரி உறுதியளித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய விடயங்களில், உண்மையான மற்றும் நம்பகமான செயல்முறைகளை ஏற்படுத்துவதில், அமெரிக்கா அர்ப்பணிப்புடன் இருப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வலியுறுத்தியுள்ளார் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு ஆக்கபூர்வமானதாகவும், திருப்தியாகவும் அமைந்தது என்று, உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, அமெரிக்க இராஜாங்கச் செயலருடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களும், தெரிவித்துள்ளனர்.

john-kerry-TNA meeting (3)

john-kerry-TNA meeting (4)

இந்தச் சந்திப்புக் குறித்தும், இதில் பேசப்பட்ட விடயங்கள் குறித்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் வெளியிட்ட கருத்துக்கள்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்-

அமெரிக்க இராஜாங்க செயலருடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்திருந்தது. தற்கால பிரச்சினைகள், நிலையான அரசியல்தீர்வு,  மற்றும் காணி விவகாரம், மீள்குடியேற்றம், காணாமல்போனோர் விடயம், அரசியல் கைதிகள் தொடர்பாக விரிவான பேச்சுகளை நடத்தியுள்ளோம்.

இந்த விவகாரங்களில், அமெரிக்கா தொடர்ந்தும், எமக்கு உதவும் என்று உறுதியளித்துள்ளது. இதனை ஒரு வெற்றிகரமான சந்திப்பாக கருதுகின்றோம்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்-

தற்போதைய சூழ்நிலை நல்லமுறையில் மாற்றமடைந்து வரும் போது, அதனை தமிழர் தரப்பாகிய எமக்குச் சாதமாக பயன்படுத்த வேண்டும்.

அந்த அடிப்படையிலே பலவிதமான பிரச்சினைகளை நாம் எதிர்நோக்கினாலும், சூழ்நிலையின் தன்மையினைக் கருதி, கொடுத்து எடுத்து எமது பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதை அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் எமது பிரச்சினைகள் தொடர்பாக தாம் நன்றாக உணர்ந்து கொண்டிருப்பதாகவும் அந்த உணர்வுடனேயே அமெரிக்கா செயற்படுவதாகவும் அதனை நாம் மனதில் நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அதனடிப்படையில் வெகுவிரைவில் அரசியல் ரீதியான மாற்றங்களையும் நன்மைகளையும் நாம் பெற்றுக் கொள்வதற்கான ஏது நிலைகள் உருவாகும் எனக் கூறினார்.

எமது பிரச்சினைகளை அவர் ஏற்கனவே அறிந்திருந்தார். அந்த அடிப்படையில் அவர் எமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு பல வழிகளிலும் ஒத்துழைப்புக்களை வழங்குவார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்-

முறையான அதிகாரப்பகிர்வின் மூலமே அரசியல் தீர்வொன்றை பெறமுடியும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள இராஜங்கச் செயலர் அதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

அதேநேரம் இங்கு இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்து பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடாகவுள்ளது.

அதேநேரம் நாட்டின் புதியதொரு சூழல் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் குழப்ப நிலைமைகளை தோற்றம் பெறுவதற்கு தலைவர்கள் ஒருபோதும் இடமளிக்க கூடாது.

சிங்களத் தலைவர்களுக்குரிய பொறுப்பும் கடமையைப் போன்றே தமிழ் தலைவர்களுக்கும் உள்ளது.

ஆகவே தமிழ்த்தலைமைகள் தமிழ் மக்கள் சார்ந்து தொடர்ந்தும் செயற்பட வேண்டும்.

தமிழர்கள் தமது கரிசனைக்குரிய விவகாரங்கள் தொடர்பான நிலைப்பாட்டை விட்டுகொடுக்க வேண்டும் என்று அவர் கேட்கவில்லை.

ஆனால், சிங்களப் பெரும்பான்மையினருடன், பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வு ஒன்றை எட்டுவதற்கு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

john-kerry-TNA meeting (5)

john-kerry-TNA meeting (6)

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்-

சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக, நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் விரும்புகிறார்கள்.

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வொன்று பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் நாம் வலியுறுத்தியதுடன் யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகளாகின்ற நிலையில் வடக்கில் இராணுவத்தினர் குறைக்கப்படாதுள்ளனர். இதனால் மீள்குடியேற்றம் தடைப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக கடந்த காலத்தில் இடம்பெற்ற விடயங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டே இராணுவத்தினர் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ளனர்.

தற்போது மாறுபட்ட சூழல் காணப்படுகின்ற நிலையில் அந்தக் காணிகளை பொதுமக்களிடம் இராணுவத்தினர் கையளிக்க  வேண்டும்.

10இலட்சம் மக்கள் வாழும் பகுதியில் ஒன்றரை இலட்சம் இராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டுள்மையானது மீள்குடியேற்றத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே காணிகள் விடுவிக்கப்படுவதற்குரிய தீர்மானமொன்று அரசியல் ரீதியாக எடுக்கப்படவேண்டும்.

அரசாங்கமானது வடக்கிலிருந்து படைகள் நீக்கப்பட்டு அனைத்து மக்களும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்கி முன்னெடுப்பதற்குரிய வழி வகைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை மிகவும் விரிவாக அவரிடத்தில் எடுத்துக் கூறினோம்.

எமது கருத்துக்களை ஆழமாக உள்வாங்கிய இராஜாங்கச் செயலர் அவற்றைக் ஏற்றுக்கெண்டதுடன் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ்த் தலைமைகள் சரியான பாதையில் செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதேநேரம் பாதிக்கப்பட்ட தரப்பின் வடுக்கள் காயங்களை ஆற்றுவதென்பது மிக முக்கியமானது. ஆதன் மூலமே புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டு அரசியல் ரீதியான தீர்வு எட்டப்படவேண்டும்.

john-kerry-TNA meeting (7)

பாதிக்கப்பட்ட தரப்பின் காயங்கள், வடுக்களுக்களுக்கான உரிய நீதி வழங்கப்படவேண்டும். அவர்களுக்கான உதவிகள் ஒத்துழைப்புகள் வழங்கப்பட வேண்டும்.

அதன்மூலமே புரிந்துணர்வு நல்லிணக்கம் போன்ற விடயங்களை நோக்கி பயணிக்க முடியும் என்பதை எடுத்துக் கூறினோம்.

அவ்வாறான நிலையில் பகிரப்பட்ட இறையாண்மை அடிப்படையில் அரசியல் தீர்வொன்றை பெறவேண்டும் என்பதையும் இராஜங்கச் செயலாளர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *