மேலும்

புலம்பெயர் தமிழ்க்கல்வி சரியான திசையில் பயணிக்கிறதா? – நோர்வேயில் நடந்த ஆய்வரங்கு

norway-tamil-confrence (1)புலம்பெயர் சூழலில் தமிழ்க் கல்வி தொடர்பாக தமிழ்3 வானொலியின் ஏற்பாட்டில் கடந்த மே 1ம் நாள் வெள்ளிக்கிழமை, ஒஸ்லோவின் Linderud பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற ஆய்வரங்கில் பயனுள்ள, காத்திரமான பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன.

தமிழ்க்கல்வி சார்ந்த நோக்கத்திற்கும், இன்றைய நிலைமைகளுக்கும் இடையிலான இடைவெளிகள், போதாமைகள் குறித்த ஆழமான பார்வைகள் கருத்தாளர்களாகப் பங்கேற்ற தமிழ்க்கல்வி முன்னோடிகளாலும், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களாலும் முன்வைக்கப்பட்டன.

பாடத்திட்டத்தையும் பரீட்சைகளையும் மட்டும் முழுமையாக மையப்படுத்தியதாக அல்லாமல், பரந்துபட்டவகையில் ஆசிரியர்களின் தேடல், புதிய சிந்தனையூடான கற்பித்தல் முறைமைகளைக் கண்டடைதலும் கைக்கொள்ளலும் இளந்தலைமுறையினர் தமிழை விரும்பிக்கற்பதற்குத் தூண்டக்கூடிய வழிவகைகளில் கல்விச் செயற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியமென வலியுறுத்தப்பட்டது.

இன்றைய புலச்சூழலில் தமிழ்மொழிக் கல்விச் செயற்பாடுகளில் நிலவும் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கிலும், தமிழ்க் கல்வியினை ஆரோக்கியமான வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்வதற்கும் அவசியமான, பொருத்தமான, மாற்றம் நோக்கிய கருத்துகளும் வெளிப்பட்டன.

வெளிவந்த கருத்துகள் சமூக மற்றும் தமிழ்க்கல்விச் செயற்பாடுகள் சார்ந்தவர்கள் மத்தியில் தொடர்ச்சியாகப் பேசுபொருளாக்கப்படுவதன் ஊடாக, வளர்ச்சிக்குரிய செயற்பாடுகளுக்குத் தூண்டப்பட வேண்டிய தேவையையும் இந்த ஆய்வரங்கு உணர்த்தி நின்றது.

norway-tamil-confrence (1)

norway-tamil-confrence (2)

norway-tamil-confrence (3)

norway-tamil-confrence (4)

தமிழ் மொழிக்கல்வியின் பயன்பாட்டுத்தளங்கள், கற்பித்தல் முறைமையில் ஆசிரியர், பெற்றோரின் பங்கு, பாடத்திட்டங்கள், மதிப்பீடுகளின் (பரீட்சை) பங்கு, வாழும் தேசத்தின் சமூக, வாழ்வியல், மொழி சார்ந்த புரிதலும் தமிழ் மொழிக்கல்வியுடன் அதனை இணைத்தல், பிள்ளைகளின் உளநிலை, எண்ணக்கரு உருவாக்கத்தில் (Concept Development) தமிழ்மொழிளின் பங்கு போன்ற மொழிக்கல்வியின் பல்வேறு கூறுகள் பேசப்பட்டன.

நோர்வேயிலும் ஏனைய புலம்பெயர் நாடுகளிலும் நீண்ட காலமாகத் தமிழ்க்கல்விக்கு வடிவம் கொடுத்து செயற்பாடுகளை முன்னெடுத்த பல முன்னோடி ஆளுமைகள் இக்கருத்தரங்கில் பங்கேற்றுக் கருத்துரைகளை ஆற்றியிருந்தனர்.

நோர்வேயின் தமிழ்க்கல்வி, கலை, பண்பாட்டு முயற்சிகளின் முன்னோடிகளான கவிஞர் திரு.கார்மேகம் நந்தா, கவிஞர் திரு சிவதாஸ் சிவபாலசிங்கம், கவிஞர் இளவாலை விஜயேந்திரன், ஆசிரியர் திரு. நாகரத்தினம் இரத்தினசிங்கம், பேராசிரியர் தயாளன் வேலாயுதபிள்ளை மற்றும் கனடா நாட்டின் புலம்பெயர் சூழலில் தமிழ் மொழி, பண்பாட்டுத் தளங்களில் நீண்டகால செயற்பாட்டு மற்றும்; வழிநடத்தல் அனுபவம் கொண்ட திரு. சுப்பிரமணியம் இராசரத்தினம், ஐரோப்பிய நாடுகளில் தமிழ்க்கல்விச் செயற்பாடு மற்றும் பாடத்திட்ட உருவாக்கத்திலும் பங்களிப்பினை வழங்கிவரும் திருமதி. மல்லீஸ்வரி ஆதவன் (டென்மார்க்) ஆகியோர் கருத்துரைகளை ஆற்றியிருந்தனர்.

ஊடகவியலாளர் ரூபன் சிவராஜா தலைமை வகித்தார்.

“புலம்பெயர் சூழலில் தமிழ்மொழிக் கல்வி”-முயற்சிகளும் சவால்களும் எனும் தலைப்பில் கருத்துரைகளும் அதனைத் தொடர்ந்து பார்வையாளர்களும் இணைந்துகொள்ளும் வகையில் “புலம்பெயர் தமிழ்க் கல்வி சரியான திசையில் பயணிக்கிறதா ?” எனும் கருப்பொருளில் விவாத அரங்கம் இடம்பெற்றது. விவாதக்களத்தினை கலாநிதி சர்வேந்திரா தர்மலிங்கம் வழிநடாத்தியிருந்தார்.

ஆய்வரங்கின் ஒரு பகுதியாக இடம்பெற்ற விவாதக்களத்தில் இளைய தலைமுறையைச் சேர்ந்த தமிழர்களினதும் பெற்றோர்களினதும் அனுபவங்களையும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் களமாக அமைந்திருந்தது.

வீட்டில் தமிழைப் பேச்சுமொழியாக்கும் கரிசனை, பிள்ளைகளைத் தமிழராக உணரவைத்தல், அதன் ஊடாகத் தமிழைப் பயன்பாட்டு மொழியாக்குதல், வாழும் நாட்டின் மொழி, வாழ்வியல் சமூக, பண்பாட்டுக் கூறுகளென பிள்ளைகளின் அன்றாடத்திற்கு நெருக்கமான பேசுபொருள் கற்பித்தல் உள்ளடக்கத்திலும் கற்பித்தல் முறைமைகளிலும் உள்வாங்கப்பட வேண்டிய தேவையும் பலராலும் வலியுறுத்தப்பட்டது.

இன்றைய புலம்பெயர் சமூக வாழ்வியல் சூழலில் இளைய தலைமுறையினருக்கான தமிழ் மொழிக்கல்வி சார்ந்து  பெற்றோர், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகின்ற கேள்விகளை முன்னிறுத்திய ஒரு தேடலாக இந்த ஆய்வரங்கு அமைந்திருந்தது.

தமிழ் மொழிக்கல்வியில் இன்றைய நிலை தொடர்பான மீள்பார்வையூடாக அதன் போதாமைகளை அடையாளங்கண்டு, அதன் ஆரோக்கியமான முன்னகர்வுக்கு உந்துதலை வழங்குவதற்குரிய நோக்கத்துடன் இவ்வாய்வரங்கினை ஏற்பாடு செய்ததாக தமிழ்3 தெரிவித்துள்ளது.

ஒரு கருத்து “புலம்பெயர் தமிழ்க்கல்வி சரியான திசையில் பயணிக்கிறதா? – நோர்வேயில் நடந்த ஆய்வரங்கு”

  1. V.Ravikumar says:

    வரவேற்கத்தக்க முயற்சி. புதிய தேடல் மற்றும் சிந்தனை வளம் மிக்க சமுதாய உருவாக்கத்திற்கும், தமிழை எதிர்கால புலம்பெயர் சந்ததிக்குக் கற்பிக்கும் முறைமையில் காத்திரமான மாற்றங்களை ஏற்படுத்தவும் இத்தகைய ஒன்றுகூடல்கள் வழிசமைக்கட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *