மேலும்

19ஆவது திருத்தம் நிறைவேறுமா?- இன்று மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு

parliamentசிறிலங்காவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 19ஆவது அரசிலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.

எதிர்க்கட்சியின் குழப்பங்களால் தடைப்பட்டு வந்த 19ஆவது திருத்தச்சட்ட மூலம் மீதான விவாதம். நேற்றுக்காலை நாடாளுமன்றத்தில் ஆரம்பமானது. நேற்று இரவு 8.30 மணிவரை முதல் நாள் விவாதங்கள் இடம்பெற்றன.

இன்போது, பல்வேறு கட்சிகளும் 30இற்கும் அதிகமான திருத்தங்களை முன்வைத்துள்ளன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி 8 திருத்தங்களை முன்வைத்ததுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி, தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, லங்கா சமசமாசக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் திருத்தங்களை முன்வைத்துள்ளன.

30இற்கும் அதிகமான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதையடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது ஆளும்கட்சி தரப்பில் மூன்று பேரும், எதிர்க்கட்சி தரப்பில் மூன்று பேருமாக மொத்தம் ஆறு பேர் கொண்ட குழுவொன்றை அமைத்து, இந்த திருத்தங்களை ஆராய முடிவு செய்யப்பட்டது.

அமைச்சர் ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன், பிரதி அமைச்சர் அஜித் பெரேரா, அனுர பிரியதர்சன யாப்பா, பைசர் முஸ்தபா, பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க ஆகியோரைக் கொண்ட இந்தக் குழு இருதரப்புடனும் பேசி, திருத்தங்கள் குறித்த இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில், இன்றும் நாடாளுமன்றத்தில் விவாதம் தொடரவுள்ள நிலையில், 19ஆவது திருத்தச் சட்டமூலத்தில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகளும் இடம்பெறவுள்ளன.

இரண்டு திருத்தங்கள் விடயத்தில் இன்னமும் இணக்கப்பாடு காணப்பட வேண்டியுள்ளதாகவும், இன்று காலை 10 மணியளவில் இதுகுறித்து ஆராயப்படும் என்றும், அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நண்பகல் வரை இடம்பெறும். அதனைத் தொடர்ந்து குழுநிலையில் திருத்தங்கள் குறித்து ஆராயப்படும்.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

19ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்திருக்கும் நிலையில், அந்தக் கட்சியின்  116 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவதாக வாக்களித்தால், இந்தச் சட்டமூலம் நிறைவேறும்.

மாறாக, மகிந்த ராஜபக்ச ஆதரவு உறுப்பினர்கள், எதிர்த்து வாக்களித்தால் இந்த திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *