மேலும்

இராணுவமயமாக்கல்: சிறிலங்காவின் நிலையான அமைதிக்கு முக்கிய சவால்

sri-lanka-army2009ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போரின் மூலம் சிங்கள தேசம் பெற்றுக்கொண்டுள்ள வெற்றியை தொடர்ந்தும் நிலைத்திருக்கச் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் இராணுவப் பலத்தை முதலில் குறைக்க வேண்டும்.

இவ்வாறு ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் ‘நிருபமா சுப்ரமணியன்’ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’.

ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பல்வேறு குறைபாடுகளை சீர்திருத்தும் விதமாக மைத்திரிபால சிறிசேனவால் வரையப்பட்ட 100 நாள் செயற்றிட்டமானது ஏப்ரல் 23 அன்று முடிவடைந்துள்ளது. இதற்கு ஒரு நாள் முன்னதாக, சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச ஊழல் குற்றச்சாட்டில் சிறிலங்கா காவற்துறையால் கைது செய்யப்பட்டார்.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னர், சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் கைதுகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் இது தொடர்பாகப் பலர் அறியவில்லை.

கொழும்பிலுள்ள ஒலிப்பதிவகம் ஒன்றில் ஐந்து தமிழர்கள் மற்றும் மூன்று சிங்களவர்கள் பிடியாணை மூலம் கைது செய்யப்பட்டனர். இவர்களுள் ஒலிப்பதிவகத்தில் பணியாற்றுபவர்கள் மற்றும் குரல் வழங்கும் கலைஞர்களும் உள்ளடங்குவர்.

சிறிலங்காத் தமிழர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஒன்றுக்கு குறித்த ஒலிப்பதிவகம் ஒலிப்பதிவை மேற்கொண்டமை குற்றம் எனக் கூறப்பட்டுள்ளது. சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற உண்மைச் சம்பவங்களை இத்திரைப்படம் எடுத்துக் கூறுகிறது. இதில் நான்கு பேரின் உண்மைக் கதை திரைப்படமாக்கப்பட்டுள்ளது.

அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தம் புரிந்து கொண்டிருந்த அந்த வேளையில் இந்நால்வரும் எவற்றைச் சந்தித்தனர் என்பது திரைப்படமாக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு முக்கிய கலைஞர்கள் நான்கு வேடங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் தமிழ்நாட்டில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டது.

சிறிலங்கா இராணுவம் வருகின்ற காட்சிகளை உள்ளடக்கிய ஏழு நிமிட விவரணக் காட்சிக்கு சிங்களத்தில் குரல் கொடுப்பதற்காகவே திரைப்படத் தயாரிப்பாளர் இதனை கொழும்பிற்கு அனுப்பியிருந்தார்.

இத்திரைப்படம் சிறிலங்கா இராணுவத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும், அதில் வரும் காட்சிகள் இராணுவத்தின் நற்பண்புக்கு கேடுவிளைவிப்பதாகவும், மனிதாபிமானமற்றதாகவும், மிகவும் கொடிய காட்சிகளை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா காவற்துறை தெரிவித்துள்ளது.

கொழும்பில் கைதுசெய்யப்பட்ட ஒலிப்பதிவகத்தைச் சேர்ந்த எட்டுப் பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான விசாரணை முடியும் வரை இவர்கள் எவ்விடத்திற்கும் பயணிக்க முடியாது எனத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்ட ஜனவரியிலிருந்து இங்கு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், இவ்வாறான கைதுச் சம்பவங்கள் தொடர்கின்றன.

சிறிலங்கா எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையை சிறிலங்காவின் மைத்திரிபால அரசாங்கம் இன்னமும் முன்னெடுக்கவில்லை.

100 நாள் செயற்றிட்டத்தில் சிறிலங்கா வாழ் தமிழ் மக்களின் கோரிக்கைகள் எவையும் இணைக்கப்படவில்லை. சிறிசேன அரசாங்கத்தால் சிறுபான்மைத் தமிழ் மக்கள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் இன்னமும் நிறைவுசெய்யப்படவில்லை.

இதன் அடிப்படையில், தற்போது கலந்துரையாடப்படும் அரசியல் யாப்பு சீர்திருத்தம் மேலும் சிக்கலடையலாம்.

60 ஆண்டுகாலப் பிரச்சினைக்கு 100 நாட்களில் தீர்வுகாண முடியாது. ஆனால் இது தொடர்பில் சிறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க முடியும். இது நீண்டகாலமாக பிற்போடப்படுகிறது.

போருக்குப் பின்னான வாக்குறுதிகள் செயற்படுத்தப்படவில்லை. இராணுவமயமாக்கல் இன்னமும் நீக்கப்படவில்லை. சிறிலங்காவில் இராணுவ மயமாக்கல் நிலவுவதே இங்கு கைதுகள் இடம்பெறக் காரணமாக உள்ளது. கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்ற கைதுச்சம்பவமும் இதனையே சுட்டிக்காட்டுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போதும் செயற்படுகின்றனர் என்ற சிறிலங்காவின் குற்றச்சாட்டானது போர் இன்னமும் இங்கு முடியவில்லை என்ற தோற்றத்தைக் கொடுக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், ராஜபக்சாக்கள் தமது நாளாந்த ஆட்சிக்காக இராணுவத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர். புலிகள் இன்னமும் செயற்படுகிறார்கள் என சிறிலங்கா அரசு கருதுவதாலேயே நாட்டின் இராணுவத்தில் சிங்களவர்கள் மட்டும் இணைக்கப்படுகின்றனர்.

தற்போதும் தமிழர்கள் சந்தேகிக்கப்படுகின்றனர். இதனாலேயே அண்மையில் கொழும்பிலுள்ள ஒலிப்பதிவகத்தில் இடம்பெற்ற கைதுச் சம்பவம் போன்ற பல சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

சிறிசேன வாக்குறுதி வழங்கியதற்கிணங்க, தனது 100 நாள் ஆட்சியின் போது நாடாளுமன்றத்தைக் கலைத்து நீதியான தேர்தலுக்கான அழைப்பை விடுக்கவில்லை. ஆனால் இவர் இதனை விரைவில் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போருக்குப் பின்னான தேசத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பாக சிறிலங்கா மிகத் தீவிரமாகக் கருதியிருந்தால், இராணுவ மயமாக்கலை இல்லாதொழித்து, தமிழர் பிரச்சினைக்கு அரசியற் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சியை மேற்கொண்டிருக்கும்.

சிறிலங்காவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையுடன் ஆரம்பிக்கின்றேன். 1970களில், யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆயுதக்குழுக்கள் மீதான முதலாவது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட பின்னர், சிறிலங்காவின் இராணுவத்தின் எண்ணிக்கையானது 30,000 தொடக்கம் கிட்டத்தட்ட 300,000 வரை அதிகரித்துள்ளது. இதில் நாட்டின் தரை,கடல் மற்றும் வான் படையினர் உள்ளடங்குவர். இந்த எண்ணிக்கை போர் முடிவடைந்த போது காணப்பட்டது.

ஆனால் தற்போது இம்மூன்று படைகளினதும் எண்ணிக்கை தொடர்பாக பல்வேறு முரண்பாடான எண்ணிக்கைகள் கூறப்படுகின்றன. எதுஎவ்வாறிருப்பினும் சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் 2009ல் முடிவடைந்த பின்னர், நாட்டின் பாதுகாப்புச் செலவீனம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இராணுவ வீரர்களின் சம்பளம் மற்றும் அவர்களது ஓய்வூதியம் போன்றன அதிகரிக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவை மகிந்த ஆட்சி செய்த காலத்தில் நாட்டின் பாதுகாப்புச் செயலராகக் கடமையாற்றிய கோத்தபாய ராஜபக்ச போர் முடிவடைந்த கையோடு இராணுவத்தினரை பொருளாதார நடவடிக்கைகளில் பங்குகொள்ளவும் பொது விடயங்களில் பங்குகொள்ளவும் காலாக இருந்தார்.

அதாவது சிறிலங்கா இராணுவத்தினர் நகர அபிவிருத்தித் திட்டங்கள் குறிப்பாக, கொழும்பின் அதிகம் பாராட்டப்படும் ‘அழகுபடுத்தல்’, கல்வி, பல்கலைக்கழக நுழைவு மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சியை வழங்குதல், சிறிய வியாபாரம், விவசாயம், சிவில் விமான சேவை, சுற்றுலாத்துறை, விடுதிகள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றை நடத்துதல் உட்பட பல்வேறு வருவாய் ஈட்டும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதி போர் அரண் அமைக்கப்பட்டிருந்த முல்லைத்தீவிலுள்ள கடல்நீரேரியிலும் சிறிலங்கா இராணுவத்தினர் உணவு விடுதிகள், விடுதிகள் போன்றவற்றை நடத்துகின்றனர். தமிழ் மக்கள் வாழும் வடக்கில், சிறிலங்கா இராணுவத்தினர் தமிழ் மக்களின் நாளாந்த வாழ்வில் தலையீடு செய்கின்றனர்.

புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னரே தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்திற்கென சிவில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டார். ஆனால் இந்தப் பிரதேசத்தில் நிலவும் இராணுவ மயமாக்கலைக் குறைக்குமாறு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் இதுவரை அவை எவையும் செயற்படுத்தப்படவில்லை.

சிறிலங்கா இராணுவத்தின் 19 பிரிவுகளில் 16 பிரிவுகள் வடக்கு மற்றும் கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதாவது 80,000 வரையான இராணுவ வீரர்கள் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மக்களுக்குச் சொந்தமான பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை சிறிலங்கா இராணுவத்தினர் 1990களிலிருந்து கையகப்படுத்தி வைத்துள்ளனர். இதில் இராணுவத்தினர் தமது முகாங்களை அமைத்துள்ளனர். இதற்கும் மேலாக, சிவில் உடையில் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு பணிபுரிகிறது.

தென் சிறிலங்காவில் இவ்வாறான எவ்வித அச்சுறுத்தல்களும் காணப்படவில்லை. ஆனால் சிறிலங்கா முழுமையும் வாழ்கின்ற தமிழர்கள் அச்சத்துடனேயே வாழ்கின்றனர். சிங்களப் படையினர் வடக்கில் நிரந்தரமாக நிலைகொண்டு விடுவார்களோ எனத் தமிழர்கள் அச்சங் கொள்கின்றனர்.

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையையும் நாடு முழுவதிலும் நிலவும் இராணுவ மயமாக்கலையும் சிறிலங்கா அரசாங்கத்தால் குறைக்க முடியும். 2009ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போரின் மூலம் சிங்கள தேசம் பெற்றுக்கொண்டுள்ள வெற்றியை தொடர்ந்தும் நிலைத்திருக்கச் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் இராணுவப் பலத்தை முதலில் குறைக்க வேண்டும்.

படைக்கலைப்பு என்பது ராஜபக்சாவின் போருக்குப் பின்னான முன்னுரிமையாகக் காணப்படவில்லை. ஆனால் இராணுவத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா முன்னெடுக்காவிட்டால், பாகிஸ்தான் போன்று, சிறிலங்கா இராணுவமும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி, பொருளாதாரச் செயற்பாடுகளில் அதிகம் பங்கெடுக்கும். ‘எதிரி’ என்ற பெயரில் சிறிலங்கா இராணுவம் தனது செல்வாக்கை விரிவுபடுத்தும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் சிறிலங்கா இராணுவத்திற்குத் தலைமை தாங்கிய சரத் பொன்சேகாவை ராஜபக்சாக்கள் கைதுசெய்ததன் மூலம், இராணுவம் நாட்டின் தலைமையின் கீழ்ச் செயற்பட வேண்டுமேயன்றி பாதுகாப்புப் படைகள் சதி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இடமில்லை என்கின்ற வலுவான சமிக்கை ஒன்று வழங்கப்பட்டது.

தேர்தலில் தோல்வியுற நேரிட்டால் இராணுவச் சதி மூலம் ஆட்சிக்கவிழ்ப்பை மேற்கொள்வதற்கு ராஜபக்ச அரசாங்கம் முயற்சி செய்ததாக தற்போதைய அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது. இதற்கு இராணுவத் தளபதி மறுத்ததால் நாடு பாதுகாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உண்மையோ அல்லது இல்லையோ, சிறிலங்காவின் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட இராணுவம் சிறிலங்காவின் அரசியல் மற்றும் இராணுவ சாகசங்களுக்குத் தூண்டுதலாக விளங்கும்.

இராணுவத்திலிருந்து விலக்கப்படும் வீரர்களுக்கு மாற்றீடான வாழ்வாதாரத்தை வழங்குவதென்பது பலம் பொருந்திய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளுக்குக் கூட மிகப் பெரிய சவாலான காரணியாகும்.

சிறிலங்கா தனது நாட்டில் சமாதானத்தை வென்றெடுக்க வேண்டும் என விரும்பும் இந்தியா மற்றும் ஏனைய நாடுகள் இந்த விடயத்தில் சிறிலங்காவுக்கு உதவவேண்டும்.

காத்திரமான பொருளாதாரப் பங்காளியாக தன்னை மீளவும் நிலைநிறுத்த விரும்பும் மோடி அரசாங்கம் சிறிலங்காவின் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு தனது நாட்டில் பயிற்சிகள் மற்றும் கல்வியைத் தொடர்வதற்கான புலமைப்பரிசில்கள் போன்றவற்றை வழங்குவதன் மூலமும் சிறிலங்காவில் பணியாற்றும் இந்திய நிறுவனங்கள் முன்னாள் இராணுவ வீரர்களுக்குத் தொழில்வாய்ப்பை வழங்குவதை முன்னுரிமைப்படுத்த வேண்டும் என உந்துதல் வழங்குவதன் மூலமும் சிறிலங்காவுக்கு உதவமுடியும்.

படைக்குறைப்பு முன்னுரிமைப்படுத்தப்படும் போது, சிறிலங்காவின் போருக்குப் பின்னான மீளிணக்கமும் துரிதப்படுத்தப்படுவதுடன், இதன்மூலம் நாட்டின் அரசியல் உறுதித்தன்மையும் உறுதி செய்யப்பட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *