மேலும்

பாதுகாப்பு, நீதி அமைச்சுகள் ஒத்துழைக்கவில்லை – அதிபர் ஆணைக்குழு குற்றச்சாட்டு

காணாமற்போனோர் குறித்த விசாரணைக்கு சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சுக்கள் ஒத்துழைக்கவில்லை என்று சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 10ம் நாள் சிறிலங்கா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக, ஆணைக்குழுவினால் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “சிறைச்சாலைகள், தடுப்பு முகாம்கள், அகதி முகாம்கள் அல்லது புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய விபரங்களை வெளியிடுமாறு காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவினால், நீதி அமைச்சு, பாதுகாப்பு  அமைச்சுக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சிறப்பு அதிபர் ஆணைக்குழு விசாரணை சட்டத்தின் கீழ், ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை முன்னிலையாகும்படி கோரிய போதிலும், இந்தக் கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்கப்படாதது வருத்தமளிக்கிறது.

ஆணைக்குகுழுவுக்கு செய்யப்பட்ட முறைப்பாடுகளின்படி, விடுதலைப் புலிகள், பாதுகாப்புப்படைகள், ஆயுதக் குழுக்கள், அடையாளம் தெரியாத குழுக்களுக்கு எதிராக பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டது, கடத்தப்பட்டது, குற்ச்சாட்டுகளின்றி கைது செய்யப்பட்டது போன்ற குற்றச்சாட்டுகள், சுமத்தப்பட்டுள்ளன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இடத்தகைய சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூற அல்லது பொறுப்பேற்க வேண்டிய தரப்புகள் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடுகிறது.

வடக்கு மாகாணத்தில், காணாமற்போன சம்பவங்களுக்கு, விடுதலைப் புலிகள் 60 வீதமும், அரசபடையினர் 30 வீதமும், ஆயுதக் குழுக்கள் 5 வீதமும், அடையாளம் தெரியாத குழுவினர் 5 வீதமும் பொறுப்பாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டது, கடத்தப்பட்டது தொடர்பாக, பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு எதிராக உறவினர்களால் வாய்மூல சாட்சியங்களை அளித்துள்ளனர்.

இது நீதித்துறை சார் நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

பொதுஅமர்வுகளில் அளிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், மோசமான சம்பவங்கள் குறித்து ஆழமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

இவற்றுள் 1990இல் நடந்த சத்துருக்கொண்டான், கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்,  அம்பாறையில் 1990இல் 600 சிறிலங்கா காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்டது, குருக்கள்மடத்தில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டது ஆகிய சம்பவங்கள் உள்ளடங்கும்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழுவொன்றை நியமித்து,  இவற்றுக்குப் பொறுப்பான நபர்கள் அல்லது கட்டளையிட்ட அமைப்புக்கு எதிராக உள்நாட்டு சட்டங்களின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணைக்குழு இடைக்கால அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

மரணச் சான்றிதழ்களை வழங்குவதற்கும், குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்குதம் சாத்தியமான நடவடிக்கைகளை விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளை ஆணைக்குழு கேட்டுக் கொண்டது.

வடக்கு, கிழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு,  விரிவான உளநல ஆலோசனை மற்றும் சமூக உதவிகள் வழங்குவது குறித்தும், ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

ஆணைக்குழுவின் செயற்பாட்டுப் பரப்பை முன்னாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, 2014 ஜூலையில் விரிவாக்கி, போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்தும் விசாரிக்க பணித்திருந்தார்.

இதுதொடர்பாக, வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவும் நியமிக்கப்பட்டது.

இந்த ஆணை தொடர்பான அறிக்கை, வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனையுடன் தயாரிக்கப்படும். அது தனியான அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும்” என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *