மேலும்

அமைச்சரவை அங்கீகரித்த புதிய தேர்தல் முறை – சுமந்திரன் உள்ளிட்ட மூவர் குழு நியமனம்

rajitha senaratneபுதிய தேர்தல் பொறிமுறை தொடர்பான வரைவைத் தயாரிப்பதற்குப் பொறுப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் தகவல் வெளியிட்ட அவர்,

“அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் 238 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் வகையில், தேர்தல் முறைச் சீரமைப்பை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

தற்போதுள்ள 225 உறுப்பினர்களுக்கு மேலதிகமாக 13 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வகையில் இந்த மாற்றம் இடம்பெறும்.

தொகுதிவாரியாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, 160இல் இருந்து, 173 ஆக அதிகரிக்கப்படும்.

சிறுபான்மையினருக்கு நியாயமான பிரதிநிதித்துவங்களை அளிக்கும் வகையில், மீண்டும் பல உறுப்பினர் தொகுதி முறை கொண்டு வரப்படும்.

அடுத்தவாரம், 19வது திருத்தச்சட்டம், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம்.

மேற்படி தேர்தல் முறை மாற்றத்தை உள்ளடக்கிய 20வது திருத்தச்சட்டம் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும்.

இந்த இரண்டு திருத்தச்சட்டங்களும் நிறைவேற்றப்படாமல் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படாது.

புதிய கலப்புத் தேர்தல் முறைமையின் கீழ் தான் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும்.

புதிய தேர்தல் பொறிமுறை தொடர்பான வரைவைத் தயாரிப்பதற்குப் பொறுப்பாக, மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வண.அதுரலியே ரத்தன தேரர், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன் தானும் இடம்பெறுவதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *