மேலும்

யாழ்ப்பாணத்தில் தூய குடிநீருக்கான உண்ணாவிரதத்தின் பின்னணி குறித்து எழுந்துள்ள சந்தேகங்கள்

jaffna-protestயாழ்ப்பாணத்தில், தூய குடிநீருக்கு உத்தரவாதம் அளிக்கக் கோரி, நேற்று முதல் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், இன்று வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்காரவின் தலையீட்டினால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இந்தப் போராட்டம் குறித்து பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

தன்னார்வ அமைப்புகள் என்று கூறப்படும் விதைக் குழுமம், தூயநீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம், சுற்றுச்சூழல் அமையம் ஆகிய அமைப்புகளால் நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பேரணியைத் தொடர்ந்து, 8 பேர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

வடக்கு மாகாணசபையிடம், கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேற்றிரவு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார்.

protest-water

அவர்களால் முன்வைக்கப்பட்ட 10 கோரிக்கைகள் தொடர்பாகவும், பதிலளிப்பதற்கு வரும் 12ம் நாள் வரை காலஅவகாசம் தரும்படியும், முதலமைச்சர் தரப்பில் கோரப்பட்டது.

எனினும், அதனை நிராகரித்த போராட்டக்காரர்கள், முதலமைச்சரை அவமரியாதைக்குள்ளாக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவர் திரும்பிச் சென்றிருந்தார்.

இன்று, காலையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், போராட்டக்காரர்களுக்கு  சாதகமாக கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அமைச்சர் டெனீஸ்வரன் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட அந்தக் கடிதம், திருத்தங்கள் கோரி ஐந்து முறை திருப்பி அனுப்பட்டதுடன், கடைசியில், அது தமது கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அமையவில்லை என்று போராட்டக்காரர்களால் நிராகரிக்கப்பட்டது.

இந்தநிலையில், வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்காரவும், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகனும், போராட்டக்காரர்களை சந்தித்தனர்.

இதன் போது, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, தமக்கு ஒரு வார கால அவகாசம் தருமாறு ஆளுனர் தரப்பில் கோரப்பட்டது.

அந்த வாய்மூல உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட போராட்டக்காரர்கள், தமது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளனர்.

  • வடக்கு மாகாண முதலமைச்சர் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்ற போது, அதற்கு இடமளிக்காதமை-
  • முதலமைச்சர் முன்வைத்த சாதகமான விடயங்களை பரிசீலிக்காதமை-
  • முதலமைச்சர் கோரிய ஐந்து நாள் காலஅவகாசத்தை கொடுக்க மறுத்து விட்டு, ஆளுனருக்கு ஏழு நாள் காலஅவகாசத்தை வழங்கியமை-
  • வடக்கு மாகாணசபையை உதாசீனப்படுத்தும் வகையில், ஆளுனரை முன்னிலைப்படுத்த முற்பட்டமை-

போன்ற விடயங்கள், இந்தப் போராட்டத்தின் மீது பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்களையும் விசனங்களையும் தோற்றுவித்துள்ளது.

வடக்கு மாகாணசபையின் அதிகாரங்களை மத்திய அரசின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கான- வடக்கு மாகாணசபையை நசுக்குவதற்கான புதிய சதித் திட்டத்துக்கு தூயநீரூக்கான போராட்டம், பயன்படுத்தப்பட்டு விட்டதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

வடக்கு மாகாணசபைக்கு மேலதிக அதிகாரங்களைக் கோரும் நிலையில், அதனை மறுப்பதற்காக, இருக்கும் அதிகாரங்களையே வடக்கு மாகாணசபையால், பொறுப்பாக பயன்படுத்த முடியாதளவுக்குச் செயலற்றதாக உள்ளது என்று மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லும் முயற்சியாக இது இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *