மேலும்

எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் – இரவெல்லாம் தூக்கமின்றித் தவிக்கும் சபாநாயகர் சமல் ராஜபக்ச

chamal-rajapakshaசிறிலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து தீர்மானிக்க முடியாமல், சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் சமல் ராஜபக்ச இரவெல்லாம் தூக்கமின்றி தவிப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வரும் 7ம் நாள், நாடாளுமன்றம் கூடும் போது, எதிர்க்கட்சித் தலைவர் குறித்த விவகாரத்துக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் உள்ளார் சபாநாயகர் சமல் ராஜபக்ச.

அதற்காக, நாடாளுமன்ற மரபுகள், சம்பிரதாயங்கள் தொடர்பான நூல்களை படிப்பதிலேயே அவர் நேரத்தைச் செலவிட்டு வருகிறார்.

அவர் இரவில் கூட தூங்காமல், நூல்களைப் படித்து தமது முடிவு மற்றும் அதற்குத் தேவையான அடிப்படைகளை நியாயங்களை ஆராய்ந்து வருகிறார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நிமால் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்வதற்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பலவும், எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐதேக ஆகிய கட்சிகளையடுத்து, நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று பெரும்பாலான தமிழ், முஸ்லிம் கட்சிகள் கோரியுள்ளன.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுவதற்கு  ஈபிடிபி  எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளான, மக்கள் ஐக்கிய முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கக் கூடாது என்று சபாநாயகரிடம் தெரிவித்துள்ளன.

தேசிய நிறைவேற்றுச் சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிப்பதைச் சுட்டிக்காட்டியே, இந்த கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

அதேவேளை, தினேஸ் குணவர்த்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்று இந்தக் கட்சிகள் கோர வருவதுடன், இதற்கு ஆதரவாக சுமார் 60 வரையிலான சுதந்திரக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களின் கையெழுத்தை திரட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், யாரை எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்வது என்று தெரியாமல், சபாநாயகர் குழப்பமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *