மேலும்

சிறிலங்காவுக்கு மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை – ஐரோப்பிய ஒன்றியம் வாக்குறுதி

maithri-david dalyசிறிலங்காவுக்கான வர்த்தக கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்தும், வரிச்சலுகைகளை மீள வழங்குவது குறித்தும், ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமான மீள் மதிப்பீடுகளை மேற்கொண்டு வருவதாக, சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெவிட் டலி தெரிவித்துள்ளார்.

நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிட் டலி சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போது, சிறிலங்கா அதிபராகத் தெரிவு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள, அவர், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், கடைப்பிடிக்கப்படும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தும் கொள்கைகளையும் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவுக்கு மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை வழங்குமாறும், மீன் ஏற்றுமதி தடையை நீக்குமாறும் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்கள் குறித்து, ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமான மீள் மதிப்பீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர், முறையான மறு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால், இதுதொடர்பான சட்ட நடவடிக்கைகள் மெதுவாகவே இருக்கும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் முயற்சிகளை வலுப்படுத்த இந்த விடயங்கள் உதவியாக இருக்கும் என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் மற்றொரு குழு கூட்டுக்குழுக் கூட்டத்துக்காக விரைவில் கொழும்பு வரவுள்ளதாகவும்  ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிட் டலி குறிப்பிட்டுள்ளார்.

கடந்தவாரம் கொழும்பு வந்த ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர், ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை மீள வழங்குவது குறித்து சிறிலங்கா அரசாங்கத் தரப்புடன் கலந்துரையாடியிருந்தனர்.

முன்னைய அரசாங்கம் மனித உரிமை விவகாரங்களில் கவனம் செலுத்தாமையினால், இந்த ஜிஎஸ்பி சலுகையை, ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தியிருந்தது.

புதிய அரசாங்கம் இந்த சலுகையை மீளப் பெறுவதற்கு முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *