புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் மீதான தடையை நீக்குவது குறித்து இறுதி முடிவு இல்லையாம்
சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பாக இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
“இது உணர்வுபூர்வமான ஒரு விவகாரம். மிகவும் கவனமாகவே கையாளப்பட வேண்டும். நாடாளுமன்றத்தினதும் ஆதரவு தேவைப்படுகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருந்தது.
சரியான ஆதாரங்களின்றி, முன்னைய அரசாங்கம் இந்த தடையை விதித்துள்ளதாகவும், இதனை புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யவுள்ளதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.
இதற்கு சிறிலங்கா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது, இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.