மேலும்

சிறிலங்கா ஐனநாயக பண்புகளுக்கு மீளவும் திரும்ப அமெரிக்காவால் என்ன செய்ய முடியும்?

eagle-flag-usaதிரு.ராஜபக்ச அமெரிக்காவின் குடிமகன் என்ற வகையில் 1996 போர்க் குற்றச் சட்டத்தின் கீழ் இவர் உலகின் எந்தவொரு நாட்டிலும் வைத்து அமெரிக்க நீதிமன்றங்களின் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி கைதுசெய்யப்பட முடியும். மறுவழியில் பார்த்தால், திரு.ராஜபக்ச விடயத்தில் அமெரிக்கா மிகச் சரியான பொருத்தமான நியாயப்படுத்தலை தனிப்பட்ட ரீதியாக மேற்கொள்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளது.

இவ்வாறு அமெரிக்காவை தளமாகக்கொண்ட New York Times ஊடகத்தில் RYAN GOODMAN எழுதியுள்ள எண்ண வெளிப்பாட்டில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்காவில் தொடரப்பட்ட கிளர்ச்சியை 2009ல் முடிவுக்குக் கொண்டு வந்தவரும், அதன்பின்னர் பாதுகாப்புச் செயலராகக் கடமையாற்றிய தனது சகோதரனுடன் இணைந்து சிறிலங்காவில் அதிகார ஆட்சியை நிறுவிய தமது அதிபரை எதிர்த்து இம்மாதம் வாக்களித்ததன் மூலம் சிறிலங்காவின் வாக்காளர்களும் இந்த உலகமும் அதிர்ச்சியுற்றுள்ளது.

சிறிலங்காவில் தற்போது புதிததாக ஆட்சிக்கு வந்துள்ள அதிபர், நாட்டில் ஊடக சுதந்திரத்தை மீளநிறுவுவதாகவும், நீதிபதிகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவேன் எனவும் மத மற்றும் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பேன் எனவும் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

கடந்த பத்தாண்டிற்கும் மேற்பட்ட காலப்பகுதியை விடத் தற்போது சிறிலங்கா அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் திறப்பதற்கான மிக முக்கிய வாய்ப்பாக இது நோக்கப்படுவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் ஹெரி உட்பட இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ராஜபக்சவின் அரசாங்கத்தில் கொடுங்கோல் புரிந்த எவரும் தற்போதைய புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கக்கூடாது என்பதையும் புதிய அரசாங்கம் அதனுடைய அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதையும் சிறிலங்கா உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறானதொரு செயல் இடம்பெறுவதற்கு அமெரிக்கா மட்டுமே ஏதாவது உதவி செய்ய முடியும்.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரன் கோத்தபாய ராஜபக்சவும் இன்னமும் அரசியலிலிருந்து முற்றாக விலகவில்லை. மிகமுக்கிய சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் இடம்பெறவுள்ளது. புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன வெவ்வேறு அரசியற் கட்சிகளின் ஆதரவுடனேயே தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது இவர் தனது அதிகாரத்தைப் பலப்படுத்திக் கொள்ளவேண்டும். இதன்மூலம் நாட்டில் ஜனநாயக மறுமலர்ச்சி ஏற்படுவதற்கான வழிவகை ஏற்படும்.

இதற்கு எந்த வழியில் அமெரிக்கா உதவ முடியும்? சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் ஏற்கனவே விவாதிக்கப்படும் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா பேச்சுக்கள் நடாத்த வேண்டும் என திரு.ஹெரி சுட்டிக்காட்டுகிறார். சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் இடம்பெற்ற போது ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு அமெரிக்கா இராஜாங்கச் செயலகம் முன்னின்று செயற்பட்டுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு போர்க் குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறவேண்டும் என சிறிலங்காவில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றிருக்கும் இக்குறுகிய காலத்தில் முழுமையான அழுத்தத்தை வழங்கும்போது இப்புதிய அரசாங்கத்தால் தனது ஆட்சியைப் பலப்படுத்த முடியாது போகலாம். அத்துடன் இத்தகையதொரு நகர்வானது அமெரிக்காவிற்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தலாம்.

இதேவேளையில் சிறிலங்கா மீதான ஐ.நா விசாரணைக் குழுவானது குற்றவியல் நீதிமன்றின் அதிகாரங்களைக் கொண்டிருக்கவில்லை. இந்நிலையில் இவ்விசாரணை ஆணைக்குழுவானது சிறிலங்காவில் குற்றமிழைத்தவர்களிடமிருந்து தண்டப்பணத்தைக் கூட அறவிட முடியாத நிலையிலேயே உள்ளது.

இவ்வாறானதொரு சூழலில் அமெரிக்க அரசாங்கம் எவ்வாறு சிறிலங்கா விடயத்தில் ஒரு உறுதியான பங்களிப்பை வழங்க முடியும் என்பதை ஆராயலாம். சிறிலங்காவின் பழைய பாதுகாப்புச் செயலரான கோத்தபாய ராஜபக்ச இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்தை வழிப்படுத்தினார். இவர் ஒரு அமெரிக்கா குடிமகனாவார். இவர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்சில் வசித்த போது லோயொலா சட்டக் கல்லூரியில் கணிணி இயக்குனராகச் செயற்பட்டார்.

திரு.ராஜபக்ச அமெரிக்காவின் குடிமகன் என்ற வகையில் 1996 போர்க் குற்றச் சட்டத்தின் கீழ் இவர் உலகின் எந்தவொரு நாட்டிலும் வைத்து அமெரிக்க நீதிமன்றங்களின் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி கைதுசெய்யப்பட முடியும். மறுவழியில் பார்த்தால், திரு.ராஜபக்ச விடயத்தில் அமெரிக்கா மிகச் சரியான பொருத்தமான நியாயப்படுத்தலை தனிப்பட்ட ரீதியாக மேற்கொள்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்ச அவரது சகோதரனை விட சிறிலங்காவில் ஒரு சுமூகமான அரசியல் மாற்றம் ஒன்று நிகழ்வதற்குத் தடையாக இருப்பதாக சுயாதீன அவதானிப்பாளர்கள் நீண்டகாலமாகக் குறிப்பிட்டுள்ளனர்.
கோத்தபாயவும் அவரது சகோதரரும் இணைந்து தேர்தல் பெறுபேறுகள் தமக்குச் சாதகமாக இல்லாதபோது இராணுவச் சதி ஒன்றை மேற்கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார்கள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால் இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சிறிலங்காவின் புதிய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதானது இவர் புதிய அரசாங்கத்திற்கு மதிப்பளிப்பாரா என்கின்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

திரு.ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதன் மூலம் சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது தனது ஜனநாயக வெற்றியைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தயார்ப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும். கோத்தபாயவின் சகோதரரான மகிந்த சிறிலங்காவின் பலம்மிக்க எதிர்க்கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் வெற்றி பெற்றால் இது சாத்தியமாகலாம். ஆகவே இதனைத் தவிர்ப்பதற்கு திரு.ராஜபக்ச அரசியலிலிருந்து முற்றிலும் ஓரங்கட்டப்படுதல் தற்போது மிகவும் முக்கியமானதாகும்.

தனது நாட்டில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளிநாட்டுத் தலையீடுகள் இன்றி உள்நாட்டு குற்றவியல் நடைமுறைகளை முன்னெடுப்பதற்கான சமிக்கைகளை சிறிலங்காவின் புதிய அதிபர் திரு.சிறிசேன காண்பித்துள்ளார்.

வெள்ளைக் கொடியை ஏந்தியவாறு தமிழ்த் தலைவர்கள் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைய வந்தபோது படுகொலை செய்யப்பட்டமை போன்ற சில சம்பவங்களுக்கு சிறப்பான போர்க் குற்றவியல் விசாரணைகளை மேற்கொள்வதில் அரசாங்கம் விருப்பங்கொள்ளலாம் என சிறிசேனவின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெள்ளைக் கொடியை ஏந்தியவாறு சரணடைய வந்த தமிழ்த் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என திரு.ராஜபக்ச அப்போதைய இராணுவத்தளபதியிடம் கட்டளையிட்டதாகக் குறிப்பிட்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அமெரிக்கா அரசாங்கத்திடம் அறிக்கை சமர்ப்பித்தமை பெரும்பாலான இலங்கையர்களுக்குத் தெரியும். ஆனால் இதன்பின்னர் இது தொடர்பில் போர்க் குற்ற விசாரணையின் போது சாட்சிப்படுத்துவதில் திரு.ராஜபக்ச ஆர்வங்காண்பித்திருந்தார்.

ஆனால் திரு.ராஜபக்சவுக்கு எதிராக சிறிலங்காவின் தற்போதைய புதிய அரசாங்கம் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இது அரசியல் ரீதியான சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும். இதில் சிறிலங்கா ஈடுபடாது திரு.ராஜபக்சவுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப் போவதாக அமெரிக்கா நல்லெண்ண சமிக்கையை வெளியிடுவதன் மூலம் இந்த விடயத்திற்கு அமெரிக்கா உதவமுடியும்.

அமெரிக்காவின் இத்தகைய நகர்வானது சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தனது நாடு மீது ஏற்பட்டுள்ள கறையைக் களைவதற்கான ஒரு வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் இதனை நியாயப்படுத்துவதற்குமான வழியை ஏற்படுத்தும். ஏனெனில் திரு.ராஜபக்ச அமெரிக்காவின் குடியுரிமையைப் பெற்றுள்ளதால் அமெரிக்கா கோத்தபாய ராஜபக்சவின் விடயத்தில் நேரடியாகத் தலையீடு செய்யும் போது இது வேறொரு நாட்டின் குடிமகனின் விவகாரத்தில் தலையீடு செய்கின்றது என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகாமல் இருக்க முடியும்.

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தனது ஆட்சியை நடாத்துவதற்கான ஒத்துழைப்பை முதலில் வழங்கியதன் பின்னர் தனது குற்றவியல் விசாரணை மேற்கொள்வதா அல்லது இல்லையா என்பதை அமெரிக்கா தீர்மானிக்கும் என ஒபாமா நிர்வாகம் வெளிப்படையாகத் தெரிவிக்க முடியும்.

அமெரிக்கா இவ்வாறான சமிக்கைகளை வழங்குவதன் மூலம் நாட்டின் அரசியலிலிருந்து ராஜபக்சாக்களை முற்றிலும் ஓரங்கட்டுவதற்கு உதவமுடியும். நாடு கடந்த காலக் கசப்பான அனுபவங்களிலிருந்து விடுபட்டு தனது நிர்வாகத்தின் மூலம் சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அங்கீகாரத்தையும் புதிய அதிபர் சிறீசேன பெற்றுக் கொள்வதற்கான ஒரு உந்துதலை வழங்க முடியும்.

சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொறுப்பளிப்பதற்கும் சிறிலங்காவில் ஜனநாயக ஆட்சி இடம்பெறுவதற்கும் அமெரிக்கா தனது பங்களிப்பை வழங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *