மேலும்

ஆளுனர் பாலிஹக்காரவின் நியமனம் – கூட்டமைப்பு பிரமுகர்கள் வரவேற்பு

tnaவடக்கு மாகாண ஆளுனராக முன்னாள் இராஜதந்திரயான எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளது குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,

“ஆளுனர் சிவிலியனாக இருக்க வேண்டும், இராணுவப் பின்னணி கொண்டவராக இருக்கக் கூடாது என்ற எமது கோரிக்கை நிறைவேறியுள்ளது ஒருபக்கத்தில் எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
ஆனால், இன்னொரு பக்கத்தில் மிகச் சிறந்த மாற்றம் என்று எம்மால் மிகுந்த நம்பிக்கை கொள்ள முடியாது.

பாலிஹக்கார எம்முடன் ஒத்துழைப்பார் என்று நாம் நம்புகிறோம்.
சிவிலியன் ஆளுனரை நியமித்தமை, இராணுவத்தின் வசம் உள்ள சில தமிழரின் தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பாக குழுவொன்றை நியமிக்க எடுத்துள்ள நடவடிக்கை, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்த நடவடிக்கை என சிறிசேன அரசாங்கம், சில சாதகமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,

“ஆளுனர் மாற்றம் ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கை.
ஆனால், ஐ.நாவில் சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதியாக இருந்த பாலிஹக்கார, சிறிலங்கா அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்று மறுத்து வந்தார். எவ்வாறாயினும், அதிகாரப்பகிர்வுக்கும், அதிகாரப் பரவலாக்கலுக்கும், அவர் உதவினால், நாம் மகிழ்ச்சியடைவோம்.” என்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிடுகையில், வடக்கு மாகாணசபையுடன் புதிய ஆளுனர் நல்லுறவுடன் பணியாற்றுவார் என்று உணர்கிறேன். ஆளுனர் பாலிஹக்கார மிகவும் நியாயமான சிந்தனை கொண்ட மனிதர்” என்று தெரிவித்தார்.

அதேவேளை, பாலிஹக்கார ஒரு மிகச் சிறந்த தெரிவு என்று முன்னாள் இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜெயத்திலக, குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *