மேலும்

ஜெனிவா விவகாரம்: இந்தியாவிடம் உதவி கோருவார் மங்கள சமரவீர

mangala-delhiசிறிலங்காவின் புதிய  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு நேற்று மாலை  சுமார் 6 மணியளவில் புதுடெல்லியைச் சென்றடைந்தார்.

அவரை, இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலர் சுசித்ரா துரை, புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் சுதர்சன் செனிவிரத்ன உள்ளிட்ட இருநாட்டு அதிகாரிகளும் வரவேற்றனர்.

இன்றும் நாளையும் புதுடெல்லியில் தங்கியிருக்கும் மங்கள சமரவீர, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவிருக்கிறார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடனான சந்திப்பு இன்று  பிற்பகல் 12.30 மணியளவில், ஜவஹர்லால் நேரு பவனில் இடம்பெறும்.

அதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நாளை பிற்பகல் 12.30 மணியளவில் ரேஸ்கோஸ் வீதியில் உள்ள இல்லத்தில் மங்கள சமரவீர சந்தித்துப் பேசுவார்.

நாளை மாலை 6.35 மணியளவில் அவர் கொழும்பு புறப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

mangala-delhi

தனித்தே டெல்லி சென்றார் மங்கள

இதற்கிடையே, புதுடெல்லி புறப்படுவதற்கு முன்னதாக  கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட மங்கள் சமரவீர,

“சீனாவுடன் சிறிலங்கா எப்போதும் நல்லுறவைக் கொண்டுள்ளது. ஆனால் அது அண்டை நாடுகளுடனான உறவுகளைக் கெடுப்பதாக அமையக் கூடாது.

நான் பதவியேற்றவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

அவர் எனது பழைய நண்பர். நாம் இருவரும், 1990களில் தொலைத்தொடர்பு அமைச்சர்களாக இருந்தோம்.

அவர் என்னை ஞாயிற்றுக்கிழமை (இன்று) மதியபோசனத்துக்கு வருமாறு அழைத்தார். உடனே நான் ஒப்புக்கொண்டேன்.

முன்னதாக அது ஒரு தனிப்பட்ட அழைப்பாக இருந்தது. இப்போது இது முழு அளவிலான அதிகாரபூர்வ பயணமாகியுள்ளது.

திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் மோடியையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலையும் சந்திக்க நேரம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாகத் தொடரும் இந்தியாவுடனான உறவுகளுக்கு மீளத் திரும்பும் நேரத்தில் பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

அதிகாரிகளிடம் விளக்கங்களைப் பெற்று நாம் தயாராகியுள்ளோம்.” என்றும் தெரிவித்திருந்தார்.

மங்கள சமரவீர தன்னுடன் வெளிவிவகார அமைச்சின் எந்த அதிகாரியையும் புதுடெல்லிக்கு அழைத்துச் செல்லவில்லை.

ஜெனிவா குறித்து கொழும்பு எதிர்பார்ப்பு

பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடவும், வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கும் கொழும்பு நம்பிக்கை கொண்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், மனித உரிமைகள் நிலையில் ஏற்படும் சடுதியான மாற்றங்கள், சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது ஆகியவற்றிலேயே சிறிலங்காவுக்கு ஆதரவளிப்பது பற்றிய முடிவு தங்கியிருப்பதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

அதிகாரப்பகிர்வு, மனித உரிமை விவகாரங்கள் குறித்து சிறிலங்காவுடன் இந்தியா பேச்சுக்களை நடத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்

வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் நீக்கியுள்ளார்.

முன்னதாக, வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் சமர்ப்பிக்கப்படும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் நுழைவிசைவு விண்ணப்பங்கள், மேலதிக பரிசீலனைகளுக்காக வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த நடைமுறை கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நீக்கப்பட்டுள்ளது. நுழைவிசைவு தொடர்பான முடிவுகளை எடுக்கும் பொறுப்பு அந்தந்த தூதரகங்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உலகின் எந்த இடத்தில் இருந்தும் ஊடகவியலாளர்கள் சிறிலங்காவுக்கு சுதந்திரமான வரலாம் என்றும், அவர்களுக்கு நுழைவிசைவு வழங்கப்படும் என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *