மேலும்

சிறிலங்காவில் ஓர் ஆச்சரியமளிக்கும் அரசியல் மாற்றம்

maithriகடந்த வியாழனன்று சிறிலங்காவில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க அதிபர் தேர்தல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 1948ல் சிறிலங்கா சுதந்திரமடைந்ததிலிருந்து தற்போது முதற் தடவையாக பதவி வகித்துக் கொண்டிருந்த அதிபர் ஒருவர் தேர்தல் மூலம் அவரது பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை விடியற்காலையில், சிறிலங்காவின் அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஊடக நிறுவளங்கள் மற்றும் செய்தி வலைப்பின்னல்கள் போன்றன அதிபர் தேர்தல் தொடர்பான பெறுபேறுகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன. மகிந்த ராஜபக்ச இந்தத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார் என்ற செய்தியை சிறிலங்கர்கள் அறிந்து கொள்வதற்குப் பெரும் பிரயத்தனப்பட்டனர்.

இத்தேர்தலின் பெறுபேறானது கொழும்பில் வாழும் ஒவ்வொருவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்தச் செய்தி 1991ல் ரிமுர் குரனால் Now out of Never  எனத் தலைப்பிடப்பட்டு எழுதப்பட்ட எதிர்வுகூறப்படாத அரசியல் மாற்றம் என்பதை உள்ளடக்கிய ஆக்கத்தை எனக்கு நினைவுபடுத்தியது.

இன்னமும் இரண்டு ஆண்டுகள் உள்ளநிலையில் தான் தேர்தலில் வெற்றிபெறுவேன் என்ற அதீத நம்பிக்கையுடன் கடந்த நவம்பரில் அப்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அதிபர் தேர்தலை நடாத்தப் போவதாக அறிவித்தார்.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து நிற்பதற்கான ஒரு தலைவரை சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியால் அதிபர் வேட்பாளராக முன்நிறுத்துவதற்கான தகைமையைக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் இக்கட்சியின் நீண்டகாலத் தலைவராக உள்ள ரணில் விக்கிரமசிங்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் இவரைத் தன்னால் மிக இலகுவாக வென்றுவிட முடியும் என மகிந்த ராஜபக்ச கருதினார்.

2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த பின்னர் சிங்கள வாக்காளர்கள் தனக்கு அமோக வெற்றியைப் பெற்றுத் தந்தது போன்று தற்போதும் அவர்களின் ஆதரவு தனக்குக் கிடைக்கும் என்பதே மகிந்த ராஜபக்சவின் எண்ணமாகும்.

சிறிலங்கா அதிபர் தேர்தலை நடாத்தப் போவதாக அறிவித்து இரண்டு நாட்களின் பின்னர், ராஜபக்சவும் மற்றவர்களும் அதிர்ச்சியடைந்தனர். அதாவது இவரது அமைச்சரவையில் சுகாதார அமைச்சராகக் கடமையாற்றிய மைத்திரிபால சிறிசேன ஆளுங்கூட்டணியிலிருந்து விலகி எதிரணியின் பொது வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தமை அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

சிறிசேன தான் அதிபராகப் போட்டியிடப் போவதாக அறிவித்த பின்னர் இவருடன் அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்பட்ட பலர் தமது ஆதரவுகளை வழங்கத் தொடங்கினர். ஒவ்வொரு நாளும் அரசாங்கத்தில் அங்கம் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அல்லது அமைச்சர் ஒருவர் ராஜபக்ச அரசாங்கத்தை விட்டு விலகி எதிரணியுடன் இணைந்துள்ளதாக செய்திகள் தெரிவித்தன.

சிறிசேனவின் கோரிக்கை மிகவும் சாதாரணமானதாகும். ராஜபக்ச ஆட்சியை ஒழிப்பதற்காகவே தான் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக அறிவித்தார். தேர்தற் பரப்புரையின் இறுதிநாள் நள்ளிரவன்று, ஐ.தே.க அரசியல்வாதி ஒருவர் சிறிசேன வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு எவ்வாறு திட்டம் தீட்டப்பட்டது என்பது தொடர்பாக கொழும்பு வாழ் மக்கள் மத்தியில் உரையாற்றியமை மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது.

பத்து ஆண்டுகளாக சிறிலங்காவின் அதிபராக இருந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் தென்னாசியாவின் மிகப் புராதன ஜனநாயக நாடான சிறிலங்காவின் ஜனநாயகக் கட்டமைப்புக்களை குழிதோண்டிப் புதைத்துள்ளார். இவர் ஏற்கனவே சிறிலங்காவில் நடைமுறையிலிருந்த நிறைவேற்று அதிபர் முறைமையை வலுப்படுத்துவதற்கான அதிகாரத்தைத் தன்வசப்படுத்தியிருந்தார்.

இவர் ஆட்சி அதிகாரத்தைத் தனது குடும்பத்தவர்களின் கைகளில் குவித்திருந்தார். மகிந்த ராஜபக்சவின் ஒரு சகோதரர் பாதுகாப்புச் செயலராகவும், பிறிதொரு சகோதரன் நாடாளுமன்ற சபாநாயகராகவும், மூன்றாவது சகோதரன் அமைச்சரவை அமைச்சராகவும், இவரது மகன்மார் மற்றும் இவரது நெருங்கிய உறவினர்கள் அதிகாரப் பதவிகளிலும் அமர்த்தப்பட்டனர்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை எதிர்த்தவர்களின் குரல்கள் நசுக்கப்பட்டன. சிறிலங்கா அதிபர் தேர்தல் இடம்பெற்ற அன்றைய தினம் ராஜபக்சாக்களால் படுகொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட பத்திரிகை ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட ஆறாவது ஆண்டு நினைவு நாளாகும். இவரது படுகொலையானது சுயாதீன ஊடகங்கள் சுயதணிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது.

ராஜபக்சவுக்கு எதிராகத் தனது தீர்ப்பை வழங்கிய சிறிலங்கா உச்ச நீதிமன்ற பிரதம நீதியரசர் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை விமர்சித்த மக்கள் அமைப்புத் தலைவர்கள் வெளிப்படையாக அச்சுறுத்தப்பட்டனர். இவ்வாறு செயற்பட்டவர்கள் ‘வெள்ளை வான்’ மூலம் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அடுத்தடுத்த தினங்களில் படுகொலை செய்யப்பட்டு அவர்களது உடலங்கள் பொது இடங்களில் கண்டெடுக்கப்பட்டன. சிலர் இதுவரை காணாமற் போயுள்ளனர்.
பெரும்பான்மை சிங்களவர்களுள் ராஜபக்ச ஆட்சியை எதிர்த்தவர்கள் மிகவும் மோசமான சூழலை எதிர்கொண்ட அதேவேளையில், சிறிலங்காவில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களும் நாட்டில் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உட்பட்டனர்.

2009ல் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு சிறிலங்கா அரசாங்கம் போர் வெற்றியைப் பிரகடனப்படுத்திய போது வடக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் இந்தப் போருக்காக மிகப் பெரிய விலையைச் செலுத்தியிருந்தனர்.

போரின் இறுதிக்கட்டத்தில் 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா அறிக்கையின் நம்பகமான சாட்சியங்கள் உறுதிப்படுத்துகின்றன. அனைத்துலக சமூகம் அழுத்த வழங்கிய போதிலும், போர்க் குற்றங்கள் தொடர்பான அனைத்துலக சமூகத்தின் விசாரணைகளுக்கு முகங்கொடுக்க ராஜபக்ச அரசாங்கம் முற்றிலும் நிராகரித்தது.

போர் இடம்பெற்ற போது ‘பொதுமக்கள் பூச்சிய இழப்புக் கொள்கையை’ கைக்கொண்டதாக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கூறியது. போர் முடிவடைந்த பின்னரும் நாட்டின் வடக்கில் பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இவர்கள் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட அதேவேளையில், கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டன.

தமிழர் பாரம்பரிய இடங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டதன் மூலம் தமிழ் மக்களின் வாழ்விட உரிமையைப் பறிப்பதற்கான முயற்சிகளை ராஜபக்ச அரசாங்கம் மேற்கொண்டதாக மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ராஜபக்சவின் ஆட்சி என்பது பௌத்த ஆயுத வன்முறைகளுக்கு ஆதரவு வழங்குவதையே குறித்து நிற்பதாக சிறிலங்கா வாழ் முஸ்லீம் மக்கள் கருதுகின்றனர். அளுத்கமவில் யூன் 2014ல் பொது பல சேன என்கின்ற தீவிர பௌத்த குழுவினர் மதக்கலவரத்தில் ஈடுபட்டனர்.

இக்கலவரத்தில் நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டதுடன், குறைந்தது 10,000 வரையானோர் இடம்பெயர்ந்தனர். இது தொடர்பான செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டதுடன், இந்தச் செய்தியை வெளியிட்ட ஊடகவியலாளர்கள் கண்டிக்கப்பட்டனர். இவை மட்டுமே ராஜபக்ச அரசாங்கத்தின் பதிலாகக் காணப்பட்டது.

ராஜபக்சாக்களைப் போன்ற சிங்கள பௌத்த தேசியவாதப் பின்னணியிலிருந்து சிறிசேன தேர்தலில் போட்டியிட்டாலும் கூட, சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்கு முஸ்லீம் மற்றும் தமிழ்க் கட்சிகள் முன்வந்தன. முஸ்லீம்களைப் பொறுத்தளவில் சிறிசேனவுக்குத் தமது ஆதரவை வழங்குவதென்பது எவ்வித மறைமுக நோக்கத்தையும் கொண்டதல்ல.

ராஜபக்ச ஆட்சியால் தொடர்ச்சியாக ஆதரிக்கப்பட்ட பொது பல சேன என்கின்ற அமைப்புத் தொடர்பாக தனது ஆட்சியில் உண்மையான மாற்றம் ஏற்படும் என சிறிசேன தனது பரப்புரையில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் இத்தீர்மானம் என்பது சற்றுத் தெளிவற்றதாகும். வடக்கில் இராணுவமயமாக்கலை நிறுத்துதல், மிகப்பாரிய வன்முறைகள் தொடர்பாக பொறுப்பளித்தல் தொடர்பில் சிறிசேன எவ்வித வாக்குறுதியையும் அளிக்கவில்லை.

சாத்தியமான போர்க்குற்றச்சாட்டுக்களிலிருந்து ராஜபக்சாக்களைப் பாதுகாப்பேன் என சிறிசேன உறுதியளித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்கு சிறிசேன தனது ஆதரவை வழங்கமாட்டார் என்ற நிலைப்பாட்டைத் தோற்றுவித்துள்ளது. நிறைவேற்று அதிபர் முறைமை ஒழித்தல் அல்லது ராஜபக்சவைப் பதவியிலிருந்து நீக்குதல் உட்பட சட்ட ஆட்சியில் முன்னேற்றங்கள் ஏற்படுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தனது ஆதரவை எதிரணிக்கு வழங்கியது.

தேர்தல் தினமன்று கொழும்பின் வாக்குச்சாவடி நிலையங்களில் காலை ஏழு மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட தேர்தலில் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர். ஆனால் மதியமளவில், தெருக்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. தேர்தல் வன்முறைகள் இடம்பெறலாம் என்கின்ற அச்சத்தில் மக்கள் தமக்குத் தேவையான பொருட்களை வாங்கினர்.

ஆனால் வன்முறையற்ற தேர்தல்கள் இடம்பெறுவதாக தேர்தல் கண்காணிப்பு மையம் அறிவித்தது. 81.52 சதவீத வாக்குகள் பதிவுசெய்யப்பட்டன. எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட சிறிசேனவுக்கு தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் அமோக வாக்குகள் வழங்கப்பட்டன. இதனால் இவர் 51.28 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

சிறிசேன பதவியேற்று சில நாட்களில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்படுவது உத்தியோகபூர்வ ரீதியாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் தங்கியிருந்த அரசியற் பிரமுகர்கள் மீண்டும் சிறிலங்காவுக்குத் திரும்பி வந்துள்ளதாக செய்தி ஊடகங்கள் சுட்டிக்காட்டின.

பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீண்டும் அப்பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என்கின்ற கருத்துத் தற்போது பரவிவருகிறது.சிறிலங்காவில் எதிர்வுகூறப்படாத ஆட்சி மாற்றத்தால் இராணுவக் கிளர்ச்சி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்பின் காரணமாக இது தடுக்கப்பட்டது.

உள்நாட்டுப் போர், பயங்கரவாதம் அல்லது புலம்பெயர் அரசியல் தொடர்பாக ஆய்வு செய்கின்றவர்களுக்கு சிறிலங்கா மிகவும் பிரபலமான ஒரு நாடாகக் காணப்படுகிறது. மொழி, கல்வி மற்றும் சமஸ்டி போன்றவற்றின் அரசியல் இன அரசியல் வல்லுனர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். சிறிலங்காவின் போருக்குப் பின்னான சூழலில் நீதியை நிலைநாட்ட அனைத்துலக சமூகத்தால் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புக்கள், ஊடக சுதந்திரம், சிறுபான்மை இனங்களின் தீர்வு எவ்வாறு உள்நாட்டு அரசியலில் செல்வாக்குச் செலுத்துகின்றது போன்றன தொடர்பாக மனித உரிமை வல்லுனர்கள் ஆய்வு செய்யவேண்டும். மிகச்சிறந்த மூலோபாயம் தொடர்பாக ஆராய்ச்சி செய்பவர்கள் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிராந்திய அதிகாரம் சார் போட்டியில் சிறிலங்கா எவ்வாறு முதன்மை இடத்தில் உள்ளது என்பதை ஆராய்ந்தறிய முடியும். இந்நிலையில் கடந்த வியாழனன்று முடிவடைந்த தேர்தலானது ஜனநாயக மாற்றம் தொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்கான வழிவகையை உருவாக்கியுள்ளது.

செய்தி வழிமூலம் : By Kate Cronin-Furman – www.washingtonpost.com

மொழியாக்கம் : நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *